சதுரங்க கட்டத்திற்குள் வைத்து வஞ்சக மனிதர்களை வீழ்த்தும் கில்லாடி! - செக் - சந்திரசேகர் யெலட்டி
செக்
சந்திரசேகர் யெலட்டி
தீவிரவாத தாக்குதலில் மாட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் திருடன் ஆதித்யா, எப்படி சிறையிலிருந்து ஆப்ரகா டாப்ரா சொல்லித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை.
தெலுங்கு சினிமா என்றாலும் சந்திரசேகர் யெலட்டியைப் பொறுத்தவரை படத்தின் சுவாரசியம் எங்கேயும் ஒரு பிரேம் கூட குறையாது. இந்தப் படத்திலும் கூட அதையேதான் எதிர்பார்க்கிறோ்ம். படத்தையும் அதேபோல நுணுக்கமாக எடுத்திருக்கிறார்.
படத்தை முழுமையாக பார்த்தபிறகு ஷஷாங்க் ரிடெம்ஷன் பாதிப்பில் படம் எடுத்திருக்கிறாரோ என்று பலருக்கும் தோன்றும். அந்த படத்தின் பாதிப்பு திரை ரசிகர்களுக்கே இருக்கும்போது இயக்குநருக்கு இருக்காதா?
ஆதித்யா, ஸ்மார்ட்டாக ஏடிஎம் கார்டு திருடுவது, நுட்பமாக பல்வேறு இடங்களில் புகுந்து பணத்தை அபேஸ் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆனால் அவன் சந்திக்கும் யாத்ரா (எ) இசபெல் என்ற பெண் அவனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப் போடுகிறாள். ஆம் இரண்டே காட்சிகளில் காதல் பூக்கிறது. இப்படியெல்லாம் நடக்காதே என்பதற்குள் கல்யாணி மாலிக்கின் அழகான இசையில் கொண்டாட்டமாக படம் பிடிக்கப்பட்ட பாடல் ஒன்றே ஒன்று வந்துவிடுகிறது. ஆதித்யாவைப் போல நாமும் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். ஆனால் அடுத்த நாள் அவள் திடீரென காணாமல் போகிறாள். என்ஐஏ குண்டு வெடிப்பிற்காக சந்தேகப்பட்டவர்களின் பட்டியலில் ஆதித்யாவையும் பிடித்து விசாரிக்கிறது. அவனை நையப்புடைத்து விசாரித்தும் அவனுக்கே சுற்றி நடப்பது என்னவென்று தெரியவில்லை. எப்படி போலீசிடம் உண்மையைச் சொல்லுவது?
நான்கு தீவிரவாதிகளுடன் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்த குற்றத்திற்காக ஆதித்யாவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அவனை விட்டு நொடியில் காணாமல் போன யாத்ரா வந்து சாட்சி சொல்வதுதான். இந்த நேரத்தில் அவன் கேட்கும் வழக்குரைஞர் வசதிக்கு மானஸா எனற ஆர்டிஐ வழக்குகளை எடுத்து வாதாடிக்கொண்டிருந்த பெண் அவன் மீது வெறுப்புடன் வந்து உதவுகிறாள். அவளுக்கு தீவிரவாதிகள் என்றாலே வெறுப்பு. அப்பா ஆர்டிஐ வழக்குகள் தாண்டி பிற வழக்குகளை எடுத்து நடத்தினால்தான் தைரியம் கிடைக்கும் என அவளை தேற்றுகிறார்.
சிறையில் சங்கடத்துடன் தன் வழக்கு தொடர்பாக எப்போது அப்பீல் செய்யலாம் என்றிருப்பவனுக்கு வார்டன் உட்பட யாரும் உதவி செய்வதில்லை. அவனது சக தீவிரவாதிகள் முக்கியமான நகரங்களில் வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டுவதை தனக்கே உரிய வழியில் முரட்டுத்தனமாக போலீஸ்கார ர்களிடம் ஆதித்யா சொல்லுகிறார். இதனால் சிறையின் ஜெயிலருக்கு அவன் மீது சற்றே இரக்கம் வருகிறது. இந்த நேரத்தில் பக்கத்து அறையில் யாரோ ஒருவர் தனக்ககுத்தானே செஸ் விளையாடிக் கொண்டிருக்கும் ஶ்ரீமன்நாராயணா என்ற மனிதரைக் கவனிக்கிறான். அவர் சிறையில் உள்ள நேரம், வெளியே செல்லும் நேரம் என எப்போதும் செஸ் காய்களுடன் கட்டங்களுடனே இருக்கிறார். அவரைப் பார்த்து ஆடலாமா என்று கேட்பவனுக்கு காய்களின் தனித்தன்மை பற்றி மட்டுமே சொல்லித்தருகிறார். ஆனால் ஆதித்யாவிற்கு அதில் விருப்பம் எல்லாம் கிடையாது. ஆனால் சிகரெட்டை காசு கொடுக்காமல் வாங்கிய சண்டையில் ஈடுபட்டதற்காக அவனை இருட்டு அறையில் அடைக்கிறார்கள். அப்போது சூரிய வெளிச்சம் சிறைக்கம்பிகளில் நிழலாய் கவிந்து சதுஙங்க மேடை போலவே தோன்ற மனதிற்குள் சதுரங்கம் ஆடிப்பழகுகிறான். வித்தை மெல்ல கைவரவே, அங்கிருந்து விடுதலையானவுடன் பக்கத்துறை அறை சிறைவாசி செஸ் மாஸ்டரைப் பார்க்கப் போகிறான். அவர், அவனது கைகளும் புத்தியும் வேலை செய்வதைப் பார்த்தவுடன் மிரண்டுபோகிறார். கிராண்ட் மாஸ்டர் என்று ஒரே குரலில் கேட்பவர்கள் அனைவரிடமும் சொல்லத் தொடங்குகிறார். அதேநேரம் அவனை தூக்கில் போடுவதற்கான நேரமும் நெருங்குகிறது. எப்படி ஆதித்யா தனது செஸ் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெளியே வந்தான், சிறையில் அவனை போட்டுத்தள்ள துடிக்கும் கொலைகார டிரிக்கர் கூட்டத்தை அடித்து நொறுக்கினான் என்பதே கதை.
படம் இரண்டு இடங்களில் ஏமாற்றுகிறது. யாத்ரா ஆதித்யாவை காதலிக்கும் காட்சி. அடுத்து, தீவிரவாதிகள் ஆதித்யாவை எதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது. படத்தில் இதற்கான தெளிவு கிடையாது. படம் முழுக்க முழுக்க நிதிதின் நடிப்பை மட்டுமே நம்பியுள்ளது. அவரும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் மூன்று பெண்கள் உள்ளனர். பிரியா வாரியருக்கு குறைந்த காட்சிகள்தான். அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் குணச்சித்திர பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். சிம்ரன் சௌத்ரியைப் பொறுத்தவரை பெரிய வாய்ப்பில்லை. செஸ் மாஸ்டர் வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இது தொடர்பான் காட்சிகளுக்காக தொடக்க காட்சிகளில் விவரிப்பு கூடுதலாக தரப்படவில்லை என்பதை படம் நகரும்போது புரிந்துகொள்ள முடிகிறது.
படத்தில்
வணிகத் தேவைக்காக தேவையில்லாத
சமாச்சாரங்கள் நுழைக்கப்படவில்லை
என்பதே பெரிய ஆறுதல்.
இதனால்
படத்தை தொடர்ச்சியாக எந்த
வித விளம்பர இடைவேளையும்
இல்லாமல் எரிச்சல் அடையாமல்
பார்க்க முடிகிறது.
சிலரது
மனதில் ஏற்பட்டுள்ள காயம்,
வன்மம்,
குரோதம்,
பொதுவான
கோபம் எப்படி பிறரை பாதிக்கிறது
என் காஷ்மீர் குண்டுவெடிப்பு
மூலம் சொல்லுவது அட்டகாசம்.கல்யாணி மாலிக்கின் இசை படத்திற்கு என்ன தேவையோ அதனை மட்டுமே செய்திருக்கிறது. இதனால் படத்தில் தேவையில்லாத திசைதிருப்பல்கள் இல்லாமல் படத்தை ரசிக்க முடிகிறது. படத்தின் முக்கியமான பலம் சண்டைக் காட்சிகள். முடிந்தவரை சண்டையை இயல்பாக எடுக்க நினைத்து அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். நிதின் காட்டும் ஆக்ரோஷத்தில் நமக்கே வாயில் ரத்தம் வந்திருக்கிறதா என சந்தேகம் வருகிறது.
துரோக வளையத்திற்குள் ராஜா!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக