ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி
நர்கேஸ் மொகம்மதி |
நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா?
ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.
ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது?
எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம் என்பது இன்று போராட்ட இயக்கமாகவே மாறிவிட்டது.
சிறைக்குள் அடைக்கப்பட்டபோது எப்படி நிலைமையை சமாளித்தனர்?
2012ஆம் ஆண்டு அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டேன். என்னுடன் கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பவர்கள் என பல்வேறு குற்றங்கள் செய்த 800 பேர் இருந்தனர். வெளியில் இருப்பவர்களுக்கு நாங்கள் ஒன்றாக இணைந்திருக்க முடியாது என்று தோன்றும். ஆனால் நிஜத்தில் சூழல் அப்படி இருக்கவில்லை. கருத்தியல், முரண்பாடுகள் என பல இருந்தாலும் நாங்கள் ஒன்றாக இணைந்து பழக முடிந்தது. வாழ முடிந்தது. அங்கு வாழ்க்கையே சிறைக்கம்பிகள், சுவர் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக இருந்தது.
நீங்கள் உங்கள் குடும்பத்திடம் பேசியிருக்கிறீர்களா?
எனது இரட்டைப் பிள்ளைகள் அலி, கியானா பிறந்த பிறகு மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டுவிட்டேன். எனது பிள்ளைகளின் உருவத்தை பார்க்க முடியாமல் குரலைக் கேட்க முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேதனையை வெளிப்படுத்துவது கடினம். சுதந்திரத்திற்காக, மனித உரிமைக்காக, பெண்களின் மீதான பாகுபாடற்ற தன்மை ஆகியவற்றுக்காக போரடியதே சிறைப்பட்டதற்கான முழு அர்த்தமாக உள்ளது. இதற்காகத்தான் வலியை, வேதனையைப் பொறுத்துக்கொண்டேன். இப்போதைக்கு எனது கனவு என்பது எனது பிள்ளைகளுடன் இணைவதே ஆகும்.
மாஹ்சா ஜினா அமினி என்பவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். இவரைப்போன்ற நிலைமைதான் ஆர்மிதா கெராவண்ட்டுக்கும் ஏற்பட்டதா?
வலியும், வேதனையும் நிறைந்த கொடூரமான சம்பவத்தை அரசு தரப்பு போலியாக மாற்றி, மக்களை பொய்சொல்லி திசைமாற்றி ஏமாற்ற நினைக்கிறது. உண்மையை முழுமையாக புதைக்கும் முயற்சியில், எதிர்தரப்பு மற்றும் போராட்டக்காரர்களை அழித்து முடக்க நினைக்கிறது.
நம்பிக்கைக்கான ஒளிக்கீற்று தென்படுகிறதா?
சர்வாதிகார நாட்டில் பெண்களுக்கு கட்டாய ஹிஜாப் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதுதான் எங்கள் போராட்டம். அந்த போராட்டமே இன்று இயக்கமாக மாறியுள்ளது. பெண்கள் தங்களுக்கான உரிமையைப் பெறமுடியாதபோது ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவைக்காக போராடுவது கடினம். வெற்றி என்பது எளிதானது அல்ல. ஆனால் அதை உறுதியாக அடையும் நம்பிக்கை மனதில் இருக்கிறது. அதுவே அரசை எதிர்த்து போராடவும், அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் உதவுகிறது.
ஆஞ்சலினா ஜோலி
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக