முதலில் காதலியைக் காப்பாற்றிவிட்டு பிறகு காட்டைக் காப்பாற்ற முயலும் வன அதிகாரி - கொண்டா பொலம் - கிரிஷ்

 














கொண்டா பொலம்
 இயக்குநர் கிரிஷ்

 

குடிமைத் தேர்வுகள் எழுதிய பிற்படுத்தப்பட்ட பழங்குடியை ஒத்த சாதி இளைஞர், தனது கதையை அதிகாரிகளிடம் சொல்லுகிறார். அவரது நினைவுகளின் வழியே கதை பயணிக்கிறது.

வைஷ்ணவ் தேஜின் –( சின்னவன்) வாழும் ஊரின் வேலையே ஆடு மேய்த்து பிழைப்பதுதான். ஆனால் அவனது அப்பா, ஆடுகளை விற்று அவனை பட்டப்படிப்பு படிக்க வைக்கிறார். இதன்மூலம் அவன் நகரத்தில் போய் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறார். ஆனால் படித்த ஐடி படிப்பும், வாயில் நுழையாத ஆங்கிலமும் சின்னவனை வேலையில்லாத பட்டதாரியாக்குகிறது. இந்த நிலையில் அவன் திரும்ப கிராமத்துக்கு வருகிறான். ஆடுகளை மேய்க்கப் போவதற்கு ஆட்கள்  குறைய,  அவனும் ஆட்களோடு மலைக்கு செல்கிறான்.

அங்கு சென்று சில மாதங்கள் தங்கி ஆடுகளை மேய்த்து கூட்டி வர வேண்டும். இந்த பயணத்தில் அவன் விலங்குகளை மேய்ப்பதோடு காட்டுக்குள் உள்ள பல்வேறு சதிகார மனிதர்களையும், ஆடுகளை தின்னும் புலியையும் சந்திக்கிறான். பள்ளித்தோழி ஓபுலம்மா மூலம் சின்னவன் நிறைய விஷயங்களைக் கற்கிறான். அதில் காதலும் ஒன்று. அவனுக்கு காதலை விட முக்கியமானதாக காடுகளில் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. படத்தில் புலியை சுட்டுக்கொல்லாமல் விட்டது நல்ல முடிவு.

அரசு அதிகாரத்தின் மூலம் காடுகளை பாதுகாக்க பழங்குடி இனத்திலிருந்து ஒருவர் முன்னேறி செல்வது நல்ல நேர்மறையான எண்ணத்தைத் தருகிறது. ஆனால் படத்தில் நாயகன், நாயகியை தவிர பிறர் எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் வணிக நோக்கத்திற்காக நாயகன் நாயகியை இயக்குநர் கிரிஷ் தேர்ந்தெடுத்திருப்பார் போல. அதுவே படத்திற்கு பெரிய சரிவாக மாறிவிட்டது.

காட்டுக்குள் நடைபெறும் முக்கியமான விஷயம் என எதையும் இயக்குநர் சொல்லவில்லை. நாயகன் எதிர்கொள்ளும் முக்கியமான முரண், புலி மட்டுமே என்பது போல காட்டிவிட்டார். அது படத்தின் காட்சிகளை பலவீனப்படுத்துகிறது. மேலும் ஓபுலம்மா, சின்னவன் என இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளில் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை. எதிர்பார்த்தது போல அமைந்திருக்கிறது. பின்னே கீரவாணி வேறு பாட்டு போட்டு கொடுத்துவிட்டார். அதை படத்தில் வைக்கவேண்டுமே?

மரத்தை  வெட்டும் கடத்தல்காரர்கள் ஆடுகளை திருட முயல்கிறார்கள். அதற்காக சின்னவன் தனது ஆட்களையும் பழங்குடிகளையும் சேர்த்து கொண்டு அவர்களை அடித்து உதைக்கிறான். இவர்கள் சின்னவன்தான் தங்களை தாக்கியவன்  என கண்டுபிடிப்பது போல காட்சிகள் இருந்தால் புலி, கடத்தல்காரர்கள் என இருவரையும் சமாளிக்கும் முரண் ஒருவேளை சுவாரசியமாக அமைந்திருக்கலாம்.

ஆனால் அப்படியெல்லலாம் படத்தில்  ஏதும் அமையவில்லை. அதுதான் படத்தை தொடர்ச்சியாக பார்க்க எந்த ஆர்வத்தையும் தூண்டாத காரணமாக அமைகிறது. வைஷ்ணவ் தேஜ், நாயகனாக இந்த கதைக்கு எப்படி செட் ஆவார் என கிரிஷ் முடிவு செய்தார்? நிறைய இடங்களில் அதிர்ச்சியடைந்து நிற்பது போல முகபாவனையை வைத்துக்கொள்கிறார். அவரைப் பார்ப்பதற்கு பதில் அவரின் ஆட்டைப் பார்த்தால் கூட நமக்கு சற்று நிம்மதியாக இருக்கும்.

சின்னவனான நாயகனின் அப்பா பாத்திரத்தில் நடித்தவர் தனது குடும்ப வறுமை, மகன் தொழிலைக் கற்றுக்கொள்ளாத துயரம், சம்பாதிக்க திறன் இல்லாத மகனால் ஓபுலம்மா வாழ்க்கை கெட்டுவிடும் என நினைத்து வருந்துவது, அதைப்பற்றி மகனிடம் பேசுவது, ஆடுகளை விற்று படிக்க வைத்தும் மகன் தன்னோடு ஆடு மேய்க்கும் தொழிலுக்கே வந்துவிட்ட துயரம் என நிறைய உணர்ச்சிகளை காட்ட கதையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையும் அவர் பயன்படுத்திக்கொண்டு விட்டார்.

காடுகளைப் பற்றி  நிறைய கவலைப்பட்டவர், வேலை கிடைத்த தும் என்ன செய்யவேண்டும்? காடுகளை பாதுகாக்க ஏதாவது செய்யலாம்தானே? இங்குதான் ஐஎஃப்எஸ் அதிகாரி செம திருப்பம் ஒன்றை செய்கிறார். காட்டை  அப்புறம் காப்பாற்றலாம் முதலில் ஓபுலம்மாவை கல்யாணம்செய்து காப்பாற்றலாம். பிறகு காட்டைப் பார்த்துக்கொள்ளலாம் என  முடிவு செய்கிறார்.

அரசு அதிகாரி இப்படித்தானே யோசிக்க வேண்டும்? அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ். இந்த படத்தின் அடுத்த பாகம் எடுக்கும்போது நாயகன் காட்டை காப்பாற்றிவிட வாய்ப்புள்ளது.

கல்யாணம் பர்ஸ்ட். காடு நெக்ஸ்ட்

கோமாளிமேடை டீம்

 


கருத்துகள்