கல்வி உளவியலில் சாதித்த உளவியலாளர் எட்வர்ட்!

 











இவான் பாவ்லோவ் பற்றிய நாய்கள் ஆராய்ச்சி பற்றி பேசியிருந்தோம். அவர் ஆராய்ச்சி செய்தால் பிறர் என்ன சும்மா உட்கார்ந்திருப்பார்களா?


இவான் ரஷ்யாவில் முழு முனைப்பாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எட்வர்ட் தோர்ன்டைக் அப்போதுதான் விலங்குகளின் குணங்கள், இயல்புகள் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியிருந்தார். அமெரிக்காவில் முனைவர் படிப்பிற்காக ஆராய்ச்சியை செய்யவேண்டியிருந்தது. குணநலன் ஆராய்ச்சியாளர் என்ற பெயரை, அறிமுகமாகும் காலத்திற்கு முன்னரே சம்பாதித்தவர். 1890ஆம் ஆண்டு தோர்ன்டைக், படித்து பட்டம் பெறும்போது அறிவியல் முறையிலான உளவியல் என்பது பல்கலைக்கழகங்களில் மெல்ல புகழ்பெற்று வந்தது. இந்த புதிய துறை எட்வர்டை கவர்ந்து இழுத்தது. 


ஆனால் அப்போது எதை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வது என அவருக்குத் தெரியவில்லை. பிறகுதான் எட்வர்டின் கவனம் விலங்குகள், அதன் புத்திசாலித்தனம் மீது திரும்பியது. ஆய்வகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் விலங்குகளை சோதிப்பது என முடிவெடுத்தார். இந்த வகையில் எட்வர்ட் செய்த சோதனைகளால், குணநலன் உளவியலில் அடிப்படையான விஷயங்களை உருவாக்கியவராக கருதப்பட்டு போற்றப்படுகிறார். 


ஆய்வகத்தில் கோழிக்குஞ்சுகளை வளர்த்து அதற்கு சோளத்தை உணவாக போட்டு முதல் பரிசோதனையை செய்தார். பிறகு குறிப்பிட்ட சூழ்நிலையை உருவாக்கி அதில் எப்படி விலங்குகள் செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றார். இதற்கு பூனைகளைப் பயன்படுத்தினார். அவற்றை பசியோடு இருக்க வைத்து குழப்பமான அமைப்பு கொண்ட பெட்டிக்குள் விட்டார். அதில் ஒரு குறிப்பிட்ட கருவி அல்லது பட்டனை அழுத்தினால் வெளியே செல்வதற்கான கதவு திறக்கும். திறந்துவிட்டால் பசிக்கு உணவு கிடைக்கும். கதவைத் திறக்கும் பட்டனைத் தேட பூனைக்கு எந்தளவு நேரம் பிடிக்கிறது என்பதே அது கற்றுக்கொள்ளும் நேரம் என கணக்கிட்டுக்கொண்டார். சோதனை திரும்பத் திரும்ப நடைபெற்றது. 


பூனை நாம் நினைப்பது போல முட்டாளாக நடந்துகொள்ளவில்லை. பட்டனைத் தேடி முயன்று தோற்றுப்போன முயற்சியில் இருந்து பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டது. எனவே அடுத்தடுத்த முறைகளில் தவறுகள் குறைந்தன. வேகமாக கதவைத் திறப்பதற்கான விஷயங்களைப் புரிந்துகொண்டன. விளைவு விதி என எட்வர்ட் இதைக்கூறினார். அதாவது கதவைத் திறந்தால் உணவு கிடைக்கும். தவறான பட்டனை அழுத்தினால் கதவு திறக்காது. உணவும் கிடைக்காது. இதன் அடிப்படையில் விலங்குகள் செய்த தவறுகள் மெல்ல குறைந்துகொண்டே வந்தன. ஊக்கமூட்டுதல், எதிர்வினை என்பது கற்றலில் முக்கியமாக உள்ளது. இவை இணைந்து மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பயன் தரும் செயல்கள், பயன் தராத செயல்கள் என இரண்டுமே மூளையில் பதிவாகின்றன. இவற்றின் படியே விலங்குகள் தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கின்றன. எட்வர்டின் கருத்தை பி எஃப் ஸ்கின்னர் பின்பற்றினார். ஆனால், ஜான் பி வாட்சன் அதை புறக்கணித்தார். 


மூளையில் ஏற்படும் தாக்கம் பலம், பலவீனம் என இரண்டு வகையாக உருவாகிறது. இதற்கு காரணம் ஒருவர் எடுக்கும் முடிவால் ஏற்படும் தாக்கம் மகிழ்ச்சி தருகிறதா, வருத்தம் தருகிறதா என்பதைப் பொறுத்தது. இதைப்பற்றி எட்வர்ட் 1911ஆம் ஆண்டு அனிமல் இன்டலிஜென்ஸ் என்ற நூலையே எழுதினார். எழுதிய காலகட்டத்தில் இந்த நூல் நன்றாக விற்றது. அந்த காலத்தில் விலங்குகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் வெளிவரவில்லை. ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது குண இயல்புகள்தான் என்றாலும் அவர் அறிவத்திறனைப் பற்றி மட்டுமே ஆராய நினைத்தார். 


அன்றைய காலத்தில் விலங்குகளின் நல்லவை அல்லவை ஆகியவற்றை அறிய ஆராய்ந்து சொல்ல ஆய்வாளர்கள் இல்லை. விலங்குகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், முட்டாள்தனமாக செயல்படவும் வாய்ப்புள்ளதுதானே அதைத்தான் எட்வர்ட் தனது கருத்தமாக முன்வைத்தார். குறிப்பிட்ட பெட்டியில் வைத்து விலங்குகளை குறிப்பிட்ட பட்டனை அழுத்த வைப்பது நிர்பந்தம். அதை செய்யும்போது அவை கதவை திறப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கிறது. அதன் வழியாக அதற்கு பரிசாக உணவு கிடைக்கிறது. ஆனால் உண்மையில் விலங்குகளுக்கு கதவைத் திறக்க கைப்பிடி உதவுகிறது என்பதை இணைத்துப் பார்க்க தெரியவில்லை என்று கூறினார். 


விலங்குகள் பற்றி ஆய்வு செய்தபிறகு மனிதர்களின் அறிவு பற்றியும் அறிய எட்வர்ட் முயன்றார். ஒர விலங்கு புத்திசாலித்தனமாக இருந்தால் அதன் மூளையில் நரம்பு ரீதியான தொடர்புகள் வலிமையாக இருக்கின்றன என்று அர்த்தம் என கூறினார். இதில் மரபணு மட்டும் இல்லை அனுபவங்களும் உண்டு. 


மனிதர்களின் அறிவை அளவிட சிஏவிடி முறையைக் கையாண்டார். வயது கற்பதில் ஏற்படும் தாக்கத்தை பற்றி ஆராய்ந்தார். எட்வர்ட் செய்த ஆராய்ச்சி ஒருவகையில் கல்வி உளவியல் தொடர்பானது. 


எட்வர்ட் தோர்ன்டைக் 


அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள வில்லியம்ஸ்பர்க்கில் பிறந்தார். 1895ஆம் ஆண்டு வெஸ்லியன் பல்கலையில் மருத்துவப் படிப்பு முடித்தார். வில்லியம்ஸ் ஜேம்ஸ் வழிகாட்டுதலில் ஹார்வர்ட் பல்கலையில் உளவியல் படிக்கத் தொடங்கினார். 1898ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலையில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 


முதலில் கல்வி உளவியல் பாடத்தை ஓஹியோவில் உள்ள பெண்கள் கல்லூரியில் கற்றுக்கொடுத்தார். அங்கு ஓராண்டு பணிபுரிந்தபிறகு திரும்பி வந்து கொலம்பியா பல்கலையில் ஓய்வு பெறும் வரை பணிபுரிந்தார். 1912ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல் சங்கத்தில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூயார்க்கின் மான்ட்ரோஸில் எழுபத்து நான்கு வயது வரைக்கும் படித்தும், எழுதிக்கொண்டும், ஆய்வு செய்துகொண்டிருந்தும் இருந்துவிட்டு காலமானார். 


முக்கிய படைப்புகள் 


1905 the elements of psychology

1910 the contribution of psychology to education

1911 animal intelligence

1927 the measurements of intelligence


பிக்சாபே








 











கருத்துகள்