தங்க கண்களைக் கொண்டு காணாமல் போன தாத்தாவின் வரலாற்றைத் தேடும் பேரன் - கோல்டன் ஐஸ் - சீன டிவி தொடர்

 












கோல்டன் ஐஸ்

சீன டிவி தொடர்

புனைவு, வரலாறு

ராக்குட்டன் விக்கி

56 எபிசோடுகள்

பெய்ஜிங் நகரில் உள்ள தொன்மை பொருட்கள் அடகுக் கடையில் ஜூவாங் ருய் வேலை செய்து வருகிறான்.  பெற்றோர்கள் இல்லை. சைக்கிளில் செல்வது, சமூக வலைத்தளத்தில் நண்பர்களுடன் சென்ற பார்ட்டிகளை பதிவிடுவது என அவனது வாழ்க்கையே அவ்வளவுதான்.

ஒருநாள் அவனது நண்பன் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீட்டுக்குப் போகாமல்  அடகுக்கடைக்கு ஏதோ பொருளை எடுப்பதற்காக வருகிறான். அந்த நேரத்தில் அவசரமாக வந்ததாலும் மது போதையிலும் கதை மூடாமல் உள்ளே வந்துவிடுகிறான். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளே புகுகிறது. அவர்கள் அங்கு ஒரு தொன்மையான பொருளை திருட வந்திருக்கிறார்கள். ஆனால் ஹூவாய் ருய் செய்த முட்டாள்தனமான காரியத்தால் பல்வேறு பொருட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு நொறுங்குகின்றன. அதில் தொன்மைப் பொருளின் சிறுபகுதி அவனின் கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறது.

பிறகு, காவல்துறை அந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரிக்கும் பெண் அதிகாரி ஃபெய்பெய் ஹூவாங் ருய்தான் திருட்டு கும்பலுக்கு உதவி செய்தானோ என்ற ரீதியில் விசாரிக்கிறார். இந்த நேரத்தில் ஹூவாங் ருய் ஒரு பொருளைப் பார்த்தால் அதன் உள் கட்டுமானம் வரையில் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் கண்பார்வையில் பிரச்னை இல்லை.

திருட்டு போய், காவல்துறை கடைக்கு வந்து விசாரித்ததால்  அடகுக்கடை உரிமையாளர் லீ, ஹூவாங் ருய்யை வேலையில் இருந்து நீக்குகிறார். ஹூவாங் ருய்யை வேலைக்கு பரிந்துரை செய்தது, தொன்மை பொருட்களை ஆராய்ந்து அதன் மதிப்பை சொல்லும் அங்கிள் டே என்பவர்.

ஹூவாங் ருய் தனது நண்பன் ஒருவனுடன் கட்டிடத்தில் கீழ்ப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். ருய்யின் நண்பன் பணத்தின் மீது பேராசை கொண்டவன். ஆனால் அதை எப்படி சம்பாதிப்பது என வழி தெரியாத ஆள். கடன் பிரச்னையிலும் இருக்கிறான். ருய் தனது எக்ஸ்ரே கண்களை அதாவது தங்க  கண்களைப் பயன்படுத்தி அலங்காரம் மற்றும் தொன்மை படிக கற்கள் சந்தையில் நுழைகிறான். அவனுக்கு மகத்தான வெற்றி கிடைக்கிறது. அதேசமயம் அவனது திறமையை சுரண்டி கொழிக்க பல்வேறு நிறுவன ங்கள் முயல்கின்றன. ஷூ நகை குழுமம், ஷிசுவான் நகை குழுமம் ஆகியோர் இதற்காக போட்டி போடுகின்றனர். ருய்க்கு உள்ளூர் தொன்மை பொருட்கள் சந்தையில் பெரும் பணக்காரியான ஷின் ஷிவான் பிங் என்ற பெண் அறிமுகமாகிறாள்.  அவள் யார், அவள் மனதில் உள்ள மோசமான திட்டம் என்ன என்பதை கோல்டன் ஐஸ் டிவி தொடரைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தொடரில் உருப்படியாக நீங்கள் தெரிந்துகொள்வது நகைகளில் பயன்படுத்தும் கற்கள் எப்படி ஏலம் மூலம் விற்கப்படுகின்றன, சந்தை எப்படி செயல்படுகிறது. போலிகள், உண்மையான பொருளை எப்படி கண்டுபிடிப்பது ஆகியவை பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறைவாக பேசு நிறைய கேள் அதிகம் பார் இதற்குப் பிறகு தேவையென்றால் வாங்கு என வணிக தத்துவம் ஒன்றைக் கூறுகிறார்கள்.

உலக அளவில் கற்கள் எப்படி விற்பனையாகின்றன, அதற்காக செய்யும் அரசியல், கொலைகள், மலைகளை வெட்டி கற்களை வெட்டி எடுத்து இயற்கையை எப்படி பெரு நிறுவனங்கள் சிதைக்கின்றன என்பதையும் இயக்குநர் கூறியுள்ளார்.

தொடரில் எரிச்சலூட்டுவது நகைச்சுவைக் காட்சிகளும், காதல் காட்சிகளும்தான். இவை தொடரில் எபிசோடு நேரத்தை நீட்டிக்கவே பயன்படுகின்றன. சண்டைக்காட்சிகளை சிரத்தை எடுத்து எடுத்திருக்கின்றனர். தொடர் சீனா, உக்ரைன், மியான்மர், ஜப்பான் என பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறது சற்று ஆசுவாசமாக உள்ளது.

ஃபெங் குவான் என்ற மன்னரின் கல்லறை தேடி செல்லும் புல்வெளிநில பயணம். அதைக் காவல் காக்கும் மனிதரான பகதூர் பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் மூலம் இயற்கை சிதைவுகளைப் பற்றி பேச வைத்திருப்பது நல்ல யோசனை.

தொடரின் நாயகன் தனது தங்க கண்கள் மூலம் நிறைய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறான். நிறைய நூல்களை படித்து வரலாறு, கற்களை எப்படி அடையாளமறிவது என கற்றுக்கொள்கிறான். ஆனால் அப்போதும் கூட தனக்கு கிடைத்த தங்க கண்கள் எப்படி கிடைத்தன என்பதை அறிய ஐம்பது எபிசோடுகள் வரை காத்திருக்கிறார் என்பது என்ன லாஜிக்கோ…..

பாலைவனம், புல்வெளி நிலம், நவீன நகரங்கள் என பின்னணி  இசையமைப்பாளர் காட்சிகள் நம் மனதில் இருத்த நிறையவே முயன்றிருக்கிறார். ஒளிப்பதிவும் மோசமில்லை.

டிவி தொடரில் நடிக்க நிறைய வாய்ப்பு கிடைத்துள்ள நடிகை என சொன்னால் அது செயலில் வில்லத்தனமும், ஆழ்மனதில் ஹூவாங் ருய் மீது காதலும் கொண்டு வரும் ஷின் ஷின்பியாங் தான்.

நன்றி வேறு அடிமைத்தனம் வேறு என்பதை அவர் உணர்ந்து குற்றவாளி வளர்ப்புத்தந்தையிடமிருந்து விலகி தன்னை சிறை தண்டனைக்கு உட்படுத்திக்கொள்ளும் இடம் சிறப்பாக உள்ளது.

சீனாவின் கலாசாரம் எதை இழக்கிறது, எதை நோக்கி நகர்கிறது என்பதை இயக்குநர் நிறைய இடங்களில் சொல்லிவிட்டார். உண்மையில் அதை சிறப்பாக பார்வையாளர்களின் மனதில் கடத்துகிறார் என்றே சொல்லவேண்டும்.

சாகச கதை உங்களை அலுப்பேற்படுத்தாது பயணிக்கிறது. 56 எபிசோடுகள் என்பதை இன்னும் சுருக்கியிருக்கலாம். ருய்யின் நண்பனின் காமெடிக் காட்சிகள், ஃபெய் காதல் காட்சிகள் தொடரில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. மன்னர் ஃபெங் குவான் மன்னரின் தத்துவத்தை ருய் புரிந்துகொள்ளும் காட்சிகள் நன்றாக உள்ளன. தத்துவத்தை அவர் தனது வாழ்பனுபவங்கள் வழியாக புரிந்துகொள்கிறார். பிறகு அதை தனது நண்பர்களுக்கும் கூறுகிறார்.

ஃபெய் மீது காதல் உருவாவதற்கு முன்னரே ஷின் மீது ருய் காதல் கொண்டுவிடுகிறார் என்பதே உண்மை. பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் அவர் கண்ணியமாக நடந்துகொள்வதே இதற்கு காரணம்.

கலாசாரத்தைக் காப்போம்!

கோமாளிமேடை டீம்

 

Final episode date: 12 April 2019
First episode date: 26 February 2019
Genres: Romance, Fiction, Adventure
Written by: Dayan
Based on: The Golden Eyes
Original language: Mandarin




கருத்துகள்