வலியுடன் அறம் பேசும் உண்மை மனிதர்களின் கதை! அறம் - ஜெயமோகன்- வம்சி
அறம்
ஜெயமோகன்
வம்சி பதிப்பகம்
நூலில் மொத்தம்
பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான். வாசிப்பவர்களுக்கு அவை சிறப்பான அனுபவங்களை தருகின்றன.
நான் இங்கு குறிப்பிடவிருப்பது சில கதைகளை மட்டுமே.
கோட்டி சிறுகதை, இன்றைய நவீன அரசியலை கேலி செய்யும் காந்தியவாதியின் கதையைக் கூறுகிறது. குறைகளை சொன்னாலும் கூட அனைத்து
ஊர்களிலும் இப்படி தன் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்த மனிதர்கள் உண்டு. இவர்கள்
போன்றவர்களால்தான் ஊரிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்படும். கதையில் வரும் பூமேடை
அப்படிப்பட்டவர். அவர் நோட்டீஸ் ஒட்டும் இடமும், ஏன் ஒட்டுகிறீர்கள் என கேட்கும்போது
சொல்லும் பதிலும் அட்டகாசமாக அவரது மனதை வெளிக்காட்டுகிறது. பிறரது சந்தர்ப்பவாதங்களை அனைத்து இடங்களிலும் உரித்துக்காட்டும்
மனிதராக முகத்தை உள்ளபடியே காட்டும் மனிதராக பூமேடை இருக்கிறார். இதனால் அவரை கோட்டி
என ஊரே சற்று தள்ளி நின்று பார்க்கிறது. அவர் தலித் மக்களுக்கான தோட்டி வேலை பற்றி
ஆவேசமாக பேசும் காட்சி எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது.
பெண் பார்க்க
செல்லும் வழக்குரைஞரின் நிலையில்தான் நாம் பூமேடையை பார்க்கிறோம். எதிர்கொள்கிறோம்.
கோட்டி என ஏளனமாக கேள்விகளைக் கேட்கிறோம். இறுதியில் அவரை புரிந்துகொண்டு வழக்குரைஞர்
இறுதிக் காரியங்களை செய்வது கதைக்கு எத்தனைப் பொருத்தமானது.
நூறு நாற்காலிகள்,
வணங்கான் ஆகிய இரு கதைகளும் சாதி இழிவைப் பற்றி பேசுகின்றன. இதில் வணங்கான் சிறுகதை,
மார்ஷல் நேசமணி எப்படி சாதி இழிவை எதிர்கொண்டார். அவரது உதவியை வேண்டியவர்களுக்கு அவர்
உதவிய கதையாக உருவாகியுள்ளது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள் இக்கதையை படிக்கும்போது
மனமுருகி அழுவது நடக்கும். அப்படியான உணர்ச்சி கொந்தளிப்பான சம்பவங்கள் கதையில் நிறைந்துள்ளன.
இதில், நூறு
நாற்காலிகள் கதை, சாதி மேலாண்மை கொண்ட சமூகம், அந்த சமூகத்தில் அரசியலமைப்பு சட்டம்
மூலம் பதவிகளைப் பெற்ற ஒடுக்கப்பட்ட சாதி தன்னை எப்படி உணர்கிறது என்பதை விவரித்துள்ளார்
ஜெயமோகன். இதில் மாவட்ட ஆட்சியர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை அவரது மனைவி உட்பட
விவரிக்கும்போது எந்த நம்பிக்கையில் அவர் வாழ்கிறார் என்ற கேள்விதான் மனதில் எழுகிறது.
அரசு அமைப்பில் அவரை தேர்வு செய்தவரர்களில் ஒருவர் கூறியது போலவே நிறைய சவால்கள் உள்ளன.
பதவியில் இருந்தாலும் அதிகாரம் மேல்சாதி கொண்ட ஒருவரிடம் போய்விடுகிறது. வீட்டிலும்
அவரை வைத்து தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்ட மனைவியின் பேச்சுபடி கேட்டு நடக்கவேண்டியதிருக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் அம்மாவோ, உடல் உப்பி அரசு மருத்துவமனையில் யாரும் கவனிக்காதபடி ஓரிடத்தில்
கிடக்கிறார்.
உண்மையில்
இந்த கதையை மனம் சோராமல் படிப்பது கடினம்தான். அந்தளவு சோதனையான வலியான இயல்பைக் கதை
கொண்டிருக்கிறது. நாராயண குரு குலத்தில் குளிக்க வைத்து சோறு போடும்போது பையன் பதறி
எழும் சம்பவம் இதற்கு உதாரணம். ஆட்சியரின் அம்மா, பல தலைமுறைகளாக இரவில் வெளியே வந்து
அழுகல்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடி. பெண். அவன் உடையணிந்த மகனைப் பார்த்து
பேசுவது, உண்மையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பயந்து பீதியில் பேசுவது போலவே இருக்கிறது.
இந்த கதையில் வலியும் வேதனையும் மிக அதிகம்.
மத்துறு தயிர்,
குருவுக்கு சிஷ்யனுக்குமான உறவு, அதில் நேரும் பிரச்னைகளைப் பற்றியது. கதையைப் பற்றி
சொல்ல ஒரே ஒரு வசனம் போதும். அது ராஜபிளவை. வந்தா ஆளைக் கொண்டுட்டு போய்டும். பேராசிரியர்
பின்னாளில் தனது பெயர் சொல்லும்படி வருவான் என ராஜாங்கத்தை நினைக்கிறார். ஆனால் அவர் காதலில் விழுந்து அதையே தனது வாழ்க்கையில் நம்பிக்கையாக
நினைத்து குடிநோயாளியாகிப் போகிறார்.
ஒலைச்சிலுவை,
உலகம் யாவையும் என்ற இரு சிறுகதைகளும் ஒருமனிதன் தனக்குள் உலகத்தை, இறைவனை உணர்வதை
மையமாகக் கொண்டவை.
ஓலைச்சிலுவை
சிறுகதை, மனிதர்களோடு வாழும் இயேசு போன்ற மனிதராக சாமர்வெல்லை கண் முன் நிறுத்துகிறது.
நெய்யூரில் வாழும் சிறுவன் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முயல்வதாக கதை தொடங்குகிறது.
இங்கு மதமாற்றம் என்பது கல்வியை வழங்குவதாக, செல்வத்தை கொடுப்பதாக இருப்பதைவிட பசி,
பட்டினியிலிருந்து பெரும்பான்மையான மக்களை மீட்பதாக இருக்கிறது. இதை சிறுவனின் அம்மா குழந்தைகளுக்கு சோறிடும்போது
சொல்வது படிப்பவர்களுக்கு வறுமையில் உள்ளவர்களின்
நிலையை தெளிவாக்கும். கிறிஸ்தவ மதத்தில் இணைந்தாலும் அதை முழுமையாக உள்வாங்க முடியாத
வலியை சொல்லுவது கதையில் பிரமாதமாக வந்திருக்கிறது. இறுதியில் ஒலைச்சிலுவையாக இறைவன்
கைகொடுப்பது அந்தந்த ஆன்மாக்களுக்குத் தான் தெரியும். அது உண்மையில் நடந்ததா, இல்லையா
என்று.
உலகம் யாவையும்
கதையில் வரும் காரி டேவிஸ், லட்சியவாத தன்மை கொண்டவர். உண்மையில் இவரை வாதங்களை கேட்கும்
யாரும் எளிதாக ஏளனங்களை செய்யத்தொடங்குவார்கள். ஆனால் உண்மையில் அதைக் கடந்தால்தான்
அவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும். காரி டேவிஸ் தான் உரையாடுபவர்கள் அனைவரிடமும்
இந்த தன்மையை உருவாக்குகிறார். ஒரே உலகம்,
ஒரே நாடு என்ற கருத்தாக்கம் உண்மையில் விரிவான தன்மையில் பார்க்கும்போது ஆச்சரியப்படுத்துகிறது.
கதையில் ஓரிடத்தில் காரி டேவிஸ் தென் ஆப்பிரிக்காவில் ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
தனிமைச்சிறையில் இருக்கிறார். அப்போது அவர் தன்னை எப்படி பைத்தியம் பிடிப்பதிலிருந்து
காத்துக்கொண்டார் என்று கூறி போதம், அபோதம் பற்றி விவரிப்பது சிறப்பான இடம்.
சோற்றுக்கணக்கு
கதையை பலரும் சிறப்பாக உள்ளது என சொல்லிவிட்டார்கள். எனவே, இப்போது அதே இடத்தில் உள்ள
முக்தார் ஓட்டலில் போய் சாப்பிடுவது முக்கியமல்ல. கெத்தேல் சாகிப் தனது ஓட்டலை உண்டியல்
வைத்து ஏன் அப்படி நடத்தினார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏழ்மை மனதை எப்படி
குறுக்கிவிடுகிறது என கதையில் முக்கியமான கதைசொல்லிப் பாத்திரம் நினைத்துப் பார்க்கிறது.
அம்மாவின் கரத்தையும், கெத்தேல் சாகிப்பின் கரத்தையும். அப்பாத்திரத்திற்கு தெய்வத்தின்
கரமாக வயிற்றை குளிர்விக்கும் கரமாக கெத்தேல் சாகிப்பே தெரிகிறார். அவரின் புடைத்த
மயிரடர்ந்த கரங்கள். நீராகார உணவு என்றாலும் கூட அதை தின்ற கணக்கிற்கு அப்பாத்திரம்
எப்படி இறுதியாக கடன் தீர்க்கிறது என்பதே இறுதிப்பகுதி. அதில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை.
தொகுப்பில்
உள்ள பதிமூன்று கதைகளுமே உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நெருக்கமான மனிதர்களை, சந்தித்த
அவலங்களை, பாதிப்புகளை நினைவுபடுத்துகிறது.
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக