என்கிரிப்சன் செய்யப்பட்ட கொலைத்தகவல்கள் - ஸோடியாக் கொலைகாரர்
வாழ்க்கையே
பா.வெங்கடேசன், கோணங்கி ஆகியோரின் நாவல்கள் போல இருக்கிறதென்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
ஆனால் ஜோடியாக் என்ற கொலைகாரர் தனது கொலைகளை அப்படித்தான் செய்து வந்தார். அமெரிக்காவில்
குறிப்பாக பெண்களைக் கண்டால் மட்டும் குத்துக்கு பத்து என்பது போல கத்தியால் கூடுதலாக
குத்திக் கொன்றார். அவரை காவல்துறை என்ன முயற்சி செய்தும் பிடிக்கமுடியவில்லை.
இன்று ஜோடியாக்
என அமேசானில், கூகுள்பிளே புக்ஸில் டைப் செய்து தேடினால் நிறைய நூல்கள் கிடைக்கும்.
ஜோடியாக் கொலைகாரர் புகழ்பெற்ற காலம் 1968 முதல் 1984 காலகட்டமாகும். ஜோடியாக் கொலைகாரர்
தான் யார், செய்த கொலைகளைப் பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான்
காரியங்களை செய்தார். ஆனால் கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம் என்ன, அவர் கோடிங்
பற்றி தெரிந்த ஆள். எனவே தனது கடிதங்களைக் கூட கோடிங்காக எழுதி அனுப்புவார். கூடவே
பாழும் பத்திரிகளை இன்று வரை இரண்டுபிரதி நூல் அனுப்புங்கள். படித்து விமர்சனம், மதிப்புரை
எழுதுகிறோம் என்பார்களே என்று ஸ்டாம்புகளையும் கூடவே அனுப்பி வைத்த நல்ல மனிதர்தான்
ஜோடியாக். ஆனால் என்ன கோபம் வந்தால் மட்டும் எதிர்படுபவர்களை பொசுக்கென குத்திவிட்டு
மாயமாகிவிடுவார்.
கொலை வரலாற்றைப்
பார்ப்போமா, 1968ஆம் ஆண்டு இரண்டு தம்பதிகளை துப்பாக்கியல் ஜோடியாக் சுட்டார். அனைவருமே
செத்துவிடுவார்கள் என நினைத்துத்தான் சுட்டார். ஆனால் மூன்று பேர் இறந்துவிட ஒருவர்
பிழைத்தார். அவரிடம் காவல்துறை கிணற்றை தூர்வாரும் பாதாளகரண்டி போல விசாரணையை தொடங்கினர்.
ப்ச்… என்ன செய்வது அவர் அடைந்த பீதியில் அடையாளம் கூட சொல்ல முடியாத நிலை.
பிறகுதான்
சான் பிரான்சிஸ்கோ பத்திரிகைகளுக்கு மூன்று கோடிங்குகளைக் கொண்ட கடிதங்கள் வந்தன. இவற்றை
அவர்களும் அப்படியே பிரசுரித்தனர். இதை யார் தீர்க்கிறார்களோ அவர்களுக்கு ஜோடியாக்
என்ன சொல்கிறார் என புரியும். இதையும் பள்ளி ஆசிரியரான டொனால்ட் ஹார்டன், அவரது இணையர்
ஆகிய இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர்.
இருப்பதிலேயே
மனிதர்கள்தான் அபாயகரமானவர்கள். அவர்களை தாக்கி கொல்லும்போது நான் புத்துயிர் பெறுகிறேன்.
சொர்கத்திலிருந்து மீண்டும் நான் பிறப்பது போல உணர்கிறேன். கொல்பவர்கள் என்னுடைய அடிமைகளாக
இருப்பார்கள். என்னுடைய பெயரை உங்களுக்கு கூற மாட்டேன். அப்படி சொன்னால் என்னுடைய செயல்பாட்டை
தடுப்பீர்கள் என்று கூறியிருந்தார்.
1969ஆம்
ஆண்டு பெரிஎஸா என்ற ஏரிப்பகுதி. அங்கு ஒரு ஜோடி காதலர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை
நோக்கி ஒரு உருவம் வந்தது. ஆணிடம் தன் ஆயுதத்தைக் காட்டியபிறகு இருவரையும் சேர்ந்து
நிற்கச்சொல்லி கத்தியால் இருவரையும் தாக்கினார் அந்த மர்ம நபர். அதிலும் அந்த பெண்ணுக்கு
மட்டும் பத்து குத்து. அந்த இடத்திலேயே பெண் உயிரிழந்தார். ஆண் மட்டும் உயிர் தப்பி
போலீஸ் உதவி கேட்டு சென்றார். அவரிடம் அந்த நபர் உன்னைத் தாக்கி காதலியைக் கொன்றவன்
பெயர் ஜோடியாக் என்று சொல் என்ன கூறிவிட்டு சென்றிருக்கிறார் மர்ம நபர். காவல்துறைக்கு
அப்போதும் அது விளையாட்டா, வினையா என்று தெரியவில்லை. பிறகும் ஒரு டாக்சி டிரைவரைக்
கொன்று அவரது ரத்தக்கறை கொண்ட சட்டையின் ஒரு துண்டை பத்திரிகை ஆபீசிற்கே அனுப்பினார்.
காவல்துறைக்கு யார் மீது கோபம் கொள்வது என்றே தெரியவில்லை. அவர்களும் தேடாத குப்பைத்
தொட்டியில்லை. கோடிங்குகளை புரிந்துகொள்ள படிக்காத நூல்களில்லை. ஆனால் கொலையாளியின்
உடல் உரோமத்தைக் கூட தொட முடியவில்லை. ஜோடியாக்கும் காற்றில் மறைந்தது போல காணாமல்
போய்விட்டார்.
ஜாக் தி
ரிப்பர் என்று பிரிட்டன் கொலையாளி பற்றி சொல்லுவார்கள். அதேபோல ஜோடியாக் கொலையாளியும்
வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். அவர் காலத்திலும் சரி, இப்போதும் சரி ஜோடியாக் இடம்பெறாமல்
ஒரு குற்றநூலை எழுதிவிட முடியாது. அப்புறம் என்ன வாழும்போது புகழுடம்பு எய்திவிட்டார்.
ஆன்மாவுக்கு அதுதானே வேண்டும்?
கருத்துகள்
கருத்துரையிடுக