அக்காவின் சினிமா கனவை நிறைவேற்ற அப்பாவுடன் போராடும் மகள்! - ஆ அம்மாயி குறின்ஞ்சி மீக்கு செப்பாலி

 












ஆ அம்மாயி குறின்ச்சி மீக்கு செப்பாலி

இயக்கம் மோகன் கிருஷ்ணா இந்திரகாந்தி

இசை விவேக் சாகர்

கீர்த்தி ஷெட்டி, ஶ்ரீகாந்த் அய்யங்கார், வெண்ணிலா கிஷோர்

சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் கதை. வணிகப் படங்கள் எடுக்கும் இயக்குநர், குப்பைத்தொட்டியில் கிடந்து பிலிம் ரோல் ஒன்றை எடுக்கிறார். அதை வீடியோ மாற்றும்போது அழகான பெண் ஒருவரைப் பார்க்கிறார். அந்த பெண்ணை அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அந்த பெண் நீங்கள் பார்த்த படத்தில் உள்ள பெண் நானல்ல, தனது அக்கா என்கிறார். அவரது அக்காவிற்கு என்ன ஆனது, பிலிம் ரோல் எதற்காக குப்பையில் வீசப்பட்டது என்பதை அறிந்துகொள்ளும் பயணம்தான் படத்தின் மையக் காட்சி.

வணிக வெற்றிகளை பெறும் இயக்குநர், தனது மனம் சொல்லும்படி ஒரு படத்தை எடுக்க நினைக்கிறார். அதில் வரும் பெரிய தடை தனக்குப் பிடித்த பெண் நாயகியாக  வரவேண்டும் என நினைக்கிறார். ஆனால் அந்த பெண் ஒரு கண்மருத்துவர். அவள் மட்டுமல்ல அவளது குடுபத்தாருக்கே சினிமா என்றால் உடம்பில் அமிலம் தடவியது போல. அவ்வளவு எரிச்சல்.

அவர்கள் அப்படி எரிச்சல்படவும் கோபம் கொள்ளவும் காரணமான ஒரு சம்பவம் கடந்தகாலத்தில் புதைந்துகிடக்கிறது. அதை இளம் இயக்குநர் என்னவென்று அறியாமல் திறந்துவிட, அதனால் அந்த குடும்பம் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல்  தடுமாறுகிறது. இதை சமாளித்து இளம் இயக்குநர் கண் மருத்துவரை தனது படத்தில் நாயகியாக எப்படி நடிக்க வைத்தார் என்பதுதான் படத்தில் நீளமான காட்சிகளாக நீள்கிறது.

சினிமா துறையில் காஸ்டிங் கவுச் பிரச்னையை தைரியமாக இயக்குநர் பேசுகிறார். படத்தின் கதையில் இளம் இயக்குநருக்கு பெரிய பிரச்னைகள், முரண்கள் ஏதும் கிடையாது. ஆலேக்கியா என்ற கண் மருத்துவரை நடிக்க வைக்க முயல்கிறார். அவர் சம்மதிக்க மாட்டேன்கிறார். அவரை சம்மதிக்க வைக்க படாதபாடு படுகிறார். இறுதியாக தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லுகிறார். அதில்தான் ஆலேக்கியாவுக்கு இயக்குநர் நவீன் மேல் பிடிப்பு வருகிறது. இது மெல்ல காதலாகிறது. அங்குதான் சினிமாவை எடுத்து முடிப்பதா, ஆலேக்கியாவை காதலித்து மணம் செய்வதா என சிறு தடுமாற்றத்தை சந்திக்கிறார். அதுவும் ஆலேக்கியாவிற்கு கல்யாண மாப்பிள்ளை பார்த்து அந்த மாப்பிள்ளை நடிப்பு ஆசையில் நடிக்க வந்து அறிமுகமாகும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கதையே மெலோடிராமா என்பதால் காட்சிகளை நிதானமாக பார்த்தால் போதுமானது. கீர்த்திஷெட்டிக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள். அதையும் அவர் இரு பாத்திரங்களாக சிறப்பாக நடித்து பயன்படுத்தியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை என படத்தை சற்றேனும் சலிப்பு இல்லாமல் பார்க்கச் செய்கிறார் என்றால் அது இசையமைப்பாளரான விவேக் சாகரின் சாமர்த்தியம்தான். இசையை படத்தின் காட்சிகளாக பார்க்கும்போது எப்படி சிறப்பாக வேலை செய்திருக்கிறார் என்பதை உணர முடியும்.

ஶ்ரீகாந்த் அய்யங்கார் பிறர் சொல்வதை நினைத்து கவலைப்படும் அப்பாவாக நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் அவர் மகளின் ஆசையை அவர் ஏன் மறுக்கிறார் என்பதற்கான காரணம் தெளிவாக இல்லை. ஆலேக்கியா ஒருமுறை அவரை ஈகோ பிடித்தவர் என சொல்லி தெளிவாக்குகிறார்.

ராகுல் ராமகிருஷ்ணாவைப் பொறுத்தவரை இந்த படத்தில் அவர் குணச்சித்திர வேடத்திற்கு மாறிவிட்டார். நகைச்சுவைக்கு ஒட்டுமொத்த அத்தாரிட்டி, வெண்ணிலா கிஷோர்தான். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். வசனம் குறைவாக, உடல்மொழியில் நிறைவாக நகைச்சுவையை முயன்றிருக்கிறார்.

குத்துப்பாட்டு, சண்டை இல்லையென்றால் தெலுங்கு படம் இல்லையென்று சொல்லிவிடுவார்கள் என உதவி இயக்குநர்கள் கூறியிருப்பார்கள் போல. அதற்கெ னவே சினிமாவில் வரும் குத்துப்பாட்டு என ஒரு பாட்டை உள்ளே நுழைத்த இயக்குநர், சிறு சண்டை ஒன்றையும் வைத்துவிட்டார். ஆனால் உண்மையில் படத்தில் இவை தேவையில்லை என்பதை பார்த்த யாவரும் ஏற்றுக்கொள்வார்கள். வணிகத் தேவைக்காக  மோகன் கிருஷ்ணா இந்திரகாந்தி இப்படி இறங்கியிருக்க வேண்டாம்.

ஈகோ யுத்தம்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்