சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?

 












ஜட்ஜ்மென்டல் ஹை கியா

ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத்

இயக்கம் பிரகாஷ் கோவலமுடி

கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான்

 

குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை.  

சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில்  பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும்  என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்துபோகிறார்கள். பிறகு அவளை உறவினர்தான் வளர்க்கிறார்.

வீட்டில் செய்திதாள்களில் வரும் குடும்ப வன்முறை செய்திகளை எடுத்து பறவைகளின் விலங்குகளின் உருவம் செய்து நூலில் கட்டி தொங்கவிடுவதுதான் பாபிக்கு பிடித்த பொழுதுபோக்கு. அதுதவிர, சின்ன பட்ஜெட் படங்களுக்கு டப்பிங் செய்வதையும் காதலன் வருணுடன் சேர்ந்து செய்கிறாள். வருணைப் பொறுத்தவரை மனநலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, பாபியுடன் ஒருமுறையாவது செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டுமென முயல்கிறான்.

ஆண்களைப் பார்த்தாலே அப்பாவின் நினைவு வரும் பாபி. தனக்குள் எப்படி வருணை நுழைய விடுவாள்? ஆனால் வருண்தான் அவளுக்கு வேலை செய்வதற்கு பொருட்கள் வாங்கவேன உதவுகிறான். அவ்வப்போது  பாபி அவனுடைய உதவியை பெற்றுக்கொள்கிறாள். அவளின் மனநிலையை முழுக்க மாற்றுவது, அவளுடைய வீட்டில் ஒருபகுதியில் இளம் தம்பதிகள் குடிவரும்போதுதான்

பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் வேலை செய்யும் கேசவ் தனது காதலியோடு அங்கு வாடகைக்கு வருகிறான். அவன் செய்யும் காதல் லீலைகளைப் பார்த்து பாபிக்கும் அப்படி ஒரு காதலன் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறாள். அவளுக்கு ஓரிகாமி கலையில் ஆர்வம் இருப்பதை கூறினோம் அல்லவா, அதேபோல இன்னொரு  வினோத பழக்கம் உள்ளது. தான் டப்பிங் பேசும் படத்தின் நாயகியாக தன்னை நினைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வாள்.

மனதளவில் அவளது வாழ்க்கை என்பது அப்பா, அம்மாவை அடித்து சித்திரவதை செய்யும் காலத்திலேயே நின்றுவிட்டது. வெளியுலக வாழ்க்கை என்பது டப்பிங் வேலை மட்டும்தான். இந்த நேரத்தில் கேசவ் வருவது, அவனது காதல் நடவடிக்கைகள் பாபியை ஈர்க்கிறது. இந்த நேரத்தில் அவளுக்கு அவன் மீது சற்று சந்தேகமும் வருகிறது. மனநல குறைபாட்டிற்கு காப்பகத்தில் இருக்கும்போது கொடுக்கும் மருந்துகளையும் தூக்கம் வருகிறது என அவள் சாப்பிடுவதில்லை.  இதன் பக்க விளைவாக கரப்பான் பூச்சி அவள் பார்க்குமிடங்களில் தெரிகிறது. நிஜமான யதார்த்த சூழ்நிலையில் கற்பனை பாத்திரங்கள் தோன்றி பேசுவதுதான் அவளது குறைபாடு.

இந்த நிலையில்தான் காதல் தம்பதிகளில பெண் மட்டும் நெருப்பிடப்பட்டு இறக்கிறாள். பாபி, கேசவ்தான் தீ வைத்து கொன்றான் என சொல்லுகிறாள். காவல்துறை முதலில் அவள் சொல்வதை கேட்டாலும் பின்னர், அவள் மனநலம் கெட்டுவிட்டது என புரிந்துகொண்டு கேசவ்வை நம்பி அவனை வழக்கிலிருந்து விடுவிக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் கேசவ் பாபி மீது கடுமையான கோபம் கொள்கிறான். பிறகு பாபி, லண்டன் செல்கிறாள். அங்கு அவளது தங்கை வாழ்கிறாள். அவள் மணமாகி குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளது கணவன் வேறு யாருமல்ல பாபியின் வீட்டில் ஒத்திக்கு இருந்த கேசவ்தான். இந்த முறையும் பாபி உறுதியாக நம்புகிறாள், கேசவ் தனது தங்கை ரீமாவை கொல்ல நினைக்கிறான் என்று. அதை எப்படி அவள் நிரூபிக்கிறாள், தனது தங்கையைக் காப்பாற்றுகிறாள் என்பதே படத்தின் இறுதிக் காட்சி…

படம் நெடுக அமைதியாக வரும் கேசவ் – ராஜ்குமார் இறுதியில் எடுக்கும் வேடம் யாரும் நினைத்தே பார்த்திராத ஒன்று. இந்த கையில் பெண்களுக்கான இடம்தான் அதிகம். இதில் தனது பாத்திரத்தை மட்டும் கவனப்படுத்தி நடித்த ராஜ்குமார் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஆள்.

மென்டலாக இருந்தாலும் அவர்கள் மீது முன்முடிவுகள் வைக்காதீர்கள் என பாடம் சொல்லுகிறது படம்.

செயல் முக்கியம். தீர்ப்பு அல்ல

கோமாளிமேடை டீம்


கருத்துகள்