மென்மையான உணர்வுகளை மனதிற்குள் கடத்தும் கதைகள் - அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

 








அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன் சிறுகதைகள்




அப்பாவின் வேஷ்டி

பிரபஞ்சன்

டிஸ்கவரி பப்ளிகேஷன்


தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் உள்ளன. இதில் வாசிக்க அனைத்துமே வெவ்வேறு வகையாக மனித வாழ்க்கையை அணுகுபவைதான். நிகழ் உலகம், அமரத்துவம், குழந்தைகள் ஆகிய கதைகள் சற்றே வேறுபட்ட தன்மையைக் கொண்டுள்ளன.

குழந்தைகள் கதையில் வாசு என்ற இசைக்கலைஞரிடம் வீணை பாடம் கற்க இரு இளைஞர்கள் செல்கிறார்கள். அங்கு வாசு சாரின் மகள் விதவையாகி வாழ்ந்து வருகிறாள். பிறகென்ன கதை அதேதான். பாடம் கற்க சென்றவரான பிச்சுவுக்கு காதல் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிச்சுவின் செயலை வாசு சார் எப்படி பார்க்கிறார், அவரின் மகள் ஜானகி எப்படி புரிந்துகொள்கிறாள் என்பதே கதையின் இயல்பை மாற்றுகிறது. இதில் வைத்தி முதலிலேயே வாசு சாரின் இயல்பைப் புரிந்துகொள்கிறான். அதனால் பிச்சு தனது காதல் பற்றி சொன்னதும், அது சிக்கலாகும் வேண்டாம். நீ காதல் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கிறான். ஆனால் காதல் இதற்கெல்லாம் நின்றுவிடுமா என்ன?

இறுதியாக என்னாகிறது, பிச்சுவின் காதல் பற்றி வைத்தி என்ன சொல்லுகிறான் என்பதுதான் முக்கியமானது.

நிகழ்காலம் சிறுகதை, சிறையில் இருந்து தொடங்குகிறது. திருமணமாகிய நிலையில் ஒருவன் தவிர்க்க முடியாத சூழலில் பணத்திற்காக தனது நண்பனின் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறை செல்கிறான். ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்புகிறான். அதுவரை அவன் வாழ்ந்துவிட்ட வந்த காத்திருக்குமா என்ன? அவன் இழந்த விஷயங்கள் என்ன என மெல்ல அவன் புரிந்துகொள்வதுதான் கதை. இதில் அவன் மனைவி இறுதியாக சொல்லும்  வார்த்தைகளே அவனின் மதிப்பை அவனுக்கு உணர்த்துகிறது. சிறை வாழ்க்கை, பணமில்லாத வறுமை, சமூகத்தின் அழுத்தம் ஒருவரை எப்படி மாற்றுகிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

அமரத்துவம், ஆசிரியர் திருவேங்கடம் பற்றிய நினைவுக்குறிப்பாக அமைகிறது. பள்ளி ஒன்றில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது. அங்கு படித்து சாதனை செய்த முன்னாள் மாணவரைக் கூப்பிட நினைக்கிறார்கள். அந்த மாணவர் தான் இதற்கு தகுதியானவன் இல்லை என்று தனது நண்பரிடம் பேசியபடி ஆசிரியர் திருவேங்கடத்தை நினைத்து பார்க்கிறார். அதுதான்  கதை. பள்ளி தொடங்கவும், மாணவர்களை சேர்க்கவும், தனக்கான அரிசி வேண்டியும் எப்படி பரிதாபமாக ஆசிரியர் நின்றார் என அவரின் மாணவர் நினைத்துப் பார்க்கிறார். கூடவே பள்ளிக்காக அவர் தனது மகளின் உயிரையே விட்டுக்கொடுக்க நேர்ந்த நிகழ்ச்சிதான் கதையை வலி நிரம்பியதாக மாற்றுகிறது.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்