பரவசமான வாசிப்பு இன்பத்தை தரும் ஸோரன்டினா எழுதிய சிறுகதை தொகுப்பு - ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை -எம்.எஸ்.

 






ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ






ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

அர்ஜென்டினா எழுத்தாளர் ஸோரன்டினா

தமிழில் எம்எஸ்

காலச்சுவடு பதிப்பகம்


நூலின் பக்கங்களே 77 தான். எளிமையான கதைகள். அனைத்துமே வாசிக்கும்போது புன்னகை வர வைப்பவைதான். சில நன்றாக சிரிக்க வைக்கின்றன. காலச்சுவடின் எம்.எஸ் அனைத்து கதைகளையும் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். சரளம் என்பதைத் தாண்டி அர்ஜென்டினா எழுத்தாளரின் பகடியையும் நம்மால் அனுபவித்து ரசித்து படிக்க முடிகிறது.

2003இல் வெளியான காலச்சுவடின் முதல் அயல் இலக்கிய நூல் இதுதான்.

வெறும் சூசகம், ஹார்ன் இசைப்பவர், வருகை ஆகிய கதைகள் ரசித்து படிக்கும்படியானவை. இப்படி கூறுவதால் இவை மட்டுமே சிறப்பானவை என்று கருதிவிடவேண்டாம். எழுத்தாளரின் விசேஷமான பகடி இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது.

வெறும் சூசகம் என்பது சிறிய கதைதான். ஆனால் அதை பயன்படுத்தி ஒரு மனிதர் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் குணத்தை ஸோரன்டினோ எளிமையாக அதேசமயம் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அற்பத்தனமாக நடந்துகொண்டு வீட்டு உரிமையாளரை தனது சமையலறையில் நீர் எடுத்து தரச்சொல்லும்போதே சூசகத்தின் பயன் கிடைத்துவிடுகிறது.

ஹார்ன் இசைப்பவர் என்ற கதை, காதலியை விட்டு பிரிந்து வந்து அந்த துக்க நினைவைத் தாங்காமல் கடைத்தெருவில் ஹார்ன் ஒன்றை இசைத்து இறுதியில் அதற்கே அடிமையாகிற மனிதனின் வாழ்க்கைப் பிரச்னையை சொல்லுகிறது. எங்கு கதை தொடங்கியதோ, யார் அவரின் ஹார்ன் இசைப்பழக்கத்தை தொடங்க காரணமோ அவரை நாயகன் மீண்டும் சந்திக்கும்போது கதை முடிகிறது. சிறந்த பகடிக்கதைக்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட சிறுகதை. வாசிப்பவர்களை சிரிக்காமல் இருக்க முடியாது. தொடக்கம், இறுதி மட்டுமல்ல வங்கி, அங்குள்ள மனிதர்கள், வேலையின் இயல்பு, கிளை அதிகாரி என அனைத்தையும் பகடி செய்கிறார் ஸோரன்டினோ.

வருகை என்ற கதை வீட்டுக்கு அருகில் குடியிருப்பவர்களால் மாத சம்பளம் வாங்குபவனுக்கு நேரும் பிரச்னைகளைப் பேசுகிறது. இதில் முக்கியமான திருப்பமே இறுதியில்தான். பெரிய பணக்கார நண்பர்களுடன்  மாத சம்பளம் வாங்கும் ஒருவன் நட்பு வைத்துகொண்டால் என்னாகும்?  பணக்காரர்கள் வம்படியாக கொடுக்கும் பரிசுகளுக்கு பதில் பரிசு, நன்றிக்கடனை செலுத்தவேண்டும். இதனால் கடுமையாக கோபமுறும் ஒருவன் பணக்காரர்களுக்கு பிரியமுடன் அளித்த பரிசுகளை வைத்தே அவர்களை பழிவாங்குகிறான். இதுதான் கதை.

ஸோரன்டினோவின் இத்தொகுப்பிலுள்ள கதைகளை விரைவாக படித்துவிடலாம். நிதானமாக அனுபவித்து சிரிக்கலாம்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்