தனது காதலியைக் கொன்ற தேசவிரோத கூட்டத்தை ஒழிக்கும் சுமார் போலீஸ் - சூப்பர் போலீஸ் - வெங்கடேஷ், நக்மா

 











சூப்பர் போலீஸ் 


வெங்கடேஷ், சௌந்தர்யா, நக்மா


தேசவிரோதிகளை சப் இன்ஸ்பெக்டர் எப்படி பிடிக்கிறார், தனது காதலி பாரதி கொலைக்கு காரணமான சக்திகளை அழிப்பது எப்படி என கதை சொல்லுகிறது. 


அப்பண்ணா என்ற தொழிலதிபர் இருக்கிறார். அவர் உள்துறை அமைச்சரோடு சேர்ந்து பாக் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வேலைகளை செய்துகொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் ஏழை ஒருவரை காதலிக்கிறாள். இதற்கு உதவி செய்வதன் வழியாக வெங்கடேஷ், அப்பண்ணாவின் உலகில் உள்ளே வருகிறார். அப்பண்ணா, வெங்கடேஷ் தங்கியுள்ள வீட்டு உரிமையாளரான பத்திரிகையாளரை மதுபான புட்டியில் குண்டு வைத்து கொல்கிறார். அது வெங்கடேஷூக்கு வைத்ததுதான். ஆனால் தவறி பத்திரிகையாளர் இறந்துபோகிறார். இதனால் கோபம் கொள்ளும் வெங்கடேஷ் அப்பண்ணாவைக் கொல்ல சபதம் எடுக்கிறார். ஆனால் அதிகார சக்திகளுடன் மோதி தனது வேலையை இழக்கிறார். அப்பண்ணா நாயகனது காலை முறித்துப்போடுகிறார். இதிலிருந்து மீண்டு வரும்போது தனது முன்னாள் காதலி பாரதி காரில் அடிபட்டு இறந்துபோனதற்கு அப்பண்ணா காரணம் என அறிகிறார். பிறகு எப்படி பழிவாங்கினார் என்பதே கதை. 


படத்தில் நாயகன் இறந்துபோவதே யதார்த்த படமாக இருக்கும். ஆனால் நாயக துதி வணிக சினிமா அல்லவா? எனவே நாயகன் கடைசிவரையில் உயிரோடு இருக்கிறார். படத்திற்கு இசை ஏ ஆர் ரஹ்மான். சூப்பர் போலீஸ் டைட்டிலுக்கான பாடலே கவனம் கவர்கிறது. பாடல்களை மோசமில்லை. புதுமையாக கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் அதற்காகவே இத்தனை பாடல்கள் அவசியமா?  பாடல்கள் ரஹ்மானுக்காக அல்ல நக்மாவுக்காக. எனவே தாராளமாக பார்க்கலாம். 


அப்பண்ணா பாத்திரம் முழுக்க விளம்பரங்களை பார்த்து வளர்ந்த வில்லன் போல நடித்திருக்கிறார். அதை நகைச்சுவையாக பயன்படுத்தலாம் என இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால் அது நகைச்சுவையாக இல்லை. அப்பண்ணாவின் ஆட்களுடன் மோதும் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை தாராளமாக பயன்படுத்தினால் சண்டையில் ஆட்களேனும் குறைவார்களே என்ற அறிவே இல்லாமல் வரும் வில்லன்களை அடித்துக்கொண்டே இருக்கிறார். பார்க்கும் நமக்கு களைப்பாக இருக்கிறது. ரஹ்மான் வேறு சண்டை எப்படா முடியும் என பிஜிஎம்மை மாற்றி போட்டு பார்க்கிறார். ஆனால் வெங்கடேஷோ, சூப்பர் போலீஸ் தீம் வராதவரை சண்டையை நிறுத்தமாட்டேன்கிறார். 


நக்மா. ராமாநாயுடு ஸ்டூடியோவில் உடைகளை திருடி விற்கும் ஒருவிதமாக நல்ல திருடி. திருடிக் கிடைத்த பணத்தில் பாதிப்பணத்தை தனது ஹாஸ்டல் தோழிகளுக்கு பயன்படுத்துகிறார். பாடல்களில் வந்து நன்றாக நடனம் ஆடுகிறார். அவர் பாத்திரத்திற்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை. 


அதிலும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியெல்லாம் ஏதோ கார்டூன் படம் போல எடுத்து வைத்திருக்கிறார்கள். சுடத்தெரியாதவன் தாறுமாறாக சுட்டால் கூட நாயகனை சுட்டுவிடலாம். ஆனால் தோட்டாக்கள் அவரைக் கடந்து பின்னணியில் பலூன்களை துளைக்கிறது. வியப்போ வியப்பு. 


ஆனாலும் கடைசி வரை மனம் தளராத ரஹ்மான் சூப்பர் போலீஸ் என தனது பிஜிஎம் மூலம் படத்தை தேற்றி உசுப்ப முயல்கிறார். ஆனால் படம் ஏற்கெனவே செத்து விழுந்துவிட்டது. 


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்