வாட்ஸ்அப் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை விலக்கிக்கொள்ளுமா?

 

 

 


 

 


பாதுகாப்பு விதிகளுக்கு கெடு!


பேஸ்புக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப் புதிய தகவல் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மே 15ஆம் தேதியை கெடுவாக விதித்தது. இதற்கு பயந்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை ஏற்காதவர்களின் கணக்குகளை அழிக்கமாட்டோம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தது.


வாட்ஸ்அப் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான டெலிகிராம், சிக்னல் ஆகியவற்றை விட மக்களை கவர்ந்திருந்தது. இதற்கு காரணம், எளிமைதான். இதன் எளிமைத்தன்மையை டெலிகிராம் போன்ற எளிய ஆப்புடன் கூட ஒப்பிட முடியாது. டெலிகிராமை பலரும் படங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை குறுஞ்செய்தி அனுப்ப, அலுவலக வட்டாரச்செய்தி, அதில் பிறருக்கு அழைத்து பேச என பல்வேறு விஷயங்களை செய்யமுடியும்.


இலவசமாக ஒரு ஆப்பை தருகிறார்கள் என்றாலே அதில் பயனர்களின் தகவல்களை எடுத்து தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள். ஆனால் அதனை உள்ளது உள்ளபடி கொள்கை மாற்றம் என்ற பெயரில் நிறுவனம் சொல்லிவைக்க வம்பாய் முடிந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள தகவல் உரிமைப் போராளிகள், பலரும் இதற்கு எதிராக முஷ்டி உயர்த்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் முதன்முறையாக வாய் திறந்து இது பயனரின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கூறியிருக்கிறது. தகவல்களை பிற சகோதர நிறுவனங்கள், தாய் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்வதாக வாட்ஸ்அப் கூறியிருந்தது. உடனே பிரைவசி நேயர்கள் தங்களது கணக்குகளை வாட்ஸ்அப்பிலிருந்து அழிக்கத் தொடங்கினர். அதுவரை பயன்படுத்தியிராத டெலிகிராம், சிக்னல் மற்றும் வேறு ஏதாவது புதிய ஆப் இருக்கிறதாக என தேடி அதனை தரவிறக்கி இணைந்தனர். குறுஞ்செய்தி செயலிகளைப் பொறுத்தவரை ஒருவர் மாறினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த நண்பர்கள் வட்டமே மாறவேண்டும். இல்லையென்றால் என்ன பிரயோஜனம்? இதனை எத்தனை பேர் புரிந்துகொண்டார்களோ? விகடன் போல நாம் எப்போதும் டிரெண்டிலேயே இருக்கவேண்டுமென பல லட்சம் இந்தியர்கள் மெனக்கெட்டனர்.


வருமானம் போச்சே என தலையில் கைவைத்த வாட்ஸ்அப் நிறுவனம் மை டியர் லேடீஸ் அண்ட் பெலோ ஆவரேஜ் மென்ஸ் என்று அழைக்காத குறையாக பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரம் செய்தனர். விளம்பரத்தின் சுருக்கம், நாங்கள் மக்களுடைய தகவல்களை யாருக்கும் கொடுக்கவில்லை. தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்கிறோம் என்று விளக்கம் கொடுத்தனர்.


மத்திய அரசைப் பொறுத்தவரை இன்னும் தகவல் பாதுகாப்பு கொள்கையை தாக்கல் செய்யவில்லை. வாட்ஸ்அப் நிறுவனம், தனது புதிய பாதுகாப்பு கொள்கையை திரும்ப பெறலாம். அல்லது புதிய தகவல் கொள்கைப்படி தனது கொள்கையை வடிவமைத்து மாற்றவேண்டும். எது எப்படி மாறினாலும் பயனர்கள் அதனை பயன்படுத்திய எளிமைக்காக அதனை கைவிடுவது கடினமே.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஆசிஷ் ஆர்யன்



கருத்துகள்