புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

 

 

 

 

 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் ...

 

 

 

நொறுங்கிய குடியரசு


அருந்ததிராய்


தமிழில் க. பூர்ணச்சந்திரன்


காலச்சுவடு



பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள், நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார். 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது. படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம். அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார்.


மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது, அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது. அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது. ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காமலிருக்க உதவுகின்றன என்பது உண்மையில் வருத்தமளிக்கும் செய்தி.


அருந்ததிராய் இந்த நூலில் பழங்குடி மக்களின் நிலை, அவர்களை எப்படி ஆதிக்க சாதியினர், அரசு, அவர்களில் சிலர் சுரண்டுகி்ன்றனர் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நூலை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு அவர் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் எழுத்தாளர் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் நூலை ஆழமாக படித்து உள்வாங்கிக்கொண்டால் அப்படி ஒரு தவறு நேராது. பழங்குடி மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக இருப்பவர்கள் எப்படி விழா என்று ஒன்று வரும்போது ஆடிப்பாடுகிறார்கள் என்று ஆசிரியர் விவரிப்பது உண்மையில் நூலில் மகிழ்ச்சியளிக்கும் பகுதியாக இருக்கிறது.


ஆயுதம் தாங்கிய சல்வா ஜூடும் படைக்கு எதிராக, வீடுகளை எரிக்கும் பெண்களை வல்லுறவு செய்யும் மனிதர்களை உண்ணாவிரதம் செய்து எதிர்க்க முடியாது என்று கூறுவதை வாசிப்பவர்கள் யாருமே மறுக்க முடியாது. நிலத்தை மக்களுக்காக பங்கீடு செய்து அவர்களை பிழைப்பதை வெளிநாட்டு முதலீட்டுக்காக ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை அதிகார வர்க்கம் எப்போதும் சகித்துக்கொள்வதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வரும் மாவோயிஸ்ட் சிந்தனையாளர்களை காவல்துறை சுட்டுக்கொல்வதை காரணமாக காட்டுகிறார்கள். ஆசாத் எப்படி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதையும் அவர் கூறிய அரசியலமைப்பு பற்றிய கருத்தை தேசிய நாளிதழ்கள் எப்படி திரித்தனர் என்பதையும் படிக்கும்போது பழங்குடி மக்களை எப்படி அரசியலும், ஊடகங்களும், அரசும் பகடைக்காயாக வணிகத்திற்காக பயன்படுத்துகிறது என்பதை படிக்கும் யாருக்கும் மனம் நடுங்கும்.


வன்முறையை எழுத்தாளர் எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை. இதனை அவர் நேரடியாக மவோயிஸ்ட் வீரர்களிடமே பகிர்ந்துகொள்கிறார். இப்போது அதிகாரத்தில் இல்லை என்றாலும் அதிகாரத்திற்கு வரும்போது அவர்கள் என்னைத்தான் முதலில் தூக்கிலிடுவார்கள் என கூறியிருக்கிறார். இதனை மாவோயிஸ்டுகளின் குறையாக சொல்லலாம். மாற்றுக்கருத்துகளை ஏற்பதில்லை. பிற சகோதர அமைப்புகளுடன் இணைந்து போராடுவதில்லை, குண்டுவெடிப்புகளில் ஆதிவாசி மக்களை கொன்றாலும் கவலைப்படுவதில்லை என்பதுபோன்ற குறைகளை எழுத்தாளர் நூலில் குறிப்பிட்டு போராட்டத்தில் வெற்றி அதனை அவர்கள் மாற்றிக்கொள்வது முக்கியம் என கூறியுள்ளார்.


வெளிநாட்டு தூண்டுதல்களுக்கு இணங்க அரசியலமைப்பு சட்டப்படி மக்களை பாதுகாக்காமல் அவர்களை பலிகொடுத்து பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடையும் பாதை குருதியால் நனைந்துள்ளது என்பதை நூல் எடுத்துக்காட்டுகிறது.


நிலமெல்லாம் ரத்தம்


கோமாளிமேடை டீம்




கருத்துகள்