வீடியோ எடுத்து லட்சம் சம்பாதிக்க முயன்று கம்யூனிச இயக்கத்திடம் மாட்டிக்கொள்ளும் நாயகன்! - லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப்

 










லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப்

இயக்கம் மெர்லபா காந்தி

விப்லா என்ற இளைஞர், யூட்யூப் சேனல் ஒன்றை நடத்துகிறார். பிறரது போனைப் பிடுங்கி சப்ஸ்கிரைப் செய்யும் நிலை. அவர் தனியாக சில இடங்களுக்கு பயணித்து யூட்யூப் வீடியோ செய்ய நினைக்கிறார். அப்படி செய்ய நி


னைத்து மாவோயிஸ்ட்டுகள் உள்ள காட்டுக்கு சென்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் கதை. 

படத்தில் இயக்குநர் மெர்லபா காந்தி, மாவோயிஸ்ட் இயக்கம் அதன் கொள்கை, அரசு, அதிலுள்ள அதிகாரிகளால் அமைதிப் பேச்சுவார்த்தை எப்படி தகர்ந்துபோகிறது என்பதையெல்லாம் பேசுகிறார்.

படத்தில் கம்யூனிஸ்ட் ஒருவரின் மகன்தான் விப்லா. அவருக்கு அப்பாவின் கொள்கையை விட காசுதான் முக்கியம். எனவே யூட்யூப் சேனல் தொடங்கி அப்பாவிடம் ஒரு லட்சம் காசு வாங்கி ஊர்சுற்றி வீடியோ போட்டு காசு சம்பாதிப்பதுதான் நோக்கம் இந்த நேரத்தில் அவர் அவரைப் போலவே வீடியோ பதிவிடும் இன்னொரு நபரைப் பார்க்கிறார். அவர்தான் வசுதா. டிஜிபியின் பெண்.  டெல்லியில் படிக்கும் அவளை சீண்டிவிட்டு கமெண்டுகளைப் போடுகிறான். இதில் கோபமாகும் வசுதா, ஆந்திரப் பிரதேசத்தின் ஆரகு காட்டுப்பகுதிக்கு வருகிறாள். 

இந்த நேரத்தில் விப்லா தனது சினிமா படப்புகழ் கேமராமேனோடு அங்கு வருகிறான்.

மற்றொரு கதை. பிபிஎஃப் எனும் பழங்குடியை பாதுகாக்கும் ஆயுதப்படை ஒன்று இயங்கி வருகிறது. இவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்கள். ஆனால் திரும்ப காட்டுக்கு வருவதில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற மூத்த தலைவர்களை அரசு கொன்றுவிட்டதாக  நினைத்து பிபிஎஃப் ஆட்கள் கோபம் கொள்கிறார்கள். இதனால் டிஜிபியையையும் அவரது குடும்பத்தையும் தாக்க நேரடி சவால் விடுகிறார் பிபிஎஃப் ஒருங்கிணைப்பாளர். இதற்கு இடையே காட்டுக்குள் சட்டவிரோத  சுரங்கம் தோண்டி தொழில் நடத்தும் எம்எல்ஏவை பிபிஎஃப் ஆட்கள் அவரது சிறுவயது மகன் முன்னாடியே கொல்கின்றனர்.

பிபிஎஃப் ஆட்களுக்கு டிஜிபியின் ஆரகு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்க அவர்கள் அவளைத் தேடுகிறார்கள். இந்த நேரத்தில் அவளது அப்பா மீதும் பிபிஎஃப் தாக்குதல் நடத்துகிறார்கள். வீடியோ எடுக்கும் வேகமும் வசுதாவின் மீது காதல் என விப்லா சுற்றுகிறார். இவர்கள் பிபிஎஃப்பிடம் சிக்கினார்களா, அவர்களது பிரச்னை தீர்ந்ததா என்பதே கதை.

சந்தோஷ் சோபன் பாபு- விப்லா  படத்தில் நடித்துள்ள பாத்திரம் அனைத்து காட்சிகளில் ரசிக்கும்படியானது. அற்பத்தனமான, தனக்கு தேவையானதைப் பற்றி மட்டும் யோசிக்கும் ஆள். பரூக் அப்துல்லா -வசுதா, அவரளவு இல்லையென்றாலும் தனக்குப் பிடித்ததை செய்ய நினைப்பவள். இந்த இருவரும் சந்திக்கும் காட்சிகள் எல்லாமே எப்போதும் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குநர் மெர்லபா காந்தி.

படத்தில் காமெடிக்கு பிரம்மாஜி உத்தரவாதம் தருகிறார். முடிந்தவரை படத்திற்கு பெரும்பலமாக இருக்கிறார். மற்றபடி படத்தில் காமெடி என நினைத்து அவர்கள் பேசுவது பலதும் சகித்துக்கொள்ளும் / கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளன. படத்தை பிடித்திருக்கிறது பிடிக்கவில்லை என  எந்த பதிலையும் சொல்ல முடியாது. படம் ஏதாவது வகையில் நிறைவாக இருக்கிறதா என்றால் எந்த வகையிலும் திருப்தியாக இல்லை. நாயகன் முடிந்தவரையில் காமிக்கான தனது நடிப்பு மூலம் படம் நெடுக பார்க்க வைக்கிறார். மற்றபடி படத்தின் கதை என்பதை பற்றி இயக்குநரோ பிறரோ கவலைப்படவில்லை. ஆரகு காட்டில் கதை தொலைந்துவிட்டது போல... நாமும் படம் கிடக்கிறது விடுங்க... வசுதாவின் அழகைப் பாருங்கள். அந்த தெற்றுப்பல் சிரிப்பைப் பாருங்கள். மறைத்து வைத்துள்ள அழகைப் பாருங்கள் என லச்சம்மா பாட்டை பாட ஆரம்பித்துவிடுகிறோம். அவ்வளவுதாங்க.. 

கோமாளிமேடை டீம்

கருத்துகள்