ஊழல் செய்வர்களை பாம் வைத்து கொல்வான் கோட்ஸே! - கோட்ஸே - சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி

 










கோட்ஸே

சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி, பிருதிவிராஜ்

director - gopi ganesh pattaphi

ஒரு தொழிலதிபரின் வீட்டில் இந்தி பேசும் கொள்ளைக்காரர்கள்  நுழைந்துவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கர்ப்பவதியான பெண்ணைக் காக்க வைஷாலி என்ற பெண் அதிகாரி முயல்கிறார். ஆனால் அதற்குள் மேலதிகாரி தலையிட்டு ஒருவனை சுட்டு வீழ்த்த இன்னொருவன் கர்ப்பிணியின் கழுத்தை அறுத்துவிடுகிறான். இந்த சம்பவம் நடந்தபிறகு ஐஸ்வர்யா குற்றவுணர்ச்சி கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் மேலதிகாரி அதை ஏற்கவில்லை.  பிறகு அவரை  மாநில அரசு உயர் அதிகாரிகள் அவசர வேலைக்காக என்று அழைக்கிறார்கள். அழைத்தால் அங்கு ஒருவர் தான் வைஷாலி  என்ற அதிகாரியிடம் மட்டும்தான் பேசுவேன் என்கிறார். அங்கு பணயக் கைதியாக இருப்பவர், ஐஸ்வர்யாவின் துறை தலைவர். 

தன்னை கோட்ஸே என்று சொல்லிக் கொண்டு முக்கியமான முதல்வருக்கு நெருக்கமான ஆட்களை கடத்தியவர் யார், அவரது உண்மையான அடையாளம் என்ன, ஏன் அப்படி கடத்தி சிலரைக் கொல்கிறார், பிறரை சித்திரவதை செய்கிறார் என்பதே படத்தின் முக்கியமான பகுதி.

மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களது கனவுகளைக் கொன்று வளரும் அரசு அமைப்பின் லஞ்ச பிரச்னையை படம் பேசியிருக்கிறது. இதில் படம் எங்கே தடுமாறுகிறது என்றால், படத்தின் நாயகனே என்ஆர்ஐதான். அதாவது, ஆந்திர தேசத்தின் கிராமத்தில் இருந்து இங்கிலாந்திற்கு சென்று தொழில் தொடங்கி பில்லியனராகிறார். பிறகு ஒருநாள் இந்திய அதிகாரிகள், அமைச்சர்கள் குழு தொழிலதிபரைச் சந்தித்து அவரது பூர்விக மாநிலத்தில் தொழில் தொடங்க வற்புறுத்துகிறார்கள்.  இந்த இடம்தான் சங்கடமானது. ஆரம்பிக்கலாம் என வாய்ப்பிருந்தால் முதலிலேயே தான் படித்த இடத்திலேயே தொழிலை தொடங்கியிருப்பாரே…

இந்தியாவில் அரசியல் எப்படி, சாதி,மதம் எப்படி செல்வாக்காக உள்ளது என தொழிலதிபருக்கு தெரியாமல் இருக்கும் என்பதை நம்ப முடியவில்லை. தொழிலதிபரின் பழிவாங்குதல்தான் படமே. இதில் அனைத்துமே அறைக்குள் நடப்பவையாக இருப்பது மனதை சோர வைக்கிறது. ஆனால் படத்தை கண்சோராமல் பார்க்க வைப்பது சத்யதேவும், ஐஸ்வர்யா லட்சுமியும்தான்.

முக்கியமான அதிகாரிகளை கடத்திவிட்டார்கள் சரி. ஆனால் சத்யதேவ் யாரென்று தெரிந்துவிட்ட முதல்வர் நமட்டுச் சிரிப்புடன் கடைசிக் காட்சி வரை உட்கார்ந்து இருந்தே சாகிறார். எதற்கு அப்படி இருக்கவேண்டும் நாயகனின் ஊர்மக்களை அழிப்பதாக கூட நாயகனை மிரட்டி கடத்தப்பட்டவர்களை மீட்டிருக்கலாம்.  ஆனால் அவரும் சரி அவரது ஆட் களும் சரி கணினியின் தேடுகிறார்கள். தேடுகிறார்கள். இரண்டரை மணி நேரமாக தேடுகிறார்கள்.

ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகள் மாநிலம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களுக்கு தலைவராக முதல்வர் இருக்கிறார். அவர்கள் அனைவரையும் போட்டுத்தள்ளிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என யோசிக்கும் புத்திசாலிதான் நாயகன். ஒருவகையில் இது சமூகம் சார்ந்து யோசிக்கும் மனிதனாக இருந்து மெல்ல தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்கும் மனிதனாக கோட்ஸே மாறுவதாகி முடிகிறது படம். அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. ஆளுநரிடம் சென்று உளவுத்துறை ஆட்கள் அதாவது வைஷாலி ஊழல் விவரங்களை அழிக்கிறார். அவருக்கு ஏதேனும் வசனம் வேண்டுமே, ரப்பர் ஸ்டாம்ப் பதவியோடு பவரைக் காட்டுகிறேன் என உறுமுகிறார். அவரே மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்தான். அவரது ஆட்சி என்பது ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆட்சிதான். இதில் நகைச்சுவை ஆளுநர் பதவி என்பது மாநில அரசைக் கண்காணிப்பதற்கானது. ரப்பர் ஸ்டாம்ப் என்று கூறுவது கேலியாக அதிகாரமில்லாத தன்மையை குறிப்பதற்காகவே. அதையே ஆளுநர் சொல்லி நடவடிக்கை எடுக்கிறேன் என்பது... தன்னே ஆளுநர் சுயகேலி செய்துகொள்கிறாரா என யோசிக்க வைக்கிறது.

மகாத்மாவை நாடகத்தில் கூட கொல்லாதவன்தான் விஸ்வநாதன் ராமச்சந்திரா. ஆனால் இறுதியில் துப்பாக்கி எல்லாம் எதற்கு டைம்பாம் பெல்ட்டிற்கு மாறுவோம் என அப்டேட்டாகி முதல்வர் இன்னும் சில அமைச்சர்களை மனித வெடிகுண்டாகி வெடித்து கொல்கிறார். அப்படி செய்வதால் வேலையில்லாத திறமையான படித்த இளைஞர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை திரைப்பட இயக்குநர் நமக்கு கூறவில்லை. பொதுநலனுக்காக பாடுபடும் ஒருவன் முதலில் இழப்பது தனது மனநிம்மதியைதான் என பெரியார் கூறியிருக்கிறார். அது அனுபவத்தால் உருவான கருத்து என்றே கொள்ளலாம். அப்படியிருக்கையில் சமூகம், இந்தியா, வேலை என மகத்தான சிந்தனை என கோட்ஸேவின் கர்ப்பிணி மனைவியே பாராட்டும் படி இருந்துவிட்டு பிறகு தடம் மாறி செல்வது ஏனென்று புரியவில்லை. ஊழல் என்பது சிந்தனை, பழக்கமாக மாறி நூறாண்டுகளுக்கு மேலாகிறது. அதை மாற்றுவதற்கு எந்த திட்டமும் இல்லாமல் அதை செயல்படுத்தியவர்களை, காசு பார்த்தவர்களை கொல்வதால் என்னவாகப் போகிறது? இந்த கண்ணிகள் உடைந்தால் இந்த இடத்திற்கு புதிய ஆட்கள் வந்து கண்ணிகளாக மாறுவார்கள். 

ஊழல் என்றால் பாம் வைத்து கொல்வோம்!

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்