சாதனைகளை செய்தும் கூட அனைத்து புகழையும் விட்டுக்கொடுத்த பிரதமரின் துயரக்கதை! - தற்செயல் பிரதமர் - சஞ்சயா பாரு

 

 

 

 https://s3.ap-south-1.amazonaws.com/storage.commonfolks.in/docs/products/images_full/tharseyal-pirathamar-manmohan-singh_FrontImage_365.jpg

 



தற்செயல் பிரதமர்


சஞ்சயா பாரு


தமிழில் பி.ஆர். மகாதேவன்


கிழக்கு




2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பற்றியும் அதில் பிரதமரான பதவி வகித்த மன்மோகன் சிங் பற்றியும் நூல் விலாவரியாக உண்மைகளைப் பேசுகிறது.


பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் ஊடக ஆலோசகரான வணிகப் பத்திரிக்கை ஆசிரியரான சஞ்சயா பாரு, பணியில் சேர்கிறார். அங்கு அவர் பார்த்த தனிப்பட்ட ஆளுமையான மன்மோகனும், பிரதமராக இருந்த மன்மோகனும் எப்படி சூழலுக்கு ஏற்ப வெளிப்பட்டார்கள் என்பதை பெரியளவு சமரசப்படாமல் நூலாக எழுதியுள்ளார்.


அடிப்படையில் இந்த நூலை யார் படித்தாலும் அவர்களது மனம் காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி ஆகிய இரண்டுபேரையும் விரோதமாகவே எண்ணும். அந்தளவு பல்வேறு அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உழைப்புக்கான பலன்களுக்கான பெயர் கிடைக்காமல் அவமானப்படு்த்தப்பட்ட பொருளாதார நிபுணரின் கதை இது.


இந்த நூலைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை பலம், பலவீனத்தை சரியாக எடை போட்டு அணுகுகிறது. கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட பொருளாதார வல்லுநர் பிரதமரானால் நாட்டில் ஏராளமான நல்ல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் அவர் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாத ஆளுமையாக எனது வேலை என்னைப் பற்றி பேசட்டும் என்றிருந்தால் என்னாகும்? இன்று மன்மோகன்சிங் எப்படி உள்ளாரோ அதே நிலைதான். மானமும், மரியாதையும் இழந்து, வீண்பழிகளை சுமக்கும் நிலை. ஆனால் ஆச்சரியகரமாக இதனை முன்பே அடையாளம் கண்டாலும் கூட அதனை பீஷ்மர் போல அம்புபடுகையாக அவர் ஏற்றதுதான்.


வாஜ்பாய் அரசு உருவாக்கிய முதலீடுகளால் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் இருக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்தது, பாரத் நிர்மாண், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சமாஜ்வாடி தலைவரான ரகு பிரசாத்திடமிருந்து பெற்று அமல்படுத்தியது, சர்வ சிக்சான் அபியான் ஆகிய திட்டங்களை விரிவுபடுத்தியது முக்கியமான சாதனைகள். ஆனால் செய்த தவறு. கேபினட் அமைச்சரவை மீது முழு அதிகாரம் இல்லாமல் போனதுதான். இதனால் சோனியா செய்த முடிவுகளுக்கான பழி மன்மோகனின் மீது விழுந்தது. அரசின் சாதனைகள் நேரடியாக சோனியாவுக்கு சென்றுவிட்டது. அமைச்சர், இணை அமைச்சர், செயலாளர் என யாரையும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் பிரதமர் இருந்தால் அந்த அரசு எப்படி நடக்கும் என்பதற்கு காங்கிரஸ் கட்சியே உதாரணம். அமெரிக்கவுடனானா அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவு செய்தது மன்மோகனின் முக்கியமான சாதனை. ஆனால் அதற்காக அவர் பாராட்டப்படாமல் அவதூறு செய்யப்பட்டார். அதுவும் கூட அதன் பயன்களை விளக்கிச்சொல்லியும் கூட என்றால் அதன் பின்னணியில் உள்ள அரசியலை வெளிப்படையாகவே சஞ்சயா எழுதியுள்ளார்.


ஊடக ஆலோசகராக சஞ்சயா பாரு, பிரதமருக்கு மட்டுமே கட்டுப்பட்டவராக இருந்தார். எனவே அவரால் சதி வேலைகளை சந்தித்தாலும் கூட வேலையை விட்டு நீக்கப்படவில்லை. பிரதமரை பல்வேறு நிகழ்ச்சிகளில் முன்னிறுத்த முயன்ற பணிக்காக அவரை வேலையை விட்டு விலக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் பிரதமரின் பாதுகாப்பு இருந்ததால் அப்படியொரு அவமானம் நடக்கவில்லை. சஞ்சயா தனது வேலையை ராஜினாமா செய்யும்போது பிரதமரின் வீழ்ச்சி தொடங்குவது தற்செயலாக எ்ன்று தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அதிலிருந்து மீள முடியாமல் வருத்தத்தில் ஆழ்கிறார். நூலில் அத்தியாயங்கள் மன்மோகன் சொன்ன வாக்கியங்களைக் கொண்டே தொடங்குகிறது. முதல் ஆட்சிக்காலத்தில் நேர்மையாக, பிறரது செயல்பாடுகளை கண்காணித்த பிரதமர் இர்ண்டாவது ஆட்சிக்காலத்தில் எல்லாம் அவன் செயல் என இருந்தது ஊழல் புகார்கள் அவரதை பெயரை களங்கப்படுத்த அனுமதித்தது போலானது.


பொதுவாக நிர்வாகியாக உள்ளவர் நேர்மையானவர் என்றாலும் வேலையை எப்படி செய்கிறார், பிறரை எப்படி நிர்வாகம் செய்கிறார் என்பதே முக்கியம். பல்வேறு அதிகார மையங்கள் இயங்கியதால் முடிவெடுக்கும் அதிகாரம், அமைச்சர்களிடையே மரியாதை இன்மை, தேசத்தின் தலைவராக உள்ள மன்மோகனை அவமானப்படுத்தும் கட்சி தலைவர்களின் செயல்பாடு என அனைத்துமே நடந்தன.


முதல் முறை ஆட்சி செய்யும்போது, பொருளாதார வளர்ச்சி திட்டங்களால் மன்மோகனுக்கு பெருமை கிடைத்தது. அதைவிட பிரதமர் பதவியை சுமையாகவே கருதவில்லை. ஆனால் கட்சியினர் தொந்தரவு அதிகமாகி, கூட்டணி குடைச்சல் தொடங்கியபோது பிரதமர் தனது தற்செயல் பிரதமர் பதவியைக் கூட விட்டுக்கொடுக்க தயாராகி விட்டார். இரண்டாவதுமுறை ஆட்சியில் இந்தநேர்மையும்கோபமும் அவருக்கு வரவில்லை. அது சஞ்சயாவை விட்டுக் கொடுக்கும்போதே தொடங்கிவிடுகிறது. அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோதும், பின்னாளில் நடக்கும் விஷயங்களுக்கு அதுவே தொடக்கமாக உள்ளது. 

நூலை படிக்கும்போது மன்மோகன் மீது பரிதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. நேருவுக்கு பிறகு பெரும்பான்மை தொகுதிகளை வென்று கொடுத்த தேசத்தின் தலைவர், தனது ஆளுமை குறைபாட்டால் எ்ப்படி நாட்டின் பெருமையை விட்டுக்கொடுத்தார் என்பதை மறக்கவே முடியாது. 


கோமாளிமேடை டீம் 

நூலைப் பெற

https://www.udumalai.com/tharcheyal-prathamar.htm

 





கருத்துகள்