மூன்று சகோதரர்களின் காதல் குளறுபடிகளின் கதை! காபி வித் காதல் - சுந்தர் சி

 




 







பி வித் காதல்

இயக்குநர் சுந்தர் சி

இசை யு1

 

மூன்று சகோதரர்களின் காதல் வாழ்க்கை குளறுபடிகள்தான் கதை. இதில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவர் வேறு பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத் தயங்காத ஆள். எந்த பெண் கிடைத்தாலும் சரி, பல் விளக்காமலேயே சேட்டு போல ஜிலேபி சாப்பிட நினைப்பவர். சரவணனுக்கு லிவ் இன் உறவில் காதலி இருக்கிறாள். ஆனால் அவள் பாப் பாடகர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்று விடுகிறாள்.

 இளையவன் கதிர். இவனுக்கு காதல் வாழ்க்கை அல்லது கல்யாண வாழ்க்கை எதாக இருந்தாலும் சரி தனக்கு லாபமாக அமையவேண்டும் என நினைப்பவன். தன்னை விரும்பும் தோழியின் காதலைக் கூட புரிந்துகொள்ளாமல் ஹோட்டல் கட்ட இடம் கிடைக்கும் என தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். மூத்தவர் ரவிக்கு இசை பேண்ட் வழியாக பெண் ஒருவர் அறிமுகமாகி உடலுறவு கொள்கிறார்கள். இந்த பெண்ணை அவரது தம்பி சரவணனுக்கு கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார்கள். இது ரவியை சீண்ட அவர் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார்.

கதிருக்கு பார்த்த பெண் ஊருக்கு வரும்போது அவருக்கு ஊரைச் சுற்றிக்காட்ட, வெளியே கூட்டிச்செல்ல சரவணன்தான் உதவுகிறார். இதனால் அவர் மீது அந்த பெண்ணுக்கு மெல்ல ஈர்ப்பு வந்து காதலாகிறது. ஆனால் அதை புரிந்துகொண்டும் கூட ஏற்கமுடியாத நிலையில் சரவணன் தவிக்கிறார். ஏனெனில் அந்த பெண்ணைத்தான் தம்பி கதிர் மணம் செய்யப்போகிறான். கதிருக்கு ஒரு பிரச்னை. அவன் தோழி, அபி இன்னொருவரை மணம் செய்துகொள்ளப்போகிறாள் என உணரும்போதுதான் அவள் மீதுள்ள காதல் அவனுக்கு தெரிய வருகிறது.

காபி வித் காதல் தலைப்பு நவீனமாக வைத்தாலும் கதையைப் பொறுத்தவரை பழையதுதான். இந்த கதையை இன்னும் சற்று நவீனமான காட்சிகள் வழியாக அணுகியிருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கலாம்., ஆனால் படத்தின் திரைக்கதையை இருவர் தனியாக எழுதியிருந்தாலும் படத்தின் போக்கில் எந்த நல்ல அனுபவத்தையும் தரவில்லை.

படத்தில் உருப்படியான பாத்திரங்களாக மிஞ்சுபவை சரவணனாக நடித்துள்ள ஜீவா, அவரின் கர்ப்பிணித் தங்கை டிடி, கதிரின் தோழியாக வரும் அபி. அடுத்து குறிப்பிடத்தக்கபடி சொல்லலாம் என்பது யு1 இன் இசை. எப்படியோ சமாளித்து காட்சிகளை பார்க்க வைக்கிறார். ஆனால் படத்தில் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஏதும் இல்லை. சரவணன் லிவ் இன்னிலிருந்து பாப் பாடகரோடு பிரிந்து சென்ற காதலியை கூட்டிவரும்போது இது திரைப்படமா சன்டிவி சீரியலா என்று தோன்றிவிடுகிறது.

காபி வித் காதலை வெப் சீரியஸாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நிறைய உரையாடல்களை பண்டலாக எழுதி நடிகர்களின் நாக்கை வெளியே தள்ள வைத்திருக்கலாம். மாளவிகா சர்மா சொல்லும் கோபத்தை போக்கும் வழியெல்லாம் ரொம்ப பழசு. கண்டேன் காதலை படத்திலேயே அதை சொல்லிவிட்டார்கள்… அவருக்கும் சரவணன் பாத்திரத்திற்குமான ஈர்ப்பு, காதல் காட்சிக்கு எந்த ஆழமும் இல்லை. இந்த வகையில் கதிர் – அபி பரவாயில்லை. ஆனால் அதிலும் கூட கதிருக்கு பொறாமையைத் தூண்டும் காட்சிகள் நீளம் அதிகம். அவனோடு அபி அனைத்து முக்கியமான நிகழ்ச்சியில் இருப்பதைக் கூட மாளவிகா சர்மா சொல்லித்தான் அவனுக்கு தெரிய வருகிறதாம். அடேங்கப்பா…. இன்னொரு விஷயம் அபிக்கு கதிரைப் பிடித்திருந்தால் நேரடியாக உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தால் வேலை முடிந்தது. அதை ஏன் இந்தளவுக்கு ஜவ்வாக இழுத்து, மாப்பிள்ளை என அப்பாவியை இழுத்து வந்து அவமானப்படுத்தி…. ஐய்யோடா

சுந்தர் சி இன்னும் நிறைய நேரம் எடுத்து நகைச்சுவைக் காட்சிகளை எழுதிக்கொண்டு வந்தால் படம் நன்றாக இருக்கும். இல்லையென்றால் புதிய ஆட்களை எழுத வைத்து படத்தை இயக்கலாம். தீயாய் வேல செய்யணும் குமாரு படம் இதற்கு உதாரணம்.

கஷ்டமான சீரியல் காதல்

கோமாளிமேடை டீம்

கருத்துகள்