மகிந்திரா நிறுவனத்தை அடித்தளமிட்டு உருவாக்கிய இரண்டு சகோதரர்கள்!

 



இடமிருந்து வலம் - கே சி மகிந்திரா, ஜே சி மகிந்திரா, குலாம் முகமது




வீடு, தொழிற்சாலை என கட்டுமானங்களுக்கு அடித்தளம் சரியாக அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அதனை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கட்ட முடியும். அடித்தளம் என்பது கட்டிடம் எங்கு எழும்புகிறதோ அங்குள்ள மண், இயற்கைப்பேரழிவு ஆபத்துகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு அமைக்கின்றனர்.

ஒரு நிறுவனத்தை தொடங்குபவர் உயர்ந்த லட்சியத்திற்காக, வானுயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உருவாக்குகிறார். அடுத்து தலைமை பதவிக்கு வருபவர், நிறுவனரின் லட்சியத்தை மேம்படுத்துகிறார். விரிவுபடுத்துகிறார். இப்படி தலைமை  பதவிக்கு வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது. குடும்பம் என்பதை விட திறமையே முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டு  வேண்டுமெனில் வெளிநாடுளில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிறுவனங்களை அடையாளம்  கூறலாம். இந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது குடும்பத்தில் பெண் எடுத்தவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு தலைமுறைகளாக நிறுவனம் நிலைத்து நிற்க அர்ப்பணிப்பும், ஈடுபாடும் முக்கியம்.

அந்த வகையில் மகிந்திரா நிறுவனத்தை தொடங்கியவர்கள் மூன்று பேர். கே சி மகிந்திரா, ஜே சி மகிந்திரா, குலாம் முகமது.

குலாம் முகமது கணக்கு தணிக்கையாளராக செயல்பட்டவர். வணிகம் செய்வதற்காக மகிந்திரா சகோதரர்களுடன் இணைந்தார். ஆனால் பிரிவினை காலத்தின்போது, பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். எனவே, மகிந்திரா அண்ட் முகமது என்று இருந்த நிறுவனம் மகிந்திரா அண்ட் மகிந்திரா என பெயர் மாற்றம் கண்டது. தொடக்கத்தில் இந்த நிறுவனம் ஸ்டீல்களை வாங்கி விற்கும் நிறுவனமாகவே இருந்தது.

ஜே சி மகிந்திரா

1892ஆம் ஆண்டு  பஞ்சாப்பின் லூதியானாவில் ஜே சி மகிந்திரா பிறந்தார். இவருக்குப் பிறகு எட்டு குழந்தைகள் பிறந்தனர். இவருக்கு அடுத்து பிறந்தவர்தான் கே சி மகிந்திரா. இருவரும்  சேர்ந்துதான்  மகிந்திராவை உருவாக்கினர். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் அபாரமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தனர்.

ஜே சி மகிந்திரா, மும்பையில் பொறியியல் படிப்புக்கு புகழ் பெற்றிருந்த வீர்மாதா ஜீஜாபாய் டெக்னாலஜிகல் இன்ஸ்டிடியூட்டில் படித்தார். 1929-1940 வரையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த விற்பனை அதிகாரியாக வேலை செய்தார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, அன்றைய அரசு ஜேசி மகிந்திராவை ஸ்டீல் கட்டுப்பாட்டாளராக  நியமித்தது. பிறகுதான்  தனது சகோதரரோடு சேர்ந்து மகிந்திரா நிறுவனத்தைத் தொடங்கினார். இவரின் பேரன்தான் ஆனந்த் மகிந்திரா.

கே சி மகிந்திரா

 1894ஆம் ஆண்டு  பிறந்த ஜே சியின் இளைய சகோதரர். நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்தவர் பின்னாளில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கேயே இந்தியா பர்சேசிங் மிஷன் என்ற நிறுவனத்தில் தலைவராக பணியாற்றினார். பின்னர், 1945ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அன்றைய அரசு, கே சி யை நிலக்கரி கமிட்டி ஒன்றில் தலைவராக  நியமித்தது. இதில், சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பதற்கான நெறிமுறைகளை வகுத்தார். வாகனம், டிராக்டர் ஆகிய வாகனங்களுக்கான துறையிலும் பங்களித்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரும் தொழிலதிபருமான ராஜேந்திரநாத் முகர்ஜியின் சுயசரிதையை எழுதிக் கொண்டிருந்தார்.

1940 முதல் மகிந்திரா நிறுவன உருவாக்கத்தில் பங்கு பெற்றார். 14 ஆண்டுகள் நிறுவனத்தின்  தலைவராக இருந்தார்.இந்த காலகட்டத்தில் மகிந்திரா நாட்டின் முக்கியமான  தொழில் நிறுவனமான வளர்ந்து வந்தது. ரிசர்வ் வங்கி, இந்துஸ்தான் ஸ்டீல், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின்  தலைவராகப் பணியாற்றினார் கே சி மகிந்திரா.

 


கருத்துகள்