பெற்றோர் சொல்வதை பெண்கள் கேட்டு நடந்தாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்! -

 












மீக்கு பாகர தெக்கிரவாகினி

கதை, நடிப்பு – கிரண் அப்பாவரம்

இசை மணி சர்மா



காதல் திருமணம் செய்தால் குடும்ப உறவுகள் வருத்தப்படுவார்கள். எனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் செய்யுங்கள். சந்தோஷமாக இருக்கலாம் என கலாசார செய்தி சொல்லுகிறது படம்.

ஹைதராபாத்தில் டாக்சி டிரைவராக இருக்கிறார் நாயகன். அவர் காரில் குடிபோதையில் உள்ள பெண் வாடிக்கையாளர் ஏறுகிறார். அவரிடம் பேசி அவரது மனதில் உள்ள பிரச்னையைக் கேட்கிறார். அதில்தான் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காதலும் காதலன் ஏமாற்றிவிட்டு சென்றதும் தெரியவருகிறது. இதனால் அவள் காதலனுக்காக வீட்டைவிட்டு வந்து, நகரத்தில் வேலை செய்கிறாள். பெற்றோரிடம் செல்லவும் பயம். ஏனெனில் அவளின் கல்யாண முகூர்த்தம் போதுதான் காதலனோடு ஓடி வருகிறாள். இதனால் அவளது அப்பா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இன்னும் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் கேட்கும் நாயகி, பிறகு டாக்சி டிரைவரிடம் அவனது காதல் கதையைக் கேட்கிறாள். அவனும் தான் வழக்குரைஞர் பெண்ணை சித்தப்பா உதவியுடன் காதலித்தது பற்றி சொல்லுகிறார். இருவரும் மெல்ல நட்பாகிறார்கள். அப்போது டாக்சி டிரைவர் அந்த பெண்ணின் பெற்றோர் அவள் மீது பாசம் கொண்டிருப்பார்கள். அவளைக் காணாமல் வருத்தமாக இருப்பார்களே, நீங்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லுகிறான். அவளுக்கும் அது சரியென தோன்றுகிறது. நட்பான டாக்சி டிரைவரை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்குச் செல்கிறாள். அவளுக்கு டாக்சி ட்ரைவர் மீது ஒரு இது வந்துவிடுகிறது. அதை சொல்லப்போகும்போதுதான் அவன் தனது பெயர், அடையாளம் பற்றிய உண்மையைச் சொல்கிறான். அதுதான் படத்தின் முக்கியமான திருப்புமுனை.

படத்தின் கதையை கிரண் அப்பாவரம் எழுதியிருக்கிறார். இயக்கம் மட்டும் இன்னொருவர் செய்திருக்கிறார்.

மணமகள் தனது காதலனுடன் திருமணம் நடக்கும் சமயம் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். இதனால் மணமகளின் பெற்றோர் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக அந்த பெண்ணின் மீது நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்த அப்பா. கல்யாணம் மணமேடை வரை வந்து நின்றுபோனது மணமகனுக்கு பெரிய அவமானம், வலியும் கூட. அதை சரியாக மணமகனின் சித்தப்பா வெளிப்படுத்துகிறார். அந்த இடம் யதார்த்தமாக இருக்கிறது.

தன்னை விட்டு தான் விரும்பிய காதலனைத் தேடிப்போகும் பெண், அவனால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படுகிறாள். மனதளவில் கறையானவளாக இருக்கிறாள். உடல் அளவில் காதலன் அவளை ஏதும் சொல்வதில்லை. உனது அப்பாவிற்கான எனது பழிவாங்குதல் என்கிறான். உண்மையில் ஜென்டில் மேன் காதலன்தான்.

அவளை, ஆறுமாதம் தேடித்தான் நாயகன் கண்டுபிடிக்கிறான். உண்மையில் அந்த இடத்தில் அவன் கேட்க வேண்டிய கேள்வி என்னவாக இருக்கும்? நீ லவ் பண்ணியதெல்லாம் சரி. அதை வீட்டில் சொல்லியிருக்கலாமே? எனக்கு எதற்கு மணமேடையில் இந்த அவமானம் என்பதுதான் எதார்த்தமான கேள்வியாக இருக்க முடியும். நாயகனை புனித பிம்பமாக மாற்ற, அவர் நாயகியின் மனத்துயர் துடைத்து குடும்பத்துடன் சேர்த்து வைக்கிறார். இறுதியாக அவள், நாயகன் மீது கரிசனம் அக்கறையோடு காதலை சொல்லலாம் என்ற நிலையில் தனது கதையைச் சொல்லுகிறான்.

இதில் சிக்கலானது நாயகனின் பாத்திரம் அல்ல. அவனுக்கு தெரிய வேண்டிய பதில்.  அவள் தன்னைவிட்டுவிட்டு நிராகரித்துவிட்டு சென்றுவிட்டாள். அது ஏன் என்றுதான். நாயகியைப் பொறுத்தவரை அசட்டு துணிச்சல் இருந்தாலும்  அவளுக்கு உண்மையில் தனக்கு வேண்டியது என்னவென்றே தெரியவில்லை என்றுதான் காட்சிகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.  

நாயகி காதலனா, அப்பாவாக என தடுமாற்றத்தில் இருக்கும்போது அவளை ட்ரிக்கர் செய்யும் வேலையை அக்கா செய்கிறாள். ஆனால் அதை எதற்காக செய்கிறாள் என்று யாருக்கும் புரிவதில்லை. அந்த காட்சிக்கு பிறகு அக்கா எங்கேயும் வருவதில்லை. தங்கையின் வாழ்க்கை நாசமாவதற்கே அக்காதான் காரணமாக இருக்கிறாள். அவளை மணமுடிக்காத வேதனையில் காதலன், தங்கையை காதல் வலையில் வீழ்த்தி பிறகு சரியான நேரத்தில் கைவிட்டுவிட்டு செல்கிறான்.

படம் எங்கே பின்னே நோக்கி செல்கிறது என்றால், ஒரு பெண் அப்பா சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறார் என காட்சியில் சொல்லுகிறார்கள். அவள் தனக்கான இணை ஒருவரை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அதை நாயகன் கடுமையாக விமர்சித்து வீட்டில் பார்க்கும் மாப்பிளையை திருமணம் செய்வதுதான் நல்லது என போதிக்கிறார். அதை மெல்ல மெல்ல செய்கிறார். அதற்கு ஒரு காரணமாக அவர் தனது அக்கா பற்றிய கதையை சொல்கிறார். படத்தில் இருமுறை அவரது அக்கா பற்றி கூறுகிறார் நாயகன்.  ஆனால் நாயகிக்கு தனது அக்கா யாரை காதலித்தாள் என்பது தெரியவில்லை. ஒரு காட்சியில் சொல்வதைப் போல காதல் என்னவென்று தெரிவதற்குள் காதலித்துவிட்டேன் என வசனமாக தனது அறிவு முதிர்ச்சியின்மையை வெளிக் காட்டுகிறார்.

அக்காவை காதலித்தவன் நேர்மையானவன் என வைத்துக்கொண்டாலும் அவன் தனது காதலைப் பற்றி பெண்ணின் வீட்டில் வந்து சொல்லி பெண் கேட்பது நியாயமாக இருந்திருக்கும். இரண்டாவது முறையும் அவன் தங்கையை காதலிக்கும் சமயத்தில் கூட அவளைத்தான் காதல் பற்றி சொல்ல வற்புறுத்துகிறான். இதில் அவன் பெண்ணின் அப்பாவை பழிவாங்குகிறேன் என்று சவடால் வேறு…

அப்பா, மகள் மீது பாசம் வைத்திருக்கிறார். தவறுகளை பொறுக்கிறார் என்பதெல்லாம் சரி. ஆனால், அவளுக்காக அனைத்து முடிவுகளையும் வாழப் போகும் பெண்ணைக் கேட்காமலே எடுக்கிறார். அது எப்படி நியாயமாகும்? படத்தில் நாயகியை அறிவு முதிர்ச்சி இல்லாதவராக காட்டி நாயகன் தனது கருத்தை வலிமையாக்கி சொல்கிறார்.

மணிசர்மாவின் இசை, செக்யூரிட்டியின் காமெடி, வழக்குரைஞர் பெண்னை காதலிக்கும் காட்சிகள்  என சிறிதுநேரம் நாம் ரிலாக்சாக இருக்கிறோம்.

பெற்றோரின் பேச்சை பெண்கள் கேட்டாலே போதும்!

கோமாளிமேடை டீம்  


கருத்துகள்