சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

 













சிறந்த கண்டுபிடிப்புகள் 2023


ட்ரீ டேக் 

காட்டுத்தீயால் அழியும் மரங்களை காப்பாற்றுவதற்கான முயற்சி. இதில், ட்ரீ டேக் என்பது ஏஐ, சென்சாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை மரத்தில் பதித்து வைக்க வேண்டும். ஒரு மரத்தின் அடிப்படையான தன்மைகள், நீரின் அளவு, ஒளிச்சேர்க்கை ஆகியவற்றைக் கணிக்கிறது. தகவல்களை சேமிக்கிறது. மரங்கள் பேசும் மொழியை ட்ரீடேக் மொழிபெயர்க்கிறது என்கிறார் ட்ரீடேக் நிறுவனத்தின் இயக்குநர் கிரகாம் ஹைன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கும் கூட இதை முயன்று பார்க்கலாம். 


பியானோ

தரமான பியானோக்களைத் தயாரிக்கும் ரோலாண்ட் நிறுவனத்திற்கு வயது 50. எனவே, ஸ்பெஷலாக நான்கு பியானோக்களை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் இசை ஏற்கெனவே பதிவாகியிருக்கும். 360 டிகிரியில் இசையைக் கேட்கலாம். இதை வைத்து மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் கூட எடுக்கலாம். வின்டேஜ் தன்மையில் கவனம் ஈர்க்கும் பியானோ.


ஆர்க்  ப்ரௌசர் 

இணையம் நிறைய மாறிவிட்டது. மாறாதது இணைய உலாவிகள்தான். அதாவது ப்ரௌசர்கள். அதை மாற்றவே ஆர்க் வந்துள்ளது. இதை ஏற்கெனவே டெக் வல்லுநர்கள் பயன்படுத்திவிட்டு ஆகா, ஓகோ என புகழ்ந்து வருகிறார்கள். இதி்ல் தேவையில்லாத டேப்புகள் கிடையாது. வேண்டுமென்றால் திறந்துகொள்ளலாம். சற்று எளிமையானதாக சிக்கலின்றி பயன்படுத்துவதாக உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் தரும் ஏராளமான யூட்யூப் காணொலிகள் உண்டு. அதைப்பாருங்கள். நான் கூறியதன் அர்த்தம் புரியும். 


வேகமாக செல்லும் கார்


இரண்டு மில்லியன் என விலை சொல்லும் காரை பற்றி வேறு என்ன சொல்லுவார்கள்? ஆனால் இந்த காரின் பெரும்பகுதி த்ரீ டி பிரிண்டிங் மூலம் உருவாக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பதினைந்து முதல் நாற்பது சதவீதம் வரையிலான பொருட்கள் மிக இலகுவான தன்மை கொண்டவை என்பதால் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் பெட்ரோல் காலியானலும் வேகம் மட்டுப்படாது. இதை அதிகளவு தயாரித்து சந்தைக்கு கொண்டு வர இருக்கிறார்கள் வண்டியின் பெயர் சிங்கர் 21சி. 


கண்பார்வையற்றவர்களுக்கு விளையாட்டு


லீகோ விளையாட்டுப் பொருட்களை சீமான் வீட்டு பிள்ளைகள் அறிந்திருப்பார்கள். அதை வைத்து கார், லாரி, வீடு என பலதையும் உருவாக்கிப் பார்த்து ஐஐடியில் படித்து அமெரிக்கா, கனடாவில் செட்டில் ஆகியிருப்பார்கள். அந்தளவு அறிவுக்கூர்மையை சாமர்த்தியத்தை தரும் விளையாட்டு நிறுவனம் இது. இப்போது கண் பார்வையற்றவர்களுக்கும் லீகோ விளையாட்டுப் பொருட்களை தயாரித்து வருகிறார்கள். தொடக்கத்தில் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் லீகோ கிடைக்கும். பின்னாளில்தான் தனி கடைகளை திறந்து பொருட்களை விற்கத் தொடங்கினார்கள். இப்போது கண்பார்வையற்றோருக்கும் கூட கண் திறந்து பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். 


நியான் ஷேப் லைட்டுகள்


வீட்டில் பார்ட்டி கொண்டாட விரும்பும் ஆளா? உங்களுக்காகத்தான் ஜெனரில் எலக்ட்ரிக் நியான் ஷேப் லைட்டுகளை விற்கிறது. இதை வாங்கி மாட்டினால் இசையின் தாளத்திற்கு ஏற்பன ஒளியின் தன்மையும் மாறி மாறி தெரியும். சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழலாம். வீட்டை அலங்காரம் செய்ய அதிக காசு செலவழிக்க நினைப்பவர்கள் வாங்க வேண்டிய விளக்கு இது. 


நியூயார்க் நகர குப்பைத்தொட்டி

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் குப்பைத்தொட்டி முதலில் பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டது. 1930ஆம் ஆண்டு முதலாக பெரிய மாற்றம் ஏதுமின்றி இருந்தது. ஆனால் இப்போது குப்பைத்தொட்டி மேம்பட்ட வடிவத்தில் டிவி, மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றை உள்ளே போட முடியாதபடி மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக இதை கையாளும் ஊழியர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படாது. 


அற்புதமான மின் சைக்கிள் 


ஏசர் எபில். இந்த மின் சைக்கிளில் கியர் கிடையாது. நீங்கள் பெடலை மிதிக்கும் வேகத்தைப் பொறுத்து பேட்டரியிலுள்ள மின்சாரம் கூட குறைந்து பாயும். இதன் உடல் பாகத்தில் லேப்டாப், போன் சார்ஜ் செய்துகொள்ளலாம். பெடலை மிதித்தால் பேண்டில் க்ரீஸ் ஆகாது. கார்பன் பெல்டை பயன்படுத்துகிறார்கள். சைக்கிளை திருடினால் அதைக் கண்டுபிடிக்க சென்சார் உண்டு. சைக்கிளை நிறுத்திவிட்டு விலகி சென்றாலே சைக்கிள் தானியங்கியாக பூட்டிக்கொள்கிறது. சைக்கிளை எப்படி அனுபவித்து ஓட்டுவது என்பதை மட்டுமே யோசியுங்கள். வாழ்க்கை ஸ்மார்ட்டாக தோன்றும். 


மேட் ராபிட் டாட்டூ ரிப்பேர் பேட்ச் 


உடல் முழுக்க டாட்டூ குத்த நினைப்பவர்கள் உண்டு. ஆனால் வலி இருக்கிறது. நோய்த்தொற்று இருக்கிறது என தவிப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். டாட்டூவை குத்தி பெட்ரோலியம் ஜெல்லியை வைத்து தவிக்க வேண்டாம். அதற்கு பதிலாக மேட் ராபிட்  ரிப்பேர் பேட்சை வைத்து ஒற்றி எடுத்தால் போதும். டாட்டூ ஈரப்பதமாக இருக்கும். வலி குறையும். நோய்த்தொற்று கூட ஏற்படாது. 


ஆடியோஷேக் 


தேவா, வித்யாசாகரின் பாடல்களை எடுத்து சூப்பர் ஸ்டார்களுக்கு பயன்படுத்தி அதை அவர்களுடைய பாடல்களாக சிலர் மாற்றுகிறார்களோ அதற்கு உதவும் ஏஐ நிறுவனம் இது. ஒரு இசையமைப்பாளரின் பாடலில் உள்ள இசைக்கருவிகளின் ஒலிகளை மட்டும் ஏஐ மூலம் தனியாக பிரித்து கொடுக்கிறது ஆடியோஷேக். இதனால் இசையமைப்பாளர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆடியோஷேக்கிற்கும் கூடத்தான். நமக்கு இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. 


சோனி எஃப்எக்ஸ்3


கைக்கு கிடைத்த கேமராவில் திரைப்படம் எடுப்பதை பலரும் யோசித்து வருகிறார்கள். சிலர் நல்ல கதையை எந்த கருவியில் எடுத்தால் என்ன என்று எடுக்கிறார்கள். இந்த வகையில் சோனியின் 4 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள  எஃப்எக்ஸ்3 அருமையாக ஒளியை பயன்படுத்தி புகைப்படம் வீடியோக்களை எடுக்கிறது. இதைப் பயன்படுத்தி இயக்குநர் காரெத் எட்வர்ட்ஸ் ரோக் ஒன்  - எ ஸ்டார்வார்ஸ் ஸ்டோரி என்ற முழுநீள படத்தையே எடுத்துவிட்டார். கூடுதல் லைட்டிங் இல்லாமல் படம் எடுக்கும் வசதி இந்த கேமராவில் உண்டு. நிலா வெளிச்சத்தில் கூட படம் எடுக்கலாம் என காரெத் சொல்லுகிறார். 


பீட்டா பயோனிக்ஸ் ஐலெட் 

கிரடிட் கார்ட் அளவில் உள்ள அட்டை. அதில் இன்சுலின் மருந்து உள்ளது. நீரிழிவு நோயாளிகள் உடலில் பொருத்தினால் போதும். ஒருவருக்கு தேவையான டோஸில் மருந்து உடலில் செலுத்தப்பட்டுவிடும். பீட்டா பயோனிக்ஸ் நிறுவனர் எட் டாமியானோ தனது நீரிழிவு வந்த மகனுக்காக யோசித்து இருபது ஆண்டு உழைப்பில் கண்டறிந்துள்ள படைப்பு இது. ஐலெட் ஒருவரின் உடலில் உள்ள சர்க்கரை அளவை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணித்தபடியே உள்ளது. அமெரிக்காவில் இதை பயன்படுத்த அனுமதி கிடைத்துவிட்டது. 


ஆப்பிள் விஷன் புரோ

ஆப்பிள் நேசர்களே இதைப்பற்றி விவரித்து ஏராளமாக எழுதிவிட்டார்கள். நான் இதைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது? சில அம்சங்களை மட்டுமே கூறுகிறேன். ஆறு மைக்குகள், ஐந்து சென்சார்கள், மைக்ரோ ஓஎல்இடி, ஆப்பிளின் ஆர்1சிப் இருக்கிறது. உடல்மொழி, கண்கள், குரல் ஆகியவற்றை வைத்து இதை இயக்கலாம். இதெல்லாம் தாண்டி ஆப்கள் நிறைய உள்ளன. ஆப்பிளின் தயாரிப்பு தரமாக இருக்கும். 


டைம் வார இதழ்



கருத்துகள்