குஸ்திபோடும் கிராம பெண் பப் பவுன்சராகி சாதிக்கும் கதை - பப்ளி பவுன்சர் -மதுர் பண்டார்கர்

 












பப்ளி பவுன்சர்

இந்தி

இயக்கம் மதுர் பண்டார்கர்

தயாரிப்பு ஜங்லீ பிக்சர்ஸ்

 

டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில்  நடைபெறும் கதை. அங்குள்ள  கிராமத்தில் குஸ்தி அதாவது மல்யுத்தம் செய்யும் இளைஞர்கள் அதிகம். இவர்கள் டெல்லிக்கு சென்று அங்குள்ள கிளப்பில் பாதுகாவலர்களாக – பவுன்சர்களாக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். இரவில் கிளப் பாதுகாப்பு வேலை. பகலில் வீட்டில் வேலை செய்வது உடற்பயிற்சி செய்வது என இருக்கிறார்கள். மல்யுத்தம் சொல்லித் தரும் பயிற்சியாளருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் பப்ளி. மல்யுத்தம் கற்று அவளும் ஆண்பிள்ளை போல திடமாக வளருகிறாள். படிப்பு வருவதில்லை. பத்தாவது தேர்ச்சி பெறமுடியாமல் நின்று, வீட்டு வேலைகளை செய்து வருகிறாள்.

இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மகன் விராஜைப் பார்த்ததும் காதல் பூக்கிறது. அவனைப் பார்க்கவேண்டுமெனில் டெல்லி செல்லவேண்டும். அதற்கு அவளுக்கு குக்கு என்ற பள்ளிக்கால நண்பன் உதவுகிறான். டெல்லி சென்று நவ நாகரீக இளைஞன் விராஜை கிராமத்து பெண் சந்தித்தாளா, காதலைச் சொன்னாளா என்பதுதான் மீதிக்கதை.

 பெண்களுக்கும் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் சாதிப்பார்கள் என்பதை இயக்குநர் மதுர் கூறியிருக்கிறார். படத்தில் முக்கியமான காட்சி என்பது பப்ளி, விராஜிடம் தனது காதலைச் சொல்லி மறுக்கப்பட்டு தன்னிலை உணரும் காட்சிதான். ஆங்கிலம் கற்கிறாள். நகரத்திற்கான நாசூக்கை பழகுகிறாள். சாப்பிட்டு முடித்து சத்தமாக ஏப்பம் விடுவதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வை தனியாக எழுத நூல்களை தோழியிடம் பெற்று வாசிக்கிறாள். இறுதியாக தன்னை மணம் செய்ய நினைக்கும் குக்குவிடம் தான் அவனை காதலிக்கவில்லை என்று உண்மையைக் கூறுகிறாள் பப்ளி. காதல் கிடைக்கவில்லை என்றாலும் குக்கு கடைசிவரை பப்ளியின் அனைத்து விஷயங்களிலும் துணையாக நிற்கிறான். இந்த பாத்திரத்தில் நடித்த நடிகர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் தமன்னா பாட்டியாவுக்கு நடிப்பைக் காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை முடிந்தளவு சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். படத்தின் தமிழ் டப்பிங்கும் மோசமில்லை. முடிந்தளவு நெல்லை வட்டார வழக்கை பயன்படுத்தி படத்தை பார்க்கும்படி செய்திருக்கிறார்கள்.

படத்தில் பார்வையாளர்களை கவருவது பப்ளிக்கும், அப்பாவுக்குமான பாசம். மகளை அவர் நம்புவது என அப்பா, மகள் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. சில இடங்களில் கண்கள் வழியாகவே அப்பா, மகளைப் புரிந்துகொள்ள முயல்கிறார்.    

பப்ளியின் கதையைப் பார்த்தால் கிராமத்து பெண் நகரத்திற்கு சென்று எப்படி அறிவை சம்பாதிக்கிறாள், வட்டமாக சப்பாத்தியை சுடுகிறாள், ஆங்கிலம் பேசுகிறாள் என்று சுருக்கமாக முடித்துவிடலாம். இதில் பப்ளி ஒருவருக்கு பிரச்னை என்றால் அதை தீர்க்க முயற்சிக்கிறாள். போராடுகிறாள். குறிப்பாக சௌரவ் தத்தா என்ற வசதியான மனிதருக்கு மாரடைப்பு ஏற்படும்போது பப்ளி உடனே அவரை காப்பாற்ற முயல்கிறாள். அதேபோல்தான், போதைப் பொருளை இளம்பெண்ணுக்கு கொடுத்து  அவளை வல்லுறவு செய்ய முயலும்போதும் கூட தன்னால் முடிந்தவரை அதை எதிர்த்து போராடுகிறாள். தனக்கென்ன என்று நினைக்காமல் பிறரைப் பாதுகாக்க போராடும் குணம் அவளை தனித்துவமான பெண்ணாக்குகிறது.

சாதனைப் பெண் பப்ளி

கோமாளிமேடை டீம்


கருத்துகள்