ஸிசோபெரெனியாவில் காதில் கேட்கும் குரலால் கொலை செய்தவர்கள்!

 










அமிஷ் எழுதிய சிவன் முத்தொகுதி நூலில் விகர்மா என்ற கருத்தை முன்வைக்கிறார். இதை தீண்டாமை என முற்போக்கு ஆட்கள் பொருள் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. அதாவது, சமூகத்தில் முழுமையான செல்வங்களோடு ஊனப்படாமல், வாரிசுகளை இழக்காமல், கணவனை இழக்காமல் வாழ்பவர்கள் அரசின் பொது இடங்களில் புழங்கலாம். மேற்சொன்னபடி இல்லாமல் எதிர்மறையாக ஊனமானவர்கள், உறவுகளை இழந்த ஆதரவற்றவர்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோர் விகர்மா என அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கான தனிப்பட்ட நேரத்தை அரசு குறிப்பிடும். அப்போது மட்டுமே அவர்கள் வெளியே புழங்கலாம். மற்ற நேரங்களில் மூடப்பட்ட அறைகளில் தனியாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கும்.

சிவன் இதை ஏன் என கேள்வி கேட்கும்போது, சமூக வாழ்க்கையை வாழ முடியாதவர்கள், உறவுகளை இழந்தவர்கள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோர் மனதில் வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். இவர்களை பொது இடத்தில் புழங்கவிட்டால் ஆபத்துகளை ஏற்படுத்துவார்கள். பிறரின் மகிழ்ச்சியை குலைப்பார்கள் என அரசர் காரணம் சொல்லுவார். சிவன் எதற்கு இந்த சமூகத்தீமைக்காக இந்தளவு பொங்குகிறார் என்றால் அவர் காதலிக்கும் பெண் சதி, விகர்மா என்ன சமூகத்தால் விலக்கப்பட்டவர்.

மனநிலை குறைபாடு கொண்டவர்கள், அதனை பொதுவாக சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களில் வெளிக்காட்டுவார்கள். அதை தவிர்ப்பது கடினம். கட்டுப்பாடு என்ற கோடுகளை ஏற்கெனவே அவர்கள் தாண்டியவர்கள் என்பதால் எளிதில் பிறரை தாக்க முயல்வார்கள். எனவே அவர்களை குற்றவாளி என்றாலும் கூட மனித தொடர்புகள் இன்றி காப்பகத்தில் அடைத்து விடுவார்கள்.

இன்று ஸிஸோபெரெனியா பற்றி நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டன. மருத்துவ நூல்களும் இருக்கின்றன. ஆனாலும் நேரடியாக அப்படிப்பட்ட நோயாளிகளை பார்க்கும்போது அவர்களை எதிர்கொள்வது நிச்சயம் கடினமானதுதான்.

காதில் குரல் கேட்பது, நிஜத்தை மறைக்கும் புனைவான கற்பனைக் காட்சிகள் தெரிவது ஆகியவை ஸிசோபெரெனியாவின் முக்கியமான அறிகுறிகள். பதினைந்து வயது முதல் 35 வயது வரையிலான நபர்கள், இந்த மனநிலை குறைபாட்டிற்கு ஆட்படுகிறார்கள். குடும்ப ரீதியாக வரும் வாய்ப்பு அதிகம். நிலம் மட்டும்தானா சொத்து, நோய்களும் கூடத்தான். வெளிப்புற சூழல்களில் எளிதாக தூண்டப்படுகிறது. ஸிசோபெரெனியா நோயாளிகளுக்கு யோசிப்பதில் தடுமாற்றம், பேச்சும் சரியாக வராது. மூளையில் ஏற்படும் சீரற்ற வேதிப்பொருட்களின் அளவுதான் மனநிலை குறைபாட்டிற்கு முக்கியம். இதில் வன்முறை என்பது சிறிய பங்குதான். மிகச்சிலருக்குத்தான் இப்படி காதில் குரல் கேட்டது. உடனே அதை பின்பற்றி கழுத்தை வெட்டினேன். வயிற்றில் குத்தினேன் என வாக்குமூலம் கொடுப்பார்கள்.

ரெசன்டெஸ் என்ற கொலைகாரர், நான் கொன்ற மனிதர்கள் எல்லோருமே மோசமான ஆன்மாக்கள். எனவே நான் அவர்களைக் கொன்றேன் என்றார். ஒன்பது நபர்களை வல்லுறவு செய்து கொன்றார். இவரைப் பிடிக்க காவல்துறைக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்த கால இடைவெளி கூட கடவுளின் பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. அதனால்தான், நான் உங்களிடம் பிடிபடவில்லை என காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார். இவர் கூறிய கதையைக் கேட்ட நீதிபதி கொலைகளுக்கான தண்டனையை விதித்தார். கடவுளின் குரலைக் கேட்டவர் என்றெல்லாம் ரெசன்டெஸை விடுதலை செய்யவில்லை.

மனநிலையை சற்று மந்தப்படுத்தும் மருந்துகளை ஸிசோபெரெனியா நோயாளிகளுக்கு வழங்குவார்கள். அவர்களும் அதை சாப்பிடுவார்கள். ஆனால் அது அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் சாப்பிட வேண்டும் என்பதுதான் நோயின் சாபம். ஒருகட்டத்தில் சலித்துப்போய் மருந்தை சாப்பிடாமல் நிறுத்திவிடுவார்கள். பிறகுதான் மனநிலை மோசமாகி, பிரச்னைகள் தலைதூக்கத் தொடங்கும். இதெல்லாம் தாண்டி கொலைகளை நான் செய்யவில்லை இன்னொரு ஆள் செய்தான் என ஆளுமை பிறழ்வு பாத்திரங்களை தனக்கு நியாயம் அழைத்த புத்திசாலி கொலைகாரர்களும் உண்டு. ஜான் வேய்ன் கேசி அப்படிப்பட்ட ஒருவர். முப்பத்து மூன்று ஆண்களைக் கொன்றவர், கொலைகளை தான் செய்யவில்லை. ஜாக் ஹேன்லி என்ற நபர் செய்தார் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்