அநீதிக்கு எதிராக விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் எரியும் நெருப்பு - படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

 













படுகைத் தழல்

புலியூர் முருகேசன்

நாவல்


படுகைத் தழல் நாவல் பரிசோதனை முயற்சியான பல்வேறு விஷயங்களை தீர்க்கமான தன்மையில் பேசுகிறது. 

சமகாலத்தில் இருந்து சோழகாலம் வரை பயணிக்கும் நூல் அந்தந்த காலகட்டத்தில் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எப்படி பாய்ந்து அவர்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என விளக்கமாக பேசுகிறது. 

கதையின் தொடக்கத்தில் கலியமூர்த்தி என்பவர் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு சில நாட்களாக அடிவயிற்றில் வலி உள்ளது. அதை சரிசெய்ய அவரது பெரியப்பா மகன் அவரை இரண்டு ரூபாய் மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறான். அவர் ஹோமியோபதி மருத்துவர். பல்வேறு சோதனைகளை செய்தவர், அடிவயிற்று வலிக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது என கலியமூர்த்தியை அவரது நினைவுகளின் வழியாக பேச வைக்கிறார். 

கதை தொடங்குகிறது. ராசன் எனும் புலையக்குடி ஆள் எப்படி வேளாளர், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதிகளால் வதைபட்டு தனது நிலத்தை இழந்து பசியால் அவர் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமே வதை பட்டு அழிகிறது. ஏறத்தாழ நாவல் முழுக்க வரும் எளிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவருமே இதேபோல மரணத்தை அல்லது மரணத்தையொத்த வலியையும் வேதனையும் சந்திக்கிறார்கள். 

ராசன், வேம்பன், மூதன், இளங்கோ ஆகியோர் கதையில் முக்கியமானவர்கள். இதில் வேம்பன் சோழர்காலத்து ஆள். விளிம்புநிலை மனிதன். இவனது வாழ்க்கையும் மன்னர் பிராமணர்களுக்கு சதுர்வேதி நிலம் என கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலபுலன்களின் மாட்டிக்கொண்டு அவனது வாழ்வையும் அழிக்கிறது. தஞ்சையில் சோழ மன்னர் காலத்தில் எப்படியெல்லாம் விளிம்புநிலை மக்கள் மீது அநியாயம் நிகழ்த்தப்பட்டது, அதை மன்னர் எப்படி கண்டும் காணாமல் இருந்தார் என்பதை நிறைய சம்பவங்களோடு எழுத்தாளர் முருகேசன் முன்வைக்கிறார். திறமையான வீரன் காரி தந்திரமாக பிராமணர் சிவசர்மன் மூலம் வீழ்த்தப்படுவது, அடுத்து அவன் சமணத் துறவியை கொல்ல செல்வது, வேம்பனையும் அவனது நிலத்தை அபகரிக்க வேலால் வயிற்றில் குத்தி கொல்வது என நடக்கும் சம்பவங்கள் மனதை பீதியூட்டுகின்றன. 

கங்கைராயன் இந்த வகையில் எழுத்தாளரின் மனசாட்சி போலத்தான். அவர் யாரோடும் போரிடுவதில்லை. ஆனால் நடக்கும் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறார். காரி, உவச்சன் ஆகியோரது வாழ்க்கை பிராமணர்களால் அழிக்கப்படும்போது கங்கைராயன் கரைந்தழுகிறார். எப்போதும் உறுதியாக மலைபோல நிற்பவர் அநீதியால் கலங்கி அழுகிறார். உண்மையில் அங்கு அழுவது அவர் மட்டுமல்ல, வாசகர்களாகிய நாமும்தான். 

மூதன், பழையோள், இளங்கோ ஆகியோரை நாம் சந்திப்பது சற்று ஆசுவாசமான பகுதி. அங்கு பழங்குடிகளின் வாழ்க்கை நடைபெறுகிறது. அதில் அவர்களின் சடங்குகள், அரிசியில் மது தயாரிப்பது, விதைகளைப் பாதுகாப்பது, மழை வருவதற்கான சடங்கு, திருமண வாழ்க்கை என நிறைய விஷயங்களை ஆசிரியர் அவருக்கான நேர்த்தியான மொழிவடிவத்தில் விவரிக்கிறார். நூல் 179 பக்கங்கள்தான். 

நூலை வாசித்து முடிக்கும்போது புனைவின் வழியாக அவர் கூறிய விஷயங்களை எப்படி நடைமுறையில் நடந்துகொண்டு இருக்கின்றன, நம் வாழ்க்கை நம் கண்ணெதிரே களவாடப்படுகிறது என்பதை யோசிக்கும் சிந்தனையாளர்கள் கண்டறியலாம். 

நினைவுகளின் சுழற்சி என்பது ஒரு கதையோடு நிறுத்திவிடுவார்கள். ஆனால் இதில் கதைக்குள் கதை, அதற்குள் கதை என பயணிக்கிறது. நன்றாக யோசித்து படிக்கவேண்டியது அவசியம். இல்லையெனில் பல்வேறு பாத்திரங்கள் வேறு வேறு காலத்திற்கு மந்திர கம்பளத்தில் பறந்து அமர்ந்து வந்துவிடுவார்கள். 

எந்த மன்னர் ஆண்டாலும் பிறர் வாழ்க்கையை சூறையாடி அதில் குளிர்காய்ந்த கூட்டம் எப்போதும் எந்த காலத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். நீங்கள் கங்கைராயனாக, கருவூர்த் தேவராக, மூதனாக சுதாரிப்பாக இருந்தால் மட்டுமே நம்மை மட்டுமல்ல நம்மைப்போன்ற எளிய மக்களையும் காப்பாற்ற முடியும். 

அநீதிக்கு எதிராக சுழன்றெழும் நெருப்பு


கோமாளிமேடை டீம் 


https://www.vikatan.com/arts/literature/146286-puliyur-murugesan-shares-experience-of-his-new-novel-padukai-thazhal

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்