குடும்பங்களை அழிக்கும் டெர்மினேட்டர் - அனடோலி
மனிதர்கள்
அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் சூழ்நிலை கொந்தளிப்பாக மாறும்போது அவர்களின் உள்ளே
உள்ள ஆவேசம் வெளியே தெரியவரும். காதலோ, நட்போ, தொழிலோ ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு ஏமாற்றம்
தருகிறது. சில சமயங்களில் ஒட்டுமொத்த உலகமே தன்னை வஞ்சித்ததாக ஒருவர் உணரும்போது வஞ்சகர்
உலகத்தை பழிவாங்க குற்றங்களில் ஈடுபடுகிறார். இந்த வகையில் கோபம், வன்மம், பழிக்குப்பழி,
உடலுறவுக்கான சாகச உணர்வு ஆகியவை மனிதர்களை பெரும்பாலும் கொலைகளை செய்ய வைக்கிறது.
பாகிஸ்தானின்
லாகூரில் ஜாவேத் இக்பால் இப்பபடிப்பட்ட மனிதர்களில் ஒருவர். தெருவில் வாழும் ஆதரவற்ற
சிறுவர்களுக்கு உணவு, இருப்பிடம் தருகிறேன் என கூட்டிச் சென்று கொன்று அமிலத்தில் கரைத்துவிடுவார்.
இரு சிறுவர்களை அடித்ததாக அவர் மீது காவல்துறை புகார் இருந்தது. ஆனால் காவல்துறை அதை
தீர விசாரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் நூறு தாய்களை அழவைக்கும் செயலை செய்தார்.
ஆம். நூறு சிறுவர்களைக் கொன்று உடலை அமிலத்தில் கரைத்து அந்த நீரை பாதாள சாக்கடையில்
விட்டார். நான் நினைத்தால் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை கொன்றிருக்க முடியும்.
ஆனால் என் மனதில் நூறு தாய்களை அழ வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்கான திட்டம்
இருந்தது. அதை செய்துவிட்டேன். இனி நீங்கள் என்னை கைது செய்யலாம் என காவல்துறை அலுவலகத்திற்கு
கடிதம் எழுதிய தில்லான இதயம் இக்பாலுடையது.
இஸ்லாமிய
நீதிமன்ற விசாரணை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்,
கைக்கு கை என ஏதாவது சொல்லி தீர்ப்பு சொல்லுவார்கள். இக்பால் எப்படி சிறுவர்களை கொலை
செய்தாரோ அதே முறையில் அவரைக் கொல்ல தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால் இக்பால் மிகவும்
வேகமான ஆள். சிறையில் வைக்கப்பட்டபோது சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். அல்லாஹ்
இக்பாலுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை கையளித்தார் என்ன நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
தனது மனைவியை
பலரும் விலைமாது, காசுக்கு போகிறவள் என கூறியதால் ஈரான் நாட்டைச் சேர்ந்த சயீத் என்பவர்
கொலைகாரர் ஆனார். அவரது மனைவியை தவறுதலாக விலைமாது என மக்கள் கூறியது சயீத்தை உறக்கமிழக்கச்செய்தது.
அவர் போகுமிடமெல்லாம் சயீத்தின் மனைவி பற்றிய வசைகள், ஏளனங்கள், இளிப்புகள் தொடர்ந்தன.
இதனால் இந்த நகரில் விபச்சாரிகள் அதிகரித்து விட்டனர். அவர்கள் இருப்பதால்தானே எனது
மனைவிக்கு இப்படி ஒரு மோசமான கெட்டபெயர் ஏற்பட்டது என முடிவுக்கு வந்தார். இரண்டு ஆண்டுகளில்
பதினாறு விலைமாதுக்களை கொன்று அவர் வாழும் தெருவிலேயே புதைத்தார். மனைவிக்கு அவமானம்
என்று பழிவாங்க துடித்தவர், விலைமாதுக்களை கொல்வதற்கு முன்பு உடலுறவு கொண்டுவிட்டு
பிறகுதான் கொன்றார் என்பதை எப்படி புரிந்துகொள்வது? டாக்டர் நாரயண ரெட்டிதான் இதற்கான
பதிலைக் கூறவேண்டும். நீதிமன்றம் சயீத்தின் உயர்ந்த சமூக நோக்கை புரிந்துகொண்டு சட்டப்படி
அவருக்கு தூக்குதண்டனை விதித்தது. 2002ஆம் ஆண்டு சயீத்தில் சமூக லட்சியம் முடிவுக்கு
வந்தது.
தனிமை,
புறக்கணிப்பு, நிராகரிப்பு ஆகியவற்றை மனிதர்கள் அனைவரும் எளிதாக கையாள முடியாது. முழுக்க
கோபமும், வன்மமும் நிறைந்த மனிதர்கள் நமது அருகில் கூட இருக்கலாம். அவர்களை தேவையான
நேரத்தில் ஆற்றுப்படுத்தி இருந்தால் சமூகத்திற்கு
நேரும் ஆபத்தை தடுத்திருக்கலாம். ஆனால், அப்படி பெரும்பாலும் நடப்பதில்லை. இதுதான்
நமது சமூகத்தின் சாபம். இதற்கான விலைகளை அப்பாவிகள் கொடுக்கவேண்டியதிருக்கிறது. இதை
எல்லோரும் புரிந்துகொள்ள முடியாது.
முதுகுத்தண்டில்
வெயிலின் சூடு தகித்துக்கொண்டிருப்பவனை எளிதில் சமாதானம் சொல்லி அமைதிபடுத்த முடியாது.
உக்ரைனில் வாழ்ந்த அனடோலி அப்படி ஒருவர்தான். சிறுவயதில் ஒரு வயதிற்குள்ளாகவே அம்மா
இறந்துவிட, அவரின் அப்பா எடுத்த முடிவு சற்று அதிர்ச்சியானது. மூத்த பிள்ளையை தன்னுடன்
வைத்துக்கொண்டு இளைய பிள்ளையை காப்பகத்திற்கு அனுப்பிவிட்டார். ஒருவயது முதல் அனடோலி
ஆதரவற்றோர் காப்பகத்தில்தான் வளர்ந்தார்.
தனிமையாக
வாழ்ந்ததும், காப்பகத்தின் சூழலும் அவரை கடுமையான வெறுப்பிற்குள் தள்ளியது. வெறுப்பின்
வீரியம் எப்படி சென்றது என்றால், குடும்பமாக மகிழ்ச்சியாக இருப்பவர்களை கொன்று தீவைத்து
எரித்தால் என்று நினைத்தார். அனடோலி பின்னாளில் இதை சாதித்தார். ஏழு ஆண்டுகளில் 52
பேர்களை கொன்றார். ஒரு வீட்டுக்குள் நுழைபவர், அவர்களை வரிசையாக உட்கார வைத்து சுட்டுக்கொல்வார்.
ரத்தச்சேறு படிந்த வீட்டை தீ வைத்து கொளுத்துவார். குடும்ப புகைப்படங்களை கண்டால் கோடாரியால்
வெட்டி துண்டு துண்டாக்குவார். இதோடு விடுவதில்லை. கொலையான வீட்டுப்பக்கம் ஆட்கள் இருப்பார்கள்.
அவர்கள் ஏதாவது புகார் கொடுத்தால் என்ன செய்வது? எனவே அவர்களையும் எரித்து, கோடாரியால்
வெட்டி கொல்வது வழக்கம்.
பொதுவாக
குடும்பமாக கொலை செய்யும் அனடோலிக்கு டெர்மினேட்டர் என்று புனைப்பெயர் உண்டு. தனியாக
கைவிடப்படும் மனிதன், தான் உயிர்வாழ்வதற்கு வன்முறை ஒன்றுதான் வழி என முடிவெடுக்கும்
நேரம் உண்மையில் சபிக்கப்பட்டதுதான். வேறென்ன சொல்ல?
கருத்துகள்
கருத்துரையிடுக