குற்றங்களை செய்வதற்கான முன்தயாரிப்பு கற்பனைகள் - முப்பொழுதும் கொலைக் கற்பனைகள்

 












ஒருவர் மனதில் வன்முறை எண்ணம் வருகிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். உடல், மனம் ஒத்திசைவு குறைந்தவர்கள், தனது உடலின் மனதின் எல்லைகளைப் புரிந்தவர்கள் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தால் ஆராய்ச்சி, கதைகள் என செல்லும். ஆனால் இன்னொரு இருள் பக்கம் நகர்ந்தால் அது ஒருவழிப்பாதை. இருட்டில் அப்படியே நகர்ந்து செல்லவேண்டியதுதான். நரகத்தின் பாதை அது. சமூகத்தை விட்டு தனியாக ஒருவர் இருக்க நினைத்தால், அதை குணப்படுத்தும் மருந்துகள் மனநல மருத்துவத்தில் சிகிச்சையில் கிடையாது. அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஒரே சிகிச்சை.


இந்த ஏரியாவில் கொலைகள் நடந்தால், தொடர் கொலைகாரர் என ஒருவர் அறியப்பட்டால் அது நான்தான் என தனது நண்பனிடம் துணிச்சலாக கூறி கொலை செய்வதில் இறங்கினார் ஜாசன் மாசே. இருபது வயதில் இளைஞர், இளம்பெண் என இருவரை படுகொலை செய்தவர். கொலைகளை ஒரே நாளில் செய்தார். கற்பனையும் அதில்  எல்லை இல்லாத வன்முறையும் கொண்ட காட்சிகளைக் கண்டு கொலைகளை செய்யத் தொடங்கியவர்தான் ஜாசன்.


 முன்னரே ஜாசன், விலங்குகளை சித்திரவதை செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதைப் பார்த்து பீதியான ஜாசனின் அம்மா, அவரை மனநல மருத்துவரிடம் கூட்டி வந்தார். மருத்துவர் கூட ஜாசனை வெளியே விடாமல் மருத்துவமனையில் தங்கவைக்க பெருமுயற்சி செய்தார். ஆனால் நிர்வாகம் அப்படி ஆபத்தான ஆள் ஒன்றும் கிடையாது என ஜாசனுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை.  ஜாசன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புனித பயணத்தை தொடங்குகிறேன். எனது பெயரை சமூகம் என்றுமே மறக்காது என கொலை உற்சவத்தைத் தொடங்க ஆர்வமாக இருந்தார். மருத்துவர் கென்னத், ஜாசனின் இரு நோட்டுபுத்தகங்களை எடுத்து படித்தார். 


அதில் அவர், தான் கொல்ல வேண்டிய பெண்களின் டாப் 10 பட்டியலையும் எப்படி கொல்லவேண்டும் என்பதையும் கற்பனை செய்து வைத்திருந்தார். அதைப் படித்த மருத்துவருக்கு பீதியானது. அவரின் அடுத்தடுத்த திட்டங்கள் எல்லாம் நாட்டின் ராணுவத்தளபதிகள் போருக்கு தயாராவதைப் போன்றவை. கொலைகளுக்கு தேவையான ஆயுதங்களை எங்கு எப்படி வாங்குவது என்பது வரையில் நோட்டுகளில் எழுதி வைத்திருந்தார். அவரால் சமூகத்திற்கு ஆபத்து வரும் என மருத்துவர் கென்னத் உணர்ந்தார். ஆனால் அவரது உளவியல் ஆய்வை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. அப்போது ஜாசனுக்கு பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது.


1989ஆம் ஆண்டு ஜாசன், அனிதா மெண்டோசா என்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தார். எப்படி தெரியுமா? அந்தப் பெண் ஆசையாக வளர்த்த நாயைக் கொன்று ரத்தத்தைக் காரில் தெளித்தார். இறந்த நாயின் உடலை திருஷ்டிக்கான எலுமிச்சம்பழம் போல வாசல் கதவின் முன் கட்டி வைத்தார். தான் எப்படியெல்லாம் கொலை செய்ய நினைத்தேன் என்பதை போன் செய்து அனிதாவிடம் கூறுவது ஜாசனின் ஹாபி. 1989 ஆம் ஆண்டு தொடங்கி 1993 வரையில் தான் கொன்ற விலங்குகள் மனிதர்கள் பற்றிய 500 பக்கங்களுக்கு பல்வேறு விளக்கங்களை டெய்லி பூந்தி அளவுக்கு துல்லியமாக எழுதி வைத்திருந்தார் ஜாசன்.


 அவர் தேர்ந்தெடுத்த சிறுமிகளின் வயது பத்து முதல் பதிமூன்று வயதுதான். ஒரு நேரத்தில் ஒரு சிறுமி என தேர்ந்தெடுத்து கொன்று வந்தார். 41 பூனைகள், 32 நாய்கள்,  7 பசுக்கள் ஆகியவற்றை மனிதர்களுக்கு இணையாக வேட்டையாடி அதன் தலைகளை மட்டும் வெட்டி ட்ராபி போல தன்னுடன் வைத்திருந்தார் ஜாசன். 


 அமெரிக்காவில் மிகப்பெரிய தொடர் கொலைகாரர் என்ற பட்டம் எனக்குத்தான் வரவேண்டும். இருபது ஆண்டுகளில் 700 பேர் என திட்டமே தீட்டிவைத்திருந்தார். ஒருகட்டத்தில் கொலையாளியாக இருப்பது சலித்துவிட்டது. இதை மாற்ற கொலைசெய்து பெண்களின் இரத்தம் குடித்து, மூளை, இதயம் ஆகியவற்றை சாப்பிடவேண்டும் என குறிப்பு எழுதி வைத்தார். தன்னை சாத்தானுக்கு அர்ப்பணித்துவிட்டதாகவும் கூறினார். 2001ஆம் ஆண்டு ஜாசனை நீதிமன்றம் தூக்கிலிட்டது.


ஜாசனுக்கு அவர் தந்தை யாரென்று தெரியாது. தன்னைப் பார்த்துக்கொண்டவர்கள், நண்பர்கள் என யாரிடமும் அவருக்கு ஒட்டுதல் உருவாகவில்லை. அவரது அம்மா ஜாசனை புறக்கணித்து தண்டனை கொடுத்து வளர்த்ததால் பெண் என்றாலே வெட்டுடா அவளை, குத்துடா அவளை என கோபம் உருவாகி வந்திருக்கிறது. வன்முறை மூலம் பிரச்னைகளை தீர்க்கலாம் ஏன்பதை ஜாசனின் அம்மா சொல்லித்தந்திருக்கிறார். அதாவது மறைமுகமாக. அதன் விளைவுதான், ஜாசனின் செயல்பாடு அமைந்தது.


ஜாசனின் அம்மா சிறுவயதில் அவரை படுத்திய பாட்டிற்கு ஜாசனுக்கு கொலைகாரரன் என்ற பெயர் உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தது. அப்படி இருந்தால் தான் பலசாலியாக இருப்போம் என்று நம்பினார்.  இன்று ஜாசனைப் பேசாத குற்றவியல் நூல்களோ, உளவியல் நூல்களோ இல்லவே இல்லை என்று கூறலாம். தனிமையில் வாழ்ந்த மனநலம் குன்றிய சிறுவன் தேடிய பாதை தவறாகிப் போனதால் ஏராளமான உயிர்கள் பறிபோனது. இதெல்லாவற்றையும் விட அவனது வாழ்க்கையும் வீணாகிவிட்டது.

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்