சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..
ஜேபுதொங்கா
சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா
பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.
தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.
சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊனமான தம்பி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கான சோறு சிட்டியின் பிக்பாக்கெட்டால்தான் வருகிறது. படம் வேகம் பிடித்து கதையின் போக்கில் செல்லவே மாட்டேன்கிறது. சிட்டிபாபு தனது காதலி, சிபிஐ அதிகாரி ஶ்ரீஜா ஆகியோரோடு பாட்டு பாடி நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். அதுவும் சிட்டிபாபு, கையில்லாத பனியனோடுதான் படமநெடுக வருகிறார். அந்த உடையோடு அவரால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள் கூட போக முடிகிறது ஆச்சரியம்தான்.
படத்தில் எதுவுமே சீரியசாக இல்லை. படத்தின் இறுதிக்காட்சியில் நாயகனின் அம்மாவின் முடியை வெட்டி பாப் கட்டிங் செய்கிறார்கள். ஊனமான தம்பியின் காலில் துப்பாக்கியால் சுட்டு நடனமாட வைக்கிறார்கள். தங்கையை தாவணியை உருவி யூனிபாரம் போட்ட தீவிரவாதப்படை வல்லுறவு செய்ய முயல்கிறது. இதெல்லாம் நாயகனை உசுப்பேற்ற. அவர் கட்டிபோட்டுள்ள மரத்தையே தனது பலத்தால் உடைத்தெறிந்து வந்து வில்லன்களுடன் சண்டை போடுகிறார். கெட்டவர்களை அழிக்கிறார். நாட்டை காக்கிறார். பிக்பாக்கெட் திருடியான காதலியை மணமுடிக்கிறார்.
படம் முடியும்போது உண்மையாகவே பெரும் மனநிறைவு ஏற்படுகிறது. படத்தில் கூறப்பட்ட கருத்திற்காக அல்ல. படம் இப்போதாவது முடிவுக்கு வந்ததே என்பதற்காக...
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக