காமத்தாலும் சுயநலத்தாலும் அலைகழியும் மனிதர்களின் கதைகள்- சுகவாசிகள் - கரிச்சான்குஞ்சு- காலச்சுவடு

 
















சுகவாசிகள்

கரிச்சான் குஞ்சு

காலச்சுவடு பதிப்பகம்

இரண்டு குறுநாவல்கள் – சுகவாசிகள், ஒரு மாதிரியான கூட்டம்

 

தனது குறுநாவல்கள் பற்றி கரிச்சான் குஞ்சு முன்னுரையில் எப்படிப்பட்டவை என்று கூறிவிடுகிறார். எனவே, முடிந்தவரை அதை படிக்காமல் கதைகளை படித்தால் கதைகளை உங்கள் மனதில் உணர்ந்து பார்த்து காட்சிகளாக வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்கும்.

சுகவாசிகள் குறுநாவலில் நாகு அய்யர் வருகிறார். இவருக்கு சொத்துகள் ஏகபோகம். அந்த சொத்துகள்தான் காமத்தை தூண்டுகின்றன. இதன் விளைவாக மூன்று பிள்ளைகளை கட்டிக்கொடுத்து விடுதலைப் பத்திரம் வாங்கியும் கூட ஐம்பது வயதில் பார்வதி என்ற மலையாளப் பெண்ணை மணம் செய்துகொள்கிறார்.

வயதாகி, உடல் வேகமாக இயங்காதபோதும் தங்க பஸ்பம் சாப்பிட்டு உடலை இயங்கவைத்து மகன் ஒருவனை பெற்றெடுக்கிறார். அவன்தான் சீனு. நாகு அய்யரைப் போன்ற உருவம். ஆனால் அதற்குப் பிறகு நாகு அய்யர் உடலுறவில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதனால் உடல்நலம் குன்றுகிறது. உடல்நலம் குன்றிய காலகட்டத்தில் பார்வதிக்கு கிருஷ்ணன், ராசாளி என இருவர் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளால் சொத்துகள் பறிபோகிறது. மேலும் பார்வதிக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. இறுதியாக அவளது இறப்பே எப்படி வாழ்ந்தாள் என்பதை சொல்லுகிறது.

நாவலின் மையமாக கதை இதுதான். ஆனால் கதை நினைவுகளின் வழியாக பின்னோக்கி சென்று சீனு யார், அவனது அப்பா பற்றி நினைத்துக்கொள்வதாக செல்கிறது.

இந்த கதையில் வரும் நாகு அய்யரை, கிருஷ்ணனை, ராசாளியை காமம் செலுத்துகிறது. சின்னசாமி அய்யர், கோவாலி, ராசு, சீனு, சாமா ஆகியோர்களை சுயநலம் உந்தித் தள்ளுகிறது.

சின்னசாமி அய்யர் மட்டும்தான் தனது வேலையை கவனமாக பார்த்து காசு சேர்த்து நாகு அய்யரிடமிருந்து அதிகாரம் கைமாறியவுடன்  வேலையை விட்டு விலகிச் செல்கிறார். இறுதியில் சவுக்குத்தோப்பை நல்ல விலைக்கு விற்று குடியானவர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் காசு கிடைக்கும் படி செய்துவிட்டு கிளம்புகிறார். இதனால் அவருக்கு ஆபத்து வரும்போது குடியானவர்கள் அவரது பாதுகாப்புக்கு வந்து நிற்கிறார்கள்.  சொத்துகள் இருந்தாலும் கூட அனைத்தையும் அழிப்பது நாகு அய்யரின் வாரிசான சீனுதான். இறுதியாக மகனிடம் செருப்பில் அடிவாங்கி தெருவில் சரிந்து விழும் காட்சி அவலமானது.

ஏறத்தாழ இந்த வகையில் சீனுவின் அம்மா பார்வதி கவனிக்க யாருமின்றி மல, ஜலம் கூட சுத்தப்படுத்தப்படாமல் கிடந்து இறந்துபோகிறாள். ஏறத்தாழ அந்த வகையில் சீனுவுக்கும் அதே போன்ற நிலைமை ஏற்படுகிறது. பார்வதிக்கு தான் தேடிய அயல் உறவுகள், காமம் மூலம் மோசமான நிலை ஏற்படுகிறது. சீனுவுக்கு அவன் நட்புகள் மூலம் வாழ்க்கை வீட்டிலிருந்து தெருவுக்கு இறங்கிவிடுகிறது.

ஒரு மாதிரியான கூட்டம்

சென்னையில் வாழும் ஒரு மாதிரியான மரபுகளை கடைபிடிக்கும் அய்யர் குடும்பத்தின் கதை இது. டெல்லியில் இருந்து இளைய மகள் ஜெயா தனது காதலனோடு சொந்த குடும்பத்தை காண வருகிறாள். அந்த குடும்பமோ முழுக்க கணவரின் அண்ணனின் பணத்தை செல்வாக்கை நம்பி வாழ்கிறது. இந்த நிலையில் இளைய மகள் பெரும் பணக்கார வாரிசை  மணம் செய்யப் போகிறாள் என தெரியும்போது ஜெயாவின் அம்மாவுக்கு மனதளவில் கடுமையான காழ்ப்புணர்ச்சி தோன்றுகிறது. அதை அவள் புழுத்த நாய் குறுக்கே போகாது என்ற அளவில் வசையாக பொழிகிறாள். இதனால் குடும்பத்திலும், ஜெயாவுக்கும் ஏற்படும் மன உளைச்சல்களே கதை.

மனதளவிலும் பொருளாதார அளவிலும் மேலே வர முடியாத குடும்பம் கொள்ளும் தாழ்வுணர்ச்சியும், வயிற்று எரிச்சலும்தான் முக்கியமான சிடுக்காக கதையில் உள்ளது.,

ஜெயாவின் அம்மா, தனது கனவுகளை கணவர் நிறைவேற்ற முடியாத நிலையில் மகனும் படிப்பை நிறைவு செய்யவில்லை. அவனும் வேலைக்கு போகவில்லை. இந்த நிலையில் மூத்த மகள் கமலிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும்.  அதை நிச்சயம் ஜவுளிக்கடையில் வேலைக்கு போகும் கணவர் தரும் பணத்தை வைத்து செய்ய முடியாது. இந்த சூழலில் இளைய மகள் ஜெயா டெல்லியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மூலம் கணவரின் அண்ணனிடம் பெறும் பணம்தான் குடும்பம் நடத்த உதவுகிறது.  இந்த சூழலில் தங்களின் அவலமான நிலையில் இருந்து ஜெயா மாறியிருப்பதை அவளது பேச்சு பாணி, உடை, அலங்காரம் ஆகியவற்றை வைத்து புரிந்துகொண்டு அம்மா மனதில் பொறாமை கொள்கிறாள். கூடவே அவளது மனம் கதையின் ஓரிடத்தில் மூத்த மகள் கமலி, இளைய மகள் ஜெயா என இருவரையும்  ஒப்பீடு செய்கிறது.

என்னதான் தனது மகள்தானே என்று சமாதானம் செய்தாலும் அவளது மனது ஆறுவதாக இல்லை. தான் வாழ முடியாத வாழ்க்கையை இளைய மகள் வாழ்கிறாள் என தவிக்கிறாள். புலம்புகிறாள். இறுதியாக ஜெயாவின் பணக்கார காதலனை துரத்திவிட்டு மகளை அடித்து கீழே வீழ்த்துகிறாள். இதற்கு கமலியும் உடந்தையாக இருக்கிறாள். இரு குறுநாவல்களுமே சுயநலத்தை அடிப்படையாக கொண்டவை. முதல் நாவல், காமத்தை முதன்மையாக எடுத்துச்சொல்கிறது என்றால் இரண்டாவது நூல் சுயநலத்தை, பொறாமையை, வயிற்றெரிச்சலை முன்னிலைப்படுத்துகிறது.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்