தனிமைத் துயரைப் போக்கும் பிணங்கள் - ஜெப்ரி டாமர்

 










அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0


ஜெப்ரி டாமர் பெயரை குற்ற உலக வரலாறு எப்போதும் மறந்திருக்காது. இவரது பெயரில் ஓடிடியில் தொடரைக் கூட வெளியிட்டு வருகிறார்கள்.  1991ஆம் ஆண்டில் பதினேழு பேர்களை வெட்டி கொலை செய்திருந்தார். இவர் கொலை செய்ய திட்டமிட்டவர்களில் ஒருவர் மட்டும்  தப்பிப் போய் காவல்துறைக்கு தகவல் கொடுத்து கொலைத் திருவிழாவை தடுத்துவிட்டார். இல்லையென்றால் கொலைகள் ஒருவழியாக ரவுண்ட் ஃபிகராக வந்திருக்கும்.

கொலை செய்தவர்களின் உடல்களை, வெட்டியெடுத்த உடல் பாகங்களை தடய அறிவியல் துறையை விட தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் டாமர். அதெல்லாம் காவல்துறைக்கு அவரது குற்றத்தைப் புரிந்துகொள்ள உதவின. குளிர்பதனப் பெட்டியில் குடல், குண்டாமணி, இதயம், நுரையீரல் என அனைத்தையும் பங்கு பாகம் பிரித்து வைத்திருந்தார். உடல்களை கரைக்க, பதப்படுத்தவென பேரல் நிறைய அமிலங்களும் இருந்தன.  காவல்துறை சேகரித்தது பதினொரு ஆண்களின் உடல் பாகங்களைத்தான். அதற்கும் மேல் ஆறு பேர் உண்டு என கூடுதல் தந்து உதவினார் டாமர். பின்னே இதெல்லாம் சாதனைதானே?

பதினெட்டு வயதில் ஸ்டீவ் ஹிக்ஸ் என்பவரைக் கொலை செய்து ரத்த ருசி கண்டார். பிறகு பாட்டியுடன் சென்று தங்கியிருக்கும்படி சூழல் அமைந்தாலும் நான்கு பேர்களை கொன்று பாட்டியின் கீழ்தளத்தில் வைத்திருந்தார். துர்நாற்றம் வருவதை பாட்டி புகார் கூறியும் டாமரின் அப்பா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மகனை அப்படி நம்பினார். மகனும் அதற்கேற்ற பதில்களை தயார் செய்து சொன்னார்.

ஒருவரை கொலை செய்து உடல் மீது சுய இன்பம் அனுபவிப்பது, இறந்த பிணத்தை தோண்டியெடுத்து உறவு  கொள்வது, சுயநினைவிழந்தவர்களின் மண்டை ஓட்டை உடைத்து உள்ளே அமிலத்தை நிறைப்பது என டாமர் செய்யாத ஃபேன்டசி சமாச்சாரங்களே கிடையாது. டாமர் தனியாக வாழ்ந்தார். தனது தனிமையைப் போக்குவதற்காக கொலை செய்து உடல்களை தன்னோடு வைத்துக்கொண்டார். முன்பே சொன்னது போல செக்ஸ் அடிமை ஒருவரை உருவாக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இப்படி செய்யும் முயற்சி வெற்றி பெற்றால் தன்னால் சக்தி பெற முடியும். அதை வைத்து பொருளாதாரம் சமூகரீதியாக வெற்றி பெறலாம் என்று நினைத்தார்.

கொலை செய்ய காரணம் எதற்கு?

50களில் நடந்த சம்பவம். வில்லியம் என்பவர் கருப்பு ஜாக்கெட் போட்டுக்கொண்டு டாட்டூக்களை சுற்றிக்கொண்டு அமெரிக்காவில் சுற்றித் திரிந்தார். இவர் ஒரு குடும்பம் காரில் வர அவர்களை துப்பாக்கி காட்டி அப்படியே காரோடு கடத்தினார். பிறரை கட்டாயப்படுத்தி தான் நினைத்த விஷயங்களை செய்ய வைப்பது வில்லியமிற்கு பிடிக்கும். அந்த வகையில் இப்படி போகும்போது காவல்துறை சுற்றி வளைத்தது. அவர்களிடம் பிடிபட்டுவிடுவோமோ என்று காரில் இருந்த அத்தனை பேரையும் சுட்டுக்கொன்றார். மூன்று குழந்தைகள், பெற்றோர், இறுதியாக அவர்கள் வளர்த்த நாய் கூட மிஞ்சவில்லை. பிறகு அனைவரின் உடல்களை சுரங்கம் ஒன்றில் கொண்டு சென்று புதைத்தார்.

பிறகும் பல்வேறு மாகாணங்களுக்கு காரில் உள்ளவர்களை கடத்தி சென்று சந்தோஷமாக இருந்தார். கொலை என்பது மனநிலை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தது. கார்களில் உள்ளவர்களைக் கொன்றுவிட்டால் காரை மட்டும் தனியாக ஓரிடத்தில் ஓட்டிச் சென்று விட்டு சென்றுவிடுவது வில்லியமின் வழக்கம். வில்லியம் தனக்கு இஷ்டம் ஒச்சினபடி கொலைகளை செய்து வந்தார். காவல்துறை அவருக்கு ஏற்கெனவே ஸ்கெட்ச் போட்டுவிட்டது. பிறகு காவலர்களிடம் சிக்கியதும்  நீதிமன்றம் அதிகமெல்லாம் யோசிக்கவில்லை. ஒரு குடும்பத்தைக் கொன்றார் என வழக்கு போட்டு விஷவாயு அறையில் அடைத்து கொன்றனர். ஏன் காரில் உள்ளவர்களை கடத்தி கொன்றாய் என மருந்துக்கு கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை.

இதுவரை கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு விஷயம் உண்டு. அதுதான் மோட்டிவ் – காரணம். கொலை செய்யப்பட பொதுவாக காரணங்களாக என்ன இருக்கும். டெய்லி டெலிகிராம் படிப்பவர்கள் கூட எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பெண், பொன், மண் என இவைதான். ஆனால் காரணம் அப்புறம் தேடிக்கொள்ளலாம் என கேசுவலாக பிறரை கொலை செய்பவர்கள் உலகமெங்கும் உண்டு. சும்மா விட்டால் காவல்துறையில் சொல்லி லாடம் கட்டுவார்கள் என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

புகைப்படம் லாரன்ட் பெனைம் 

கருத்துகள்