விவசாயம் நரகம் எனும் அப்பாவுக்கும், விவசாயம்தான் என் எதிர்காலம் என முடிவெடுக்கும் மகனுக்குமான போராட்டம்! - ஶ்ரீகாரம்
ஶ்ரீகாரம்
விவசாயம் செய்யவேண்டாம் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று கூறும் அப்பாவுக்கும். விவசாயம்தான் என் எதிர்காலம் என்று சொல்லும் ஐடி பையன் என இருவருக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை.
மேலே சொன்னதுதான் படத்தின் முக்கியமான கதை. இதைச்சுற்றி, ஐ.டி துறை வேலை, அதிலுள்ள பிரச்னைகள், படத்தின் நாயகனை கல்லூரி தொடங்கி வேலை செய்யும் கம்பெனி வரை துரத்தி காதல் செய்யும் சைத்ரா, கிராமத்தில் விவசாயத்தில் நஷ்டமாகி நகரத்திற்கு வந்து கூலிக்கு பிழைக்கும் மனிதர்கள், வட்டிக்கு பணம் கொடுத்து அதற்கு அடமான நிலங்களை வாங்கி கொண்டு பணக்கார நிலக்கிழாராக மாறி ஊர் மொத்தமும் தன்னைப் புகழவே்ண்டும், ஊரின் பெயரை ஏகாம்பர புரம் என மாற்றி வைக்கவேண்டும் என பேராசையுடன் வாழ்பவர் என கிளைக்கதைகள் உள்ளன.
படத்தின் கதையைச் சொல்லும்போதே விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி நிறைய வீடியோக்களை சர்வானந்த் பார்த்திருப்பார் போல. படம் முழுக்க பொங்கல் தின்று காபி குடித்து வயிற்று பொருமல் வந்தது போல, இவ்வளவு கஷ்டமா எனக்கு என்ற முக பாவனையில் சுற்றி வருகிறார். படம் முழுக்க விவசாயிகளின் கஷ்டத்தைப் பார்ப்பதை விட இவருக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர் ஏற்படுத்தும் கஷ்டத்தை லூசு பெண்ணாக வந்தாலும் பிரியங்கா மோகன்தான் தீர்த்து வைத்து உற்சாகப்படுத்துகிறார். கனமான கதைதான் ஆனாலும் நிறைய இடங்களில் மிக்கி ஜே மேயரின் இசைதான் மகிழ்ச்சியோ, கஷ்டமோ உணர வைக்க உதவுகிறது.
படத்தில் ஆறுதலாக சிறப்பாக நடித்திருப்பது கார்த்திக்கின் அப்பாவாக நடித்துள்ள ராவ் ரமேஷ்தான். பையனிடம் படிப்புக்கு வாங்கிய கடன் பற்றி சொல்லாமல் இருப்பது, விவசாயத்தை தனது எதிர்காலமாக தேர்ந்தெடுத்திருப்பதாக கூறியவுடன் இறுக்கமாகி கெட்டகாலம் கடந்துடுச்சுன்னு நினைச்சேன். நான் நினைச்சபடி நடக்கலியே என துண்டை எறிந்துவிட்டு போவது, மகனின் கல்வி சான்றிதழ்களை பார்த்து கண்கலங்கி சாப்பிடாமல் எழுந்து செல்வது, மகளின் கல்யாணத்திற்கு நிலத்தை விற்க வந்து வேதனையில் திரும்ப செல்வது, இறுதிக்காட்சியில் மகனைப் பார்க்கமுடியாமல் வாகனத்தை கிளப்புவது, தோளில் கையை வெச்சுக்கோ தைரியமா இருக்கு எடுக்காதே என்று சொல்வது என அனைத்து காட்சிகளிலும் தனது பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.
இதற்கடுத்து ராமண்ணா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நரேன் நன்றாக நடித்திருக்கிறார். நகைச்சுவையை படத்தில் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தில் அப்பா, மகனுக்கு இடையில் நெகிழ்ச்சியான காட்சிகள் சிறப்பாக உள்ளன. கூட்டுப்பண்ணை விவசாயம் பற்றிய கருத்தை முன்வைத்திருப்பது சிறப்பானது. விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றி பேச வாய்ப்பிருந்தும் எதிர்மறையாக எதையும் பேசக்கூடாது என இயக்குநர் நினைத்திருப்பார் போல.
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டும் என்பதுதான் படத்தின் செய்தி. ஆனால் அதை சொல்வது வலுவாக இல்லை என்பது பெரும் பலவீனம். வில்லனாக நடித்துள்ள சாய்குமாரின் பாத்திரமும் வலுவாக இல்லை.
மனதை உறுத்தாத மென்மையான குடும்ப படம். விவசாயம் சார்ந்த கவனத்தை படிக்கும் அனைவருமே கொள்ள வேண்டும் என்ற அக்கறையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திய வகையில் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
டெக் விவசாயி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக