பெண்களைக் கடத்தி காதலர்களை சோதிக்கும் வினோதமான நபர்- நேனோரகம் - சாய் சங்கர், சரத், ரேஷ்மா மேனன்

 














ரண சிம்மா

சரத்குமார், ரேஷ்மா மேனன்

 

படம் தெலுங்குதான். ஆனால் தமிழ் டப்பிங்கில் பார்த்தால் கல்யாண வீடியோவா என தோன்றுகிறது. அந்தளவு க்ரீன்மேட்டை, பேக்கிரவுண்ட் புரஜெக்ஷன் சமாச்சாரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் தொடக்கத்தில் சிலருக்கு போன் அழைப்பு வருகிறது. சிலர் அதை எடுத்து பேசுகிறார்கள். சிலர் அத்தோடு அந்த அழைப்பை துண்டித்து போனையும் ஆஃப் செய்துவிடுகிறார்கள். ஒருவர் தனது காதலியுடன் காரில் வந்து காவல்துறையினரின் சோதனையில் மாட்டுகிறார். அவர் காரில் போதைப்பொருளை வைத்திருக்கிறார். அந்தக் காட்சி அப்படியே முடிய… பிறகு வழக்கம்போல தெலுங்குபடம் அல்லவா, கலர்ஃபுல்லாக தொடங்குகிறது.

படத்தின் நாயகன், கடன் வசூல் செய்யும் ஆளாக கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். முதல் காட்சியே அவருக்கு சிறப்பான அறிமுகமாகிறது. பிறகென்ன, அவருக்கான அறிமுக பாடல் முடிந்தால் அடுத்து, நாயகிக்கான அறிமுகம். இந்த வகையில் ஸ்வேதா அறிமுகமாகிறார். நர்சரி ஒன்றை நடத்தி வரும் அப்பாவியான ஆள். நர்சரியில் வேலை செய்யும்போது கூட அழகாக இருக்கும் பெண் என நாயகன் வசனம் பேசுமளவு நன்றாக இருக்கிறார்.  

ஸ்வேதாவை சிறந்த பெண் என நம்ப வைத்து குற்றவுணர்ச்சியை உருவாக்கி காதலிக்க முயல்கிறார் நாயகன். இந்த நேரத்தில் இன்னொரு நபர் யாரோ ஒருவரை தீவிரமாக தேடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருக்கான காட்சி தீவிரமாக உருவாக்கப்படவில்லை.

ஸ்வேதா நாயகனிடம் தனது காதலைச் சொன்னபிறகுதான் முக்கியமான கதையே தொடங்குகிறது. அவர் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபிறகு வேன் ஒன்றில் கடத்தப்படுகிறார். பிறகு, போனில் பேசும் நபர் தான் சொல்வதை செய்தால் சில நாட்களுக்குப் பிறகு ஸ்வேதாவை விட்டுவிடுவதாக சொல்லி சில காரியங்களைச் செய்ய வைக்கிறார். உண்மையில் அவர் ஏன் அப்படி செய்கிறார், அந்த செயல்களால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சிகள்.

படத்தை சிறிய பட்ஜெட்டில் எடுப்பதா, பெரிய பட்ஜெட்டில் எடுப்பதாக என இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ லடாய் இருக்கும் போல… இதனால் பாதி காட்சிகள் பரவாயில்ல என்றபடியும் மீதி காட்சிகள் டிவி சீரியலா, கல்யாண வீடியோவா என நாமே பீதியூட்டும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

ரேஷ்மா மேனனைக் காட்டும்போது மட்டும்தான் ஒளிப்பதிவாளர் சற்று உற்சாகமாக வேலை செய்திருக்கிறார். மற்றபடி அப்படியே கேமராவை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு டீக்குடிக்க போய்விடுகிறார்.

காதலில் ஏமாற்றி பெண்களை விபச்சாரத்திற்கும், ஆபாச வீடியோ எடுக்கும்படி தள்ளிவிடும் ஆட்களைப் பற்றிய கதை. ஆனால் அதில் அந்த சமூக விரோத கும்பல், அந்த நெட்வொர்க் பற்றியெல்லாம் கதை பேசவே இல்லை. லைட்டாக அப்படியே சென்று யூடர்ன் போட்டு திரும்பிவிடுகிறது.

எல்லோரும் பார்க்கும் இடமான பார்க்கில் எப்படி சரத்குமார் தனது பெண்ணை ஏமாற்றிய காதலனை கழுத்தை நெரித்து கொல்வார் என்று பார்க்கும்போதே நிறைய சந்தேகங்கள் வருகிறது. ஆனால் இயக்குநருக்கு எல்லாமே தெளிவாக கிளியராக இருக்கிறது. அப்படியே படத்தை இயக்கி எடிட் செய்து திரையிட்டு முடித்துவிட்டார். ஏன் தமிழ் டப்பிங்கில் கூட நாமும் பார்த்துவிட்டோம். உலகத்திற்கு வேறு என்ன தேவை சொல்லுங்கள்?

எக்ஸ் வீடியோஸ் பார்க்காத ஜென்டில்மேன் காதலர்கள் நாட்டிற்கு தேவை!

கோமாளிமேடை டீம்


கருத்துகள்