நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

 










 





தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்

 

ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.  ஆனால் அகதாவுக்கு  அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் என்பதுதான் அகதாவின் ஒரே கருத்து.

இருவரும் திடீரென மந்திரப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று கெட்ட மந்திரவாதம், இன்னொன்று நல்ல மந்திரவாதம். ஒருவரை குளத்தில் வீசுகிறார்கள். இன்னொருவரை பூந்தோட்டத்தில் வீசுகிறார்கள். இதில் சோபியா கெட்ட மந்திரவாதப்பள்ளிக்கு வருகிறாள். அகதா, நல்ல மந்திரவாதிகள் பக்கம் வருகிறாள். உண்மையில் அகதா பேய்க்கதைகளைப் படிப்பவள். அவள் கெட்ட மந்திரங்கள் சொல்லும் பள்ளிக்கு செல்ல நினைக்கிறாள். சோபியோ நல்ல மந்திரவாதம் கற்று இளவரசியாக நினைக்கிறாள். ஆனால் அவர்களின் ஆசை, லட்சியம் எல்லாம் பள்ளியின் பிரிவுகளால்  மாறிவிடுகிறது.

நல்ல மாந்த்ரீக பள்ளியில் சேரும் அகதா, புரட்சிக் குரலை எழுப்புகிறாள். அவள் கலந்துகொள்ளும் அனைத்து வகுப்பிலும் நினைத்து பார்க்க முடியாத பிறர் கேட்க  பயப்படும் கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களை பீதிக்கு உள்ளாக்குகிறாள். ஆசிரியர்களுக்கே அவள் எப்படி தைரியமாக கேள்விகளைக் கேட்கிறாள் என ஆச்சரியப்படுகிறாள். யார் நல்லவர் யார் கெட்டவர், அதை எப்படி தீர்மானிக்கிறீர்கள் என நிறைய கேள்விகளைக் கேட்டு பிரச்னைகளை உருவாக்குகிறாள்.

அங்குள்ள இளவரசனை எல்லோரும் அதாவது இளம்பெண்கள் மணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அகதா அவனை அலட்சியமாக இடது கையால் கையாள்கிறாள். தள்ளுடா மண்டைக்கனம் பிடித்தவனே என்று சொல்லுகிறாள். பாராட்டும் பெருமையும் மட்டும் கேட்டவனுக்கு அகதா தன்னை புறக்கணிப்பதே அவள் மீது ஆர்வம் வரக் காரணமாக இருக்கிறது. சோபியாவுக்கு நல்ல மந்திரவாத பள்ளியில் இளவரசியாக வலம் வர ஆசை. அதற்கு அவள் இளவரசனின் அன்பை சம்பாதித்து, அவனுடைய முத்தத்தை பெற்றால் பள்ளியை மாற்றிக்கொள்ளலாம். இதற்காக அவள் அகதாவின் உதவியை நாடுகிறாள். அகதா,

சோபியாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். இதனால் ஒரு கட்டத்தில் தனது காதலைக் கூட விட்டுக்கொடுத்து இளவரசனுடன் சேர்த்து வைக்கிறாள். ஆனால் இப்படி குட், ஈவில் என ஆர்தர் அரசரின் மகனான டெட்ராய், சோபியா இருவரும் காதல் கொள்வது பள்ளியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இருவருக்கும் போட்டி வைத்து அதில் வென்றால் மணம் செய்துகொள்ளலாம் என்று கூறுகிறது பள்ளி நிர்வாகம். அந்த போட்டியில் இருவரும் வென்றார்களா, அகதா விரும்பியது போல சோபியாவை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு திரும்பினார்களா என்பதுதான் இறுதிப்பகுதி.

இன்னொரு  கதை படத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதில் நல்ல கெட்ட பள்ளியைச்சேர்ந்த இருவரும் சண்டை போடுகிறார்கள். அதில் கெட்ட பள்ளியைச்சேர்ந்தவர் தனது உயிரியல் ரீதியான சகோதரனை கத்தியால் கொல்கிறார். இதனால் பள்ளிக்கு என்னவானது என்பதே இன்னொரு கிளைக்கதை.

படத்தில் அகதா கேட்கும் கேள்விகளும் அடிப்படை மனிதநேயம் பற்றி பேசுவதும் சிறப்பான காட்சிகளாக உள்ளன. குடும்பம் என்பது எந்தளவு முக்கியம், அதைக் காக்க உயிரைக் கொடுத்து கூட போராடலாம் என்பதை அகதா இறுதிக்காட்சியில் காட்டியுள்ளார். அனைத்து நடிகர்களுமே சிறப்பாக நடித்துள்ளனர். மாய, மந்திரக் காட்சிகளும் சிறப்பாக உள்ளன. இந்த படம் தொடர்வரிசை படங்களில் முதலாவதாக இருக்கும்., அடுத்தடுத்த படங்கள்தான் படத்தை நம்பிக்கைக்குரியதாக மாற்றும்…. அதற்கான காட்சிகளையும் படத்தில் வைத்திருக்கிறார்கள்.

மனிதன் பாதி மிருகம் மீதி

கோமாளிமேடை டீம்

Initial release: 18 October 2022
Director: Paul Feig
Language: English
Cinematography: John Schwartzman
Distributed by: Netflix

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்