மாணவர்களின் பசி தீர்த்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்- மகாலட்சுமி

 







இல்லம் தேடி கல்வி வகுப்பில் பசி தீர்க்கும் ஆசிரியை

பிரபஞ்சன் எழுதிய அமரத்துவம் என்ற சிறுகதையில், திருவேங்கடம் என்ற பள்ளி ஆசிரியர் வருவார். திண்ணைப் பள்ளிக்கூடத்தை தொடங்கி மாணவர்களை சேர்க்க பெற்றோர்களின் வீட்டில் பிச்சை எடுப்பது போல நின்று பிள்ளைகளை பள்ளிக்கு வரச்சொல்லுவார். இந்த சம்பவத்தை அவர் எழுதும்போதே மனம் உருகிவிடுவது போல இருக்கும். அதுமட்டுமல்ல, தனது மகளின் உயிரையே விட்டுக்கொடுத்து பள்ளியை வளர்ப்பார். இதுவும் அதே போன்ற இயல்பில் அமைந்த செய்திதான்.

 அங்கு ஆசிரியர் திருவேங்கடம் என்றால், இங்கு ஆசிரியர் மகாலட்சுமி. பதினொரு மாத கால பணியில் இவர் மாணவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் விதம் வியப்பானது. பள்ளி வகுப்புகளே மாணவர்களின் ஒட்டுமொத்த மன ஆற்றலை உறிஞ்சிவிடும்போது நான்கு மணிக்கு மேல் குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிப்பது என்பது மிக கடினமானது. இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதை அனைவரும் அறிவோம். இதில் இணைந்த பலரும் தன்னார்வலர்கள்தான். வேலை கடுமை, சம்பளம் குறைவு பற்றி பேசும்போது கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஆசிரியர் செய்யும் பணி ஆச்சரியம் தருகிறது.

உப்பிலிபாளையத்தின் நடுநிலைப்பள்ளிக்கு இல்லம் தேடி கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மகாலட்சுமி. இவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு என காய்கறி சாலட், அரிசியில் செய்த நொறுக்குத் தீனிகள், வேக வைத்த சுண்டல் என கொண்டு வந்து கொடுத்துவிட்டுத்தான் பாடங்களைத் தொடங்குகிறார். இதில் நாம் அறிய வேண்டியது, ஆசிரியர் மகாலட்சுமிக்கு சம்பளம் மாதம் ஆயிரம் ரூபாய்தான். வீட்டில் இவர் தயாரித்து மாதம் முழுக்க தயாரித்து வரும் உணவுகளுக்கு மட்டுமே ஆயிரத்து முந்நூறு ரூபாய் செலவாகி வருகிறது. எப்படி சமாளிக்கிறார். அதை மகாலட்சுமி விரும்பியே செய்கிறார்.

முதலில் இவரது வகுப்பில் இருபது மாணவர்கள்தான் இருந்தார்கள்.. அதுவும் மாலை நேரத்தில் மிகவும் சோர்ந்துபோய் பாடங்களை கேட்டு கண்களை மூடிக்கொண்டு இருந்தார்கள். சில நாட்களில் அவர்களின் பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டார் மகாலட்சுமி. எனவே வீட்டில் நொறுக்குத்தீனிகள், சிற்றுண்டிகளை தயாரித்து கொண்டு வந்து மாணவர்களுக்கு தரத் தொடங்கினார். ஆம் மாணவர்கள் பசியால்தான் துவண்டிருந்தனர். தொடக்கத்தில் 20 நபர்களாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 50 ஆக அதிகரித்திருக்கிறது.

இவரது செயல்பாடுகளைப் பார்த்ததுவிட்டு வட இந்தியர்களின் பிள்ளைகள் இரண்டும் வகுப்பில் சேர்ந்துள்ளன. இவர்களிடமும் மகாலட்சுமி பள்ளியில் சேர்வதற்கான  தேவை என்ன என்பதை விளக்கித்தான் மாற்றத்தை சாதித்துள்ளார். வட இந்தியப் பிள்ளைகள் இருவருக்கும் இந்தியில் பாடங்களைக் கற்றுத் தருகிறார்.

தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவரான மகாலட்சுமிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கணவர். தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக உள்ளார். அண்மையில் தீபாவளிக்கு, வகுப்பில் உள்ள வறுமையான குழந்தைகளுக்கு உடையும், இனிப்புகளையும் கொடுத்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டம் கடந்து, வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரும் திட்டத்தில் இருக்கிறார்.

உண்மையில் தன்னையே கரைத்து தீக்குச்சியாய் எரித்து விளக்குகளை ஏற்றும் ஆசிரியர்களால்தான் கல்வி என்பது அமரத்துவம் பெறுகிறது.

ஆங்கிலத்தில் தாமோதரன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 11.12.2022


கருத்துகள்