வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

 




 




இஸ்தான்புல் 

புர்கான் சென்மெஸ்

துருக்கி நாவல்

தமிழில் முகமது குட்டி

காலச்சுவடு

இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது.

நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான்.

நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வேதனையான சித்திரமாக கண்முன்னே விரிகிறது. இதில் நாவலின் முடிவும் கூட கதையில் போக்கிலேயே முடிவு என்று ஏதும் இல்லாமல் அப்படியே முடிகிறது. கேட்கும் துப்பாக்கிச்சத்தம் புரட்சிக்குழு சித்திரவதை செய்யும் நிலவறைச் சிறையைக் கைப்பற்றியதாக இருக்கலாம். அல்லது அந்த  முயற்சியில் தோற்றுப்போனதாகவும் இருக்கலாம்.

சர்வாதிகார அரசு மக்களை கண்காணித்து அவர்களை விமர்சிக்கும் அல்லது மனிதநேயப்படி செயல்படும் மனிதர்களை இயக்கங்களை ஒடுக்கி வருகிறது என்பதை கதையில் வரும் மனிதர்களின் இயல்பைப் புரிந்துகொண்டாலே அறியலாம். முகமது குட்டி மொழிபெயர்ப்பில் நிலவறை சிறையில் வரும் வியர்வை நாற்றம், ரத்தநெடி, சுவரில் எழுதியுள்ள எழுத்துகள் என அனைத்துமே வாசிப்பவரின் கண்முன்னே தோன்றுகிறது. இது அவரது சிறந்த மொழிபெயர்ப்புத் திறனுக்கு சான்று எனலாம்.

நாவலில் வரும் சித்திரவதைக் காட்சிகள் துல்லியமான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளதால் வாசிக்கும்போதே உள்ளுக்குள் மனம் துணுக்குற்று தடுமாறத் தொடங்குகிறது. சித்திரவதை, வேதனை, வலி அதற்குப் பிறகு பின்னோக்கி செல்லும் நினைவுகள் என்றுதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.  நாவலில் வரும் கொள்கை, கோட்பாடுகள் என அதன்  பின்னாலேயே சிலரின் கதைகளை பாத்திரங்கள் விவரிக்கின்றன. இடையிடையே வரும் விடுகதைகளும் அந்த வகையில் சிறப்பாக உள்ளன.

ரத்தத்தால் வரைந்த நகரின் வரைபடம்

கோமாளிமேடை டீம்

https://www.amazon.in/Literature-Fiction-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF/s?rh=n%3A1318157031%2Cp_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF

கருத்துகள்