ரூல்ஸ் பேசும் பையனும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு அன்பாக பழகும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தால்... எவரிவேர் ஐ கோ துருக்கி தொடர்
எவரிவேர் ஐ கோ
துருக்கி தொடர்
75 எபிசோடுகள்
ரூல்ஸ் பார்த்தேதான் அனைத்தும் செய்யும் பொறியாளரும், அன்பிற்கு எதற்கு ரூல்ஸ் என அனைவரிடமும் பிரியம் காட்டி வாழு்ம பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கும்படி இருந்தால்…… அதுதான் ப்ரோ கதை.
டெமிர் எராண்டல் ஜப்பான் நாட்டிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு வருகிறார். அவர் வருகைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. ஜப்பானில் இருந்தபடியே இஸ்தான்புல்லில் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார். அந்த வீடு அவரின் கடந்த காலத்தோடு தொடர்புடையது. அதனை மனதிற்கு நெருக்கமாக நினைக்கிறார். அதேநேரம் இஸ்தான்புல்லில் உள்ள ஆர்டிம் என்ற கட்டுமான நிறுவனத்தில் பங்குகளை வாங்கி அதன் மேனேஜராக பதவியேற்கவிருக்கிறான்.
தான் வாழும் வீட்டைப் பார்க்க வருபவனுக்கு அதிர்ச்சி. அவனுக்கு முன்னாலேயே அங்கு யாரோ குடியிருக்கிறார்க்ள. அது யார் என்று பார்க்கும்போதுதான் அவனை இளம்பெண் ஒருத்தி கட்டையாலே தலையில் அடித்து மயங்க வைக்கிறாள். கண்விழித்துப் பார்த்தால் டெமிரை கைது செய்ய போலீஸ் நிற்கிறது. ஏன் என்று விசாரிக்கும்போதுதான் தெரிகிறது. வீட்டின் உரிமையாளர் இளம்பெண் செலினுக்கும், ஆணழகன் டெமிருக்கும் ஒரே வீட்டைத்தான் ஏமாற்றி விற்றிருக்கிறார். இருவரிடமும் ஒரே மாதிரியான வீட்டுப்பத்திரம் இருக்கிறது.
டெமிருக்கு அவர்கள் பெற்றோர் வாழ்ந்த வீடு என்பதால் விட்டுக்கொடுக்க முடியாது என்கிறான். செலினுக்கு அவள் கடன் வாங்கி முதன்முறையாக வாங்கிய வீடு என்பதால் அவளுக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை. இதனால், இரண்டுபேரும் ஒரேவீட்டில் பகிர்ந்து வாழ நினைக்கிறார்கள். காரணம், வீட்டை விற்றவர்கள் பணத்தை கொடுக்கவேண்டுமே என இவர்களை அலைச்சலில் தள்ளுகிறார்கள்.
டெமிருக்கு வீடு கண்றாவியாக கிடக்கிறதே என எரிச்சல். செலினுக்கு டெமிரை எப்படியாவது வீட்டை விட்டு துரத்தவேண்டுமென்பதுதான் கனவிலும் வரும் நினைவு. ஆர்டிம் நிறு்வனத்திற்கு டெமிர் போகும்போதுதான் அங்கு செலினைப் பார்க்கிறான். அவள் அங்கு உள் அலங்காரங்களைச் செய்பவளாக இருக்கிறாள். கூடவே அவளது இணைபிரியாத தோழிகள் ஐடா, மார்வே ஆகியோரும் உள்ளனர். இதோடு எந்த ஆணைப் பார்த்தாலும் உடனே ஐஸ்க்ரீமாக உருகும் ஆஸ்மி, எந்த ஆளைப் பார்த்தாலும் எதிர்மறையாக கருத்துகளை சொல்லி வெறுப்பேற்றும் ஃபெரோ, தனக்கு நிறு்வனத்தை நடத்தும் பொறுப்பு கிடைக்கவில்லை என வெறுப்பில் தகிக்கும் ஆர்டிம் உரிமையாளரின் மகன் புராக் என பலரும் அங்கே வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரே எண்ணம், புதிய மேனேஜரை வெறுப்பேற்றி வெளியே அனுப்பிவிட வேண்டும் என்பதுதான். அதற்காக நிறைய விஷயங்களை திட்டமிடுகிறார்கள். இதற்கு செலின்தான் பொறுப்பு. டெமிர் முதல்நாள் ஆபீஸ் வரும்போது கம்பெனி பிரசன்டேஷன் நடக்கிறது. அதில் போரா என்ற பில்டிங் மாடல் செய்பவருக்கும், மார்வேக்கும் இடையிலான காதல் முக்கியமான கட்டத்தை எட்டுகிறது. பிரசன்டேஷனின்போது, போரா தனது காதலை சொல்லி மோதிரத்தை மார்வே கையில் மாட்டுகிறான். அப்போது அதை வெளியிலிருந்து பார்க்கும் டெமிர், எரிச்சலாகிறான். உடனே உள்ளே நுழைபவன், ஆபீசில் பணியாற்றுபவர்கள் யாரும் காதல் செய்யக்கூடாது. முக்கியமாக காதலித்து கல்யாணம் செய்துகொண்டு அங்கு பணியாற்றக்கூடாது என்று ரூல்ஸ் போட்டுவிட்டு போகிறான். இதனால் அங்குள்ள அனைவருமே திகிலில் உறைகிறார்கள். செலின் தலைமையிலான கூட்டணியால் டெமிரை ஆபீசிலிருந்து துரத்த முடிந்ததா? செலின் டெமிர் பிரச்னை என்னவானது? புராக் தனது தந்தை மீதிருந்த கோபத்தை எப்படி தீர்த்துக்கொண்டான், டெமிர் ஜப்பானிலிருந்து இஸ்தான்புல்லுக்கு என்ன காரணத்திற்காக வந்தான் என்பதை ஜாலி கேலி நெகிழ்ச்சியான உணர்வுகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
தொடரில் ஒளிப்பதிவு பிரமாதமாக உள்ளது. இசையும் இதுவரை இல்லாதமாதிரி உற்சாகமாக இருக்கிறது. செலின் டெமிருக்கு்ம் இடையிலான காதல் காட்சிகளிலும், சோக காட்சிகளிலும் நேரடியாக நீங்கள் அவர்களை அந்த இடத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
டெமிருடைய பாத்திரம் பெற்றோரின் விவாகரத்தால் பாதிக்கப்பட்டு தனிமையில் வாழும் சிறுவனின் உளவியல் சார்ந்தது. உண்டு உறைவிடப்பள்ளியில் படித்து வளர்ந்தவனுக்கு அனைத்துமே ரூல்ஸ்தான். அதனைப் பின்பற்றியே வளர்பவனுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடுகிறது. ஆனால் பிற மனிதர்களின் நலன்களைப் பற்றி அக்கறை ஏதும் வளர்வதில்லை. பிறரை நம்புவதுமில்லை. அதற்கு காரணம், அவன் படித்து வேலை செய்யும்போது கிடைக்கும் காதல் பிரிவு. அதில் நேரும் நம்பிக்கை மோசடியால் அவன் காதலையும், அதன் சந்தோஷங்களையும் தீவிரமாக வெறுக்கிறான். முடிந்தவரை யாரையும் அவன் தனது மனதிற்குள் அனுமதிப்பதில்லை. அவனுக்கு நேர்எதிராக இருக்கும் செலின் அவனை ஆச்சரியப்படுத்துகிறாள். அவளைப் பொறுத்தவரை பேசும் அனைவருமே நண்பர்கள்தான். யாரையும் உடனே நம்பிவிடும் குணம் கொண்டவள். கோபமோ, வருத்தமோ உடனே வெளிப்படுத்திவிடும் அவளது வீட்டில் சீச்சி எனும் ஆடு, ஆமை, கராமுக் எனும் பக்கத்துவீட்டு நாய், ஏராளமான பூச்செடிகள் என அனைத்துக்குமேஇடமுண்டு.
பிரியமும் பாசமுமாக நண்பர்களுடன் எப்போதும் இருப்பவளும், ஒரே ஒரு குடும்ப நண்பரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் சேர்க்க டெமிரும் எதிரும் புதிருமாக இருக்கிறார். காய்கறி உணவுகளையும், பழங்களையும் அதிகம் சாப்பிடுபவன் டெமிர் என்றால், ஆல்டைம் சாண்ட்விட்சும், பிரைட் சிக்கனும் சாப்பிடுபவள். டெமிர் காலை ஐந்து மணிக்கு எழுகிறவன். செலின் எப்போது தூக்கம் கலைகிறதோ அப்போது எழுந்து சைக்கிளில் ஆபீஸ் செல்பவள் என இருவருக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. இந்த இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள், ஆபீசிலும் சந்திக்கிறார்கள். மெல்ல இருவருக்குள்ளும் காதலும் ஈர்ப்பும் எட்டிப் பார்க்கிறது. இதனை முதலில் செலின்தான் உணர்கிறாள். இதனால் டெமிருக்கு ்எதிராக தான் உருவாக்கிய திட்டங்களை மெல்ல கைவிட நினைக்கிறாள். ஆனால் அதனை சொல்லும்போது திவாலாகும் கம்பெனி என்ற நினைப்பு கூட இல்லாமல் நண்பர்களும் எதிராக பேசுகிறார்கள்.
கட்டுமான நிறுவனம், திவாலாகும் நிலையில் உள்ளது. அதனை காப்பாற்ற புதிதாக வந்த மேலாளர் போராடுகிறார். ஆனால் அதனை செய்ய நிறு்வன பணியாளர்கள் யாரும் உதவுவதில்லை. மேலும் ஆர்டிம் ஆபீசில் உள்ளவர்கள் வேலைகளை செய்வதை விட ஐடாவின் பேக்கரியான ஹேப்பி பையிலும், கம்பெனி மாடியிலும்தான் எப்போதுமே இருக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் வேலை நடக்கிறதா இல்லை டீ பார்டிதான் நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது.
டெமிர் தனது கடந்த காலத்தைப் பற்றியும், தனது வாழ்க்கையில் அவள் எவ்வளவு முக்கியம் என்று விளக்கி பேசும் காட்சிகள் அனைத்துமே பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. டெமிர் பாத்திரத்தின் ஆடைகள் அவ்வளவு நேர்த்தியாக உள்ளது. இவரின் விருப்பம், நேர்த்தியான ஒரே நிறத்திலான ஆபீஸ் உடைகள்தான். இதற்கு மாறாக செலினின் உடைகள் அனைத்தும் அவளது வாழ்க்கையை கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும்படி பல்வேறு வண்ணங்களில் உள்ளது.
இதோடு பார்ட்டியில் அறையில போட்டோ எடுத்து தவறாக நடக்க முயன்ற நண்பனை டெமிர் அடிக்கும்போதும், இன்னொரு முறை ப்யூச் என்பவர் ஹோட்டலில் செலினிடம் தவறாக நடக்க முயல்கிறார். இவரையும் தாடையைப் பெயர்ப்பதோடு செலினிடம் டெமிர் மன்னிப்பு கேட்க வைக்கிறான். இந்த இரண்டு முறையும் செலின் பேசும் வசனம் பெண்களின் தன்னம்பிக்கை சார்ந்தது. அற்புதமான காட்சிகள். தனது பிரச்னையை ஒரு பெண் எப்படி சமாளிக்கிறாள் என்பதை காட்சிகள் காட்டுகின்றன. மற்றபடி துருக்கி கலாசார உணவுகள், இசை, நடனம், குடும்ப அமைப்பு, காதல் என பல்வேறு விஷயங்களை தொடரில் வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
தொடரில் காமெடி பொறுப்பை பெரும்பாலும் செலின், ஆஸ்மி ஆகியோர் ஏற்றிருக்கிறார்கள். அடுத்து கட்டுமான வேலைகளை பார்க்கும் மாஸ்டர் எனும் ஆசாமி. இதோடு பெரோசே, லைலா என அக்கா, தங்கைகள். வீட்டை இருவருக்கும் ஒரே நேரத்தில் விற்கும் லைலா, பெரோசா என அக்கா, தங்கைகள் இறுதியில் டெமிருக்கு பெற்றோர் போல மாறுவது அழகான காட்சி.
தேவையில்லாமல் காதலின் பொறாமையை கொஞ்சம் நீட்டியிருக்கிறார்கள். அதனை மட்டும் குறைத்து நிறுவனம் வெற்றிபெறுவதாக காட்டியிருந்தால் கொஞ்சம் நல்ல முடிவாக இருந்திருக்கும்.
ரிலேஷன்ஷிப் தெரபி
கோமாளிமேடை டீம்
நன்றி
எம்எக்ஸ் பிளேயர்
கருத்துகள்
கருத்துரையிடுக