தண்டனை கொடுப்பதால் குழந்தைகளின் குணங்களை மாற்றிவிட முடியாது - பி எஃப் ஸ்கின்னர்

 











உளவியலாளர்கள் வாட்சன், பாவ்லோவ் ஆகியோரது ஆய்வுகளை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டவர் பி எப் ஸ்கின்னர். குணநலன் ஆய்வுத்துறையில் முக்கியமான ஆய்வாளர். முன்னோடிகளின் ஆய்வுகளை மேலும் ஆழமாக்கிய பெருமைக்குரியவர். தனது ஆராய்ச்சி பற்றி புகழ்ந்து பேசி தன்னை புகழ் வெளிச்சத்தில் வைத்திருக்க முயன்றார். ரேடிகல் பிஹேவியரிசம் என்ற கொள்கையை உருவாக்கிய ஆய்வாளர். தொடக்கத்தில் கொள்கை பற்றி ஆர்வம் கொண்டு அதை எழுதவே நினைத்தார். ஆனால் பிறகுதான் ஆய்வுகள் பக்கம் ஆர்வம் கனிந்தது. 


1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தார். நோக்கம் எழுத்தாளர் ஆவதுதான். ஆனால் படிப்பை முடித்தபோது எழுத்தாளர் ஆவதன் மேல் ஆர்வம் முழுக்க வற்றிவிட்டது. இவான் பாவ்லோவ், ஜான் பி வாட்சன் ஆகிய உளவியல் ஆய்வாளர்களின் படைப்புகளை படைத்து அவர்களை முன்மாதிரிகளாக கொண்டார். 1931ஆம் ஆண்டு ஹார்வர்டில் உளவியல் படிப்பில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1936ஆம் ஆண்டு மின்னசோட்டா பல்கலையில் பாடம் நடத்த தொடங்கினார். பிறகு 1946-47 ஆண்டுகளில் இந்தியா பல்கலையில் உளவியல் துறையை நிர்வாகம் செய்தார். 1948ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1980ஆம் ஆண்டில் லுக்குமியா புற்றுநோய் கண்டறியப்பட்டது. தனது பல்கலைக்கழக வகுப்பின் கடைசி பாடத்தை நடத்திவிட்டே இறந்தார். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று காலமானார். 


எலிகளை வைத்து சோதனை செய்வதற்கென தனி பெட்டிகளை செய்தார். இதை ஸ்கின்னர் பெட்டி என்று அழைத்தார். இந்த பெட்டியில் ஒரு கம்பி இருந்தது. அதை எலிகள் அழுத்தினால் அருகில் உள்ள குழாயில் இருந்து உணவு விழுந்தது. எதிர்பாராமல் அழுத்தி உணவு கிடைத்ததால் எலிகள் மெல்ல உணவுக்காக கம்பியை அழுத்த தொடங்கின. வெளிப்புற சூழல் ஒருவரை எப்படி பாதிக்கிறது, குணத்தை மாற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள இச்சோதனையை ஸ்கின்னர் செய்தார். இப்போது உணவு கிடைப்பது எப்படி என எலிகள் அறிந்துவிட்டன. எனவே, முன்னர் போல அல்லாமல் கம்பியை உணவுக்கென அழுத்த தொடங்கின. உணவைப் பெற்றன. 


இதில் ஸ்கின்னர் இன்னொரு மாறுதலை செய்தார். கம்பியில் கிடைக்கும் உணவை குறைத்தார். அடிபம்பில் பலமுறை பிஸ்டனை அழுத்தினால் ஒரு துளி நீ்ர் வந்து விழுகிறதே அதுபோல பலமுறை கம்பியை அழுத்தினால்தான் உணவு கிடைத்தது. எலிகள் இந்த சூழ்நிலைக்கும் விரைவில் பழகிவிட்டன. உணவை பெற்று உண்ணத் தொடங்கின. இது நேர்மறையான செயல், விளைவு எனலாம். இதில் எதிர்மறையான இயல்பும் உண்டு. அதையும் ஸ்கின்னர் சோதித்தார். தனது பெட்டியில் இந்தமுறை கம்பி ஒன்றை பொருத்தி அதில் சிறிய அளவிலான மின்சாரத்தை செலுத்தினார். இதை தொட்ட எலிகள் மின் அதிர்ச்சியால் நிலைகுலைந்து பயந்து அலறின. 


1890ஆம் ஆண்டு, வில்லியம் ஜேம்ஸ் பிரின்சிபல் ஆஃப் சைக்காலஜி என்ற நூலில் மின்சார சோதனை பற்றி கூறியிருக்கிறார். அதாவது, சிறுவயதில் குழந்தை ஒன்று நாயால் கடிபட்டால் அந்த பயம் போக பல்லாண்டுகள் ஆகும். பெரியவர்கள் ஆனால் கூட நாயை கண்டால் அன்பு வராது. வெறுப்பையே பயத்தையே காட்டுவார்கள் என எழுதியிருந்தார்.


வாழ்க்கையில் நேர்மறை, எதிர்மறை என இரண்டு விஷயங்களும் முக்கியம்தான். ஒரு சிறுவன் பேசும்போது கழுத்தை வெட்டி இழுத்து பேசுகிறான்.அப்படி பேசக்கூடாது என பெற்றோர் கண்டிக்கிறார்கள். அடித்து உதைக்கிறார்கள். இதனால் அவன் பெரியவர்கள் சூழ இருக்கும்போது அமைதியாக இருக்கிறான். தனியாக இருக்கும்போது தனக்கு பிடித்தது போல இருக்கிறான். குழந்தைகளை தண்டனை கொடுத்து மாற்றிவிட முடியாது என ஸ்கின்னர் நம்பினார். 


கருத்துகள்