கள்ளக்கடத்தல் செய்யும் நாயகன் திருந்தி வாழ நினைக்கும்போது ஏற்படும் விளைவுகள்!

 











உள்ளத்தில் நல்ல உள்ளம் 


விஜயகாந்த், ராதா, ராதாரவி, வினுசக்ரவர்த்தி


இயக்கம் மணிவண்ணன்


அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து நைனாவின் உதவியால் கள்ளக்கடத்தல் தொழிலுக்குள் நுழையும் ஒருவன், காதல்வயப்பட்டு தனது தொழிலை கைவிட முயன்றால் என்ன நடக்கும் என்பதே கதை. 


சுபமாக முடியும் கதை கிடையாது. அதை முதலிலேயே கூறிவிடுகிறேன். படத்தில் அந்தமோசமான முடிவுக்கு நைனா பாத்திரம் மூலம் ஏற்கெனவே நம்மை தயார்படுத்திவிடுகிறார்கள். அதனால் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை, மைக்கேல்ராஜ் என்பவர், கடலை ஒட்டியுள்ள ஊரில் கள்ளக்கடத்தல் செய்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கிறார். இதனால் அவர் செய்வதை காவல்துறை கண்டுகொள்வதில்லை. அங்கு புதிதாக வரும் இன்ஸ்பெக்டர் ஷீலா இதை தடுக்க நினைக்கிறார். இவரை மைக்கேல்ராஜ் பெரிதாக தடுக்கநினைப்பதில்லை. கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். உண்மையில் அவர் யார் என்பது சற்று சுவாரசியமாக உள்ளது. 


நைனாவிடம் தொழில் கற்றவரான மைக்கேல் ராஜ், தான்செய்யும் தொழிலை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.இறுதியாக அவரோடு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த, இப்போதைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள ஷீலா சொல்லித்தான் தனது தொழிலை விட்டு சொத்துகளை கள்ளக்கடத்தல் செய்யும் மீனவர்களுக்கு பிரித்துக்கொடுக்கிறார். ஆனால் இதெல்லாம் தொழிலை தொடரவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும், மைக்கேலின் கூட்டாளிக்கும் பிடிப்பதில்லை. இதனால் மைக்கேலை, ஷீலாவை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதன்படியே செய்கிறார்கள். மைக்கேல், தனது கூட்டாளிகளை கொன்றுவிட்டு உயிர் துறக்கிறார்.ஆனால் அது சற்று வேடிக்கையான காட்சி. 


முதுகில் நான்கு தோட்டாக்கள், மார்பில் நான்கு தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் மைக்கேல் ராஜ், வாளை உருவி தனது நண்பனைக் கொல்கிறார். பிறகு சுடப்பட்ட காதலியை தூக்கிக்கொண்டு சர்ச்சுக்கு வருகிறார். காதலியின் விரலில் மோதிரம் போட்டு மணம் செய்துகொண்டு இருவருமே செட்டாக இறக்கிறார்கள். நம்பவே முடியாத காட்சி. 


மைக்கேல், ஷீலா இருவருமே கொல்லப்பட்டு கள்ளக்கடத்தலை மைக்கேலின் நண்பர் நடத்துவதாக இருந்தால் கூட சரிதான். இல்லை அனைவரையும் கொன்றுவிட்டு தான் செய்த தவறான செயல்களுக்கு தண்டனையாக இறந்துவிடுகிறார் நாயகன் என்றால் கூட மோசமில்லைதான். இறுதிப்பகுதி படுசொதப்பல். 


ஷீலா பாத்திரமும் சரியானபடி அமையவில்லை. அனாதை ஆசிரமத்தில் நண்பர்களாக இருந்தவர்கள்தான் மைக்கேல் ராஜூவும், ஷீலாவும். ஆனால் அதற்கான எந்த அடையாளங்களும் கதையில் இருப்பதில்லை. ஷீலா திடீரென காதலிப்பதாக கூறுவதும் அதை மைக்கேல் நம்புவதும் பார்க்கவே படு செயற்கையாக உள்ளது. இறுதியாக ஷீலாவை காவல்துறை செட் செய்த ஆட்கள் வல்லுறவு செய்து கொல்ல முயலும்போது அவரை மைக்கேல்ராஜ் காப்பாற்றுகிறார். உடலில் ஏற்பட்ட சில காயங்களை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்ய பணமும் கொடுக்கிறார். இதைக்கேள்விப்பட்டு அவருக்கு மைக்கேல் மீது காதல் வருகிறது. உயிர் போனால் சரி, மானம் போனால் என அழுத்தி கூறப்படுகிறது. எதற்கு இந்த டிராமா? எப்படி இருந்தாலும் மைக்கேல் ராஜ் செய்த கள்ளக்கடத்தல் தவறானது. அதற்கான தண்டனை நீதிமன்றத்தில் வழங்கப்படவேண்டியது அவசியம். 


ஷீலாவின் பாத்திரத்தின் மனமாற்றமும், காதலும் பாடல்காட்சிகளுக்கு மட்டுமே உதவுகிறது. கதைக்கோ, காட்சி மேம்பாட்டுக்கோ அல்ல. 


எதிர்மறையான பாத்திரத்தில் விஜயகாந்த் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்து, தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வாழும் நைனாவாக ஜனகராஜ் பாத்திரம் மட்டுமே படத்தில் மனதைக் கவருவதாக உள்ளது. 

படத்தில் உள்ள பாத்திரங்களில் உள்ளத்தில் நல்ல உள்ளம் எதுவென தேட வேண்டியதிருக்கிறது. அதில் ஜனகராஜ் மட்டுமே கண்டறியப்படுகிறார். ஆனால் அவரையும் வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அதே விதி நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்படுகிறது. 

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்