சூழல் மாசுபாடு பற்றிய தகவல்களை கசியவிடும் நிதித்துறை அதிகாரி! கலகத் தலைவன் - மகிழ் திருமேனி

 













கலகத் தலைவன்

இயக்கம் மகிழ் திருமேனி

 

மகிழ் திருமேனி வணிக ரீதியான படங்கள் எடுப்பவர். அதேசமயம் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியான திரைக்கதையோடு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் கலகத்தலைவனையும் கூறலாம்.

கலகத்தலைவன் தொழிற்சாலை கழிவுகள், சூழல் மாசுபாடுகள் எப்படி மக்களை பாதிக்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை அதிகாரம், அரசு, தொழில்துன்றை என்ன செய்கிறது என்பதை நேர்மையாக பேசியுள்ளது.

வஜ்ரா என்ற வணிக வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் பெரும் நிறுவனம். குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லும் வாகனத்தை தயாரித்து அதை சந்தைப்படுத்தும் அறிவிப்பை வெளியிடுகிறது. ஆனால் மாசுபாட்டு ஆய்வில் அதிக மாசு ஏற்படுவது தெரிய வருகிறது. அதை நிறுவனம் மறைத்து பங்குச்சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிறது. ஆனால் வஜ்ராவின் மாசுபாட்டு ரகசியம் ஊடகங்களுக்கு கசியவிடப்படுவதால் நிறுவனம் கடுமையான விமர்சனங்களையும் சந்தையில் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. இதனால் வஜ்ராவின் தலைவர் பழங்குடிகளை கொன்று சாதித்த இரக்கமில்லாத ராணுவ கமாண்டோ ஒருவரை ரகசிய உளவாளியை கண்டுபிடிக்க அமர்த்துகிறார்.

 இவர் நிறுவனத்தில் உள்ள ரகசிய உளவாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் சுவாரசியமான காட்சிகளாக விரிகிறது.

படத்தின் துல்லியம் என்பது சேகரித்த தகவல்கள், அதை காட்சிபடுத்துவது, பெருநிறுவனம் சதியால் மூடப்படும்போது அல்லது தனியார் நிறுவனத்தால் வாங்கப்படும்போது அதை நம்பியுள்ள பிற நிறுவனங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை இயக்குநர் ஜே பி என்ற பாத்திரம் வழியாக பேசுகிறார். அது முக்கியமான காட்சி. ஏறத்தாழ கதையை புரிய வைக்கும் நல்ல முயற்சி.

நாயகன், திருமாறன் வஜ்ராவில் வேலை செய்கிறார். அவர்தான் உளவாளி என்பதை நமக்கு காட்டி, எப்படி அவர் தனக்கான ஆட்களை அடையாளம் காண்கிறார் என்பதை வில்லன் மூலமே புரிய வைப்பது நல்ல உத்தி.

மகிழ் திருமேனியின் காதல் காட்சிகள் வயது வந்தவர்களுக்கானது. அதையும் அவர் சுவாரசியமாக உருவாக்குகிறார் என்பதே முக்கியமானது. படத்திலும் காதல் காட்சிகள் முன், பின்னாக நகர்ந்து வந்தாலும் கூட விஷயம் என்னவென்று புரிந்துவிடுகிறது. உளவியல் அடிப்படையில் திரு கூறும் விஷயம் சுவாரசியமாக இருக்கிறது.

பொதுவாக படத்தில் நாயகனுக்கான துதிதான் அதிகம் இருக்கும். ஆனால் கலகத் தலைவனில் வில்லனுக்கான அறிமுகம், பயம் ஆகியவற்றைத்தான் காட்சிகளாக அதிகம் காட்டுகிறார்கள். இதுவே படத்தை சுவாரசியப்படுத்துகிறது. இங்கு திருமாறன் நிதித்துறையில் வேலைசெய்த ஆள் என்றாலும் கூட உடல் அளவில் பலவீனமானவன். டேவிட் கோலியாத்தை வீழ்த்தும் கதைதான். அதுவும் திருவை விட பலசாலியான அவனது நண்பனே எதிரிகளிடம் மாட்டி தற்கொலை செய்துகொண்டுவிட்ட சூழலில் திரு என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் மீதமுள்ள காட்சிகளை பார்க்கத் தூண்டுகிறது.

நாயகி, காதல் இதெல்லாம் தேவையில்லை என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் நாயகி பாத்திரத்தையும் படத்திற்கு சரியாக இயக்குநர் பயன்படுத்திக் கொண்டுவிட்டார். ஒருவகையில் படத்தில் உருவாகும் அழுத்தத்தை காதலும் சில பாடல்களும் சற்று குறைக்கின்றன.

சூழல் சார்ந்த கருப்பொருளை மனதில் பதியும்படி வணிகப்படத்தில் செய்ய மகிழ் திருமேனி எடுத்துக்கொண்டு உழைப்பு பாராட்டத்தக்கது.இது ஒரு சாதாரண பழிவாங்கும் கதையாக எடுத்துக்கொண்டும் பார்க்கலாம். ஆனால் சூழல் சார்ந்த விஷயங்களையும், பெருநிறுவன ரகசியங்களை வெளியிடும் விவகாரத்தையும் உள்ளே கொண்டு வந்து கச்சிதமாக இணைத்ததில் படம் முக்கியமானதாக மாறியுள்ளது. திருவான உதயநிதி தனது நடிப்பை நிறுத்திவிட்டாலும் கூட அவருக்கும் அர்ஜூனாக நடித்த ஆரவிற்கும் கலகத்தலைவன் முக்கியமான திரைப்படம்தான். 

விசில்

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்