குடும்ப பாசமா, உலகை காப்பதா என முடிவு செய்யும் கிராமவாசி இளைஞனின் சாகச பயணம்! மார்ஷியல் யுனிவர்ஸ்
மார்ஷியல் யுனிவர்ஸ்
சீன தொலைக்காட்சி தொடர்
42 எபிசோடுகள்
எம்எக்ஸ் பிளேயர்
சீனாவில் சிறு கிராமத்தில் வாழும் கோணங்கித்தனமான குடும்ப பாசம் கொண்ட லின் டாங் எப்படி அசுரர்களைக்க கட்டுப்படுத்தி அடக்கும் தாயத்து குருமாராக மாறினார், உலகை காப்பாற்றினார் என்பதே கதை.
இந்த தொடரின் முக்கியமான பலம், லின் டாங் என்ற நாயகனின் கோணங்கித்தனமான சேட்டைகளும், அபாரமான நடிப்பும், சண்டையும்தான். இதுதான் தொடரை சலிப்பு தராமல் பார்க்க வைக்கிறது. சில எபிசோடுகளில் போதுண்டா பரந்தாமா என விரக்தி வரவும் வைக்கிறது.
லீ வம்சம் நடத்தும் கிளாடியேட்டர் ரக மைதானக் காட்சியில் தொடர் தொடங்குகிறது. அம்மன் பட வில்லன் போன்ற ஒருவரை சன்னமான சைசில் உள்ள லின் டாங் எப்படி தாக்கி வீழ்த்துகிறான் என்பதே காட்சியாக விரிகிறது. அவனுக்கு ஆதரவு தந்து உதவுபவள் அவனது தங்கை குவிங் டாங். நோயுற்ற தந்தையின் மருத்துவச்செலவிற்காகெ லின் டாங் தனது உயரையே பந்தய மைதானத்தில் பணயம் வைக்கிறான். இத்தனைக்கும் குங் பூ கலையை முறையாக பயிற்சி செய்யாதவன். அவன் தான் எந்த வம்சம் என்று கூறாமல் போட்டியில் கலந்துகொண்டு நான்கு ரவுண்டுகள் வெல்ல, அதனை நடத்துபவன் கோபம் கொள்கிறான். லின் டாங்கை தேடுகிறான்.
லின் டாங்கைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கை அவனது நோயுற்ற அப்பா, தங்கை குவிங் டாங்கைச் சுற்றி அமைந்திருக்கிறது. அவனது அப்பா தற்காப்புக்கலை போட்டியில் பங்கேற்று, அதில் விதிமுறைகளுக்கு மாறாக தாக்கப்பட்டதில் காயமுற்று உடல் நலிவுற்றவர். ஆனால் அதற்கு உதவ வேண்டிய வம்சத்தலைவர் மற்றும் பிறர் அமைதியாக இருந்ததில் கடுமையாக கோபம் கொண்டவனாக இருக்கும் லின் டாங், கிடைக்கும் வாய்ப்புகளில் பிறரை வம்புக்கு இழுப்பதில் ஆர்வம் கொண்டவன். குவிங் டாங் மீதிருக்கும் அன்பு அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. மைதானத்தில் அரக்க குணம் கொண்ட பயர் பைத்தான் எனும் புலியுடன் மோதுகிறான். அதனை தந்திரமாக வீழ்த்துகிறான். பின்னர் அதனை அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுவிக்க, அது தனது மாஸ்டராக லின் டாங்கை கருதி அவனுக்கு எப்போது உதவ முன்வருகிறது. இந்த நேரத்தில் அவனுக்கு இரு பெண்கள் அறிமுகமாகிறார்கள். ஒன்று, லின் குவிங்சு, அடுத்து யின் குவாகுவான்.
முதல் பெண் ஒன்பது சொர்க்க வாசல் மாளிகையின் மாஸ்டர் பொறுப்புக்கு வரவிருக்கும் இளவரசி. இரண்டாவது பெண். தாவோ வம்ச இளவரசி. முன்னவர், அரக்கர்களோடு இணைந்துவிட்ட தனது தந்தையை தேடி்கொண்டிருக்கிறார். இதற்காக, அரக்கர்களை தேடி வருகிறார். அப்போதுதான் தனது தந்தையைக் கண்டடைய முடியும் என நினைக்கிறார். யின்னைப் பொறுத்தவரை அவளுக்கு யாராவது ஒருவரோடு போட்டி போட வேண்டும். அப்படி அவளுக்கு கிடைத்தவள்தான் குவிங்சு. இருவரும் முதலில் அரக்கர்களை அழிக்கவென சண்டை போட்டாலும், இறுதியில் காதலராக லின் டாங்கை தேர்ந்தெடுத்துக்கொண்டு சண்டை போடுகிறார்கள்.
குவிங்சுவைப் பொறுத்தவரை எப்போதும் தனது லட்சியம் பற்றியே யோசித்துகொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவளது அப்பா அரக்கர்களோடு இணைந்ததால், அவளுக்கு அனைத்து இடங்களிலும் துரோகியின் மகள் என்ற கெட்டபெயரே உள்ளது. அவளை பார்த்த முதல் பார்வையிலே லின் டாங்கிற்கு எனது தேவதை இவள்தான் என முடிவு செய்து சுற்றுகிறான். தோளில் சாய்வது, முழங்காலை கட்டிக்கொள்வது என செய்யும் பல சேட்டைகளை கண்ணால் பார்க்க முடியவில்லை. யின்னைப் பொறுத்தவரை அவளுக்கு தான் யார், தனது வம்சம்,செல்வம் பற்றிப் பேசுவதே லட்சியம். ஆனால் லின் டாங்கின் கட்டற்ற சுதந்திரம், துணிச்சல் இதெல்லாம் பார்த்தவுடன் அவளுக்கு பிடித்துவிடுகிறது ஏறத்தாழ துணிச்சலில் இருவரும் ஒன்றுபோல்தான். உடனே அவனை காதலுக்காக துரத்த தொடங்குகிறான். குவிங்சுவை அழைத்து காதல் மொழி பேசும்போதெல்லாம் யின்னுக்கு விரக்தியும் கோபமும் பொங்குகிறது. இரு பெண்களின் மீதும் அவனுக்கு அன்பு இருக்கிறது. இவர்களில் யாரையும் அவன் எங்கும் விட்டுக்கொடுப்பதில்லை. முதலில் அவனை குரங்கு என்று பேசும் குவிங்சு, பயிற்சி செய்து மெல்ல லின் டாங் வலிமை பெறத்தொடங்கியதும் அவனை அவளை அறியாமலேயே காதலிக்க தொடங்குகிறான்.
யின்னைப் பொறுத்தவரை அவள் கிராமத்தில் பார்த்தபோதும், பின்னாளிலும் கூட ஒரே ஆசையைத்தான் வைத்திருக்கிறாள். லின் டாங்கை எப்படியாவது தாவோ வம்சத்தில் சேர்த்து அவனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இந்த காதல் கதைக்கு இடையில் முதல் தாயத்து லின் டாங்குக்கு கிடைக்கிறது. அதைக் கொடுத்துவிடு என தாயத்து வம்சத் தலைவர் யாங் அவனிடம் வந்து கேட்கிறார். அவரது நோக்கம், அதற்கான வாரிசைக் கண்டுபிடிப்பதுதான். அவர் எதிர்பார்த்தது போலே லின் டாங், தாயத்தை தர மறுத்து அவர்களை வீட்டிலேயே சிறை வைக்கிறான்.
இந்த நேரத்தில் லின்னுக்கு எரிச்சல் ஊட்ட வருபவன அவனது அண்ணன் லின் நாட்டியான். இவனைப் பொறுத்தவரை தாழ்வுணர்ச்சி அதிகம். அவன் தான் புகழப் பெறவேண்டும் என்பதற்காக அரக்கனை அழிக்கவேண்டும் என்ற டாஸ்கை எடுத்துக்கொள்கிறான். ஆனால் அது அவருக்கு இரண்டாவது பணிதான். முதல் பணி ஊரும் நாடும் அவனைப் புகழ வேண்டும். இதனால்தான் விதிமுறையை மீறி அவனை வளர்த்த தந்தையை பலவீனமான இடத்தில் தாக்கி நோயாளியாக்குகிறான். இதனால் அவனுக்கு பெரிய புகழ் கிடைக்கிறது. யுவான் கேட் எனும் இடத்திற்கு சீனியர் மூ என்ற இளவரசியின் சிஷ்யராக செல்கிறான்.
இவனையும் லீ வம்ச ஆட்களையும் பார்த்தாலே எரிச்சலாகும் லின் டாங் இவர்களை எப்படி பழிவாங்கினான், தனது தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடிந்ததா, தாயத்து வம்ச தலைர் யாங், தனது வாரிசாக லின் டாங்கை பயிற்சி கொடுத்து ஏற்றுக்கொண்டாரா, குவிங்சு, யின் ஆகிய இருவரில் யாரின் அன்பை லின் டாங் ஏற்றான் என்பது போன்ற கேள்விகளை தொடரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தொடரில் நம்மை எரிச்சலாக்குவது அனைத்து பாத்திரங்களும் குதிரைகளோ, பொதி சுமக்கும் கழுதைகள், ஏன் எருமை, பசு மாடு கூட இல்லாமல் நடந்துகொண்டே இருப்பது. முக்கியமான திட்டங்கள், ஆபத்தான நிலைமை என அனைத்து சூழலிலும் அவர்கள் நடந்துகொண்டே இருப்பது பார்வையாளர்களுக்கு களைப்பை ஏற்படுத்துகிறது.
கிராபிக்ஸ் காட்சிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தாயத்து குல வாரிசுக்கு பயிற்சி அவசியம் என்று சொன்னாலும்கூட அப்படி ஒன்று நடக்காமல் பல எபிசோடுகள் கடந்துகொண்டே இருக்கின்றன. மின்னல் ஒன்றை எதிர்கொள்ளும் பயிற்சி மட்டுமே லின் டாங் பெற்று எப்படி கோபுரப்போட்டியில் வெற்றி பெறுகிறான், முதல்முறையாக தாயத்தை தொடும்போது கிடைத்த மன ஒருங்கிணைப்பும், அமைதியும் தாவோ வம்சத்தில் ஆபத்தான தற்காப்பு கலையை கற்கும்போதுதான் லின் டாங்கிற்கு வாய்க்கிறது. இந்த நிலையில் அவன் எப்படி கோபுர போட்டியில் வென்றான் என்பது குழப்பமாகவே இருக்கிறது.
அடுத்து முறை பிறழ்ந்த உறவாக வரும் குவிங் டாங், லிங் நாட்டியான் உறவு. குவிங் டாங், லின் டாங்கிற்கு ரத்த தொடர்பான தங்கை கிடையாது. ஆனால் கூட அவளை சமையல் செய்யவிடாமல் வேலைகளை செய்துவரும் லின் டாங், சொந்த தங்கையாகவே கருதுகிறான். அவனது அண்ணன், லிங் நாட்டியானைப் பொறுத்தவரை குவிங் டாங் தங்கை என்பவள்தான். ஆனாலும் கூட அவள் மீது பெரிய மரியாதையோ, பாசமோ கிடையாது. இந்த நிலையில் அவளது பனி விஷத்தைப் பயன்படுத்த இருவரும் ஒன்று என்று சொல்வதும், இருவருக்குமான உடல் மொழிகளும் முதல் சீசனின் இருபது எபிசோடுகளுக்கு பிறகு மாறி்விடுகிறது. எனது உயிர் உனது, உனது உயிர் எனது என்பதை அண்ணன் தங்கை பாசமாக கருதுவதா, காதலன் காதலியாக நினைத்துக்கொள்வதா என்பது கடினமாக உள்ளது.
லின் டாங் பாத்திரம் குரங்கின் உடல்மொழிகளை நகலெடுத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். தொடக்கத்தில் ஒகே என்றாலும் தொடரின் முக்கியமான கட்டத்தில் கூட கோணங்கித்தனமாக நடந்துகொள்வது குவிங்சுக்கு மட்டுமல்ல நமக்கே பீதி ஏற்படுத்துகிறது, பின்பகுதியில் லின் டாங் நிறைய தியாகங்களை செய்வதால் இப்படி செய்திருக்கிறார்களோ என நாமே பதில் சொல்லி சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கிறது. தாயத்து குரு யாங், நிலத்தாயத்தில் வாழும் வானுலக அரக்கன், பயர் பைத்தான், உடல்நிலை, மனநிலை சார்ந்த பயிற்சிகள், சீனியர் மூவின் பேச்சு சாமர்த்திய தந்திரம், காதலுக்காக தன்னையே இழக்க முற்படும் யின்னின் துணிச்சல், உணர்வுகளை அடக்கியே வாசிக்கும் குவிங்சு, தாவோ வம்ச உதாவின் நரித்தந்திரம் என நிறைய விஷயங்கள் இத்தொடரில் உங்களை ஈர்க்கலாம்.
என்னை மாற்றும் காதலே!
கோமாளிமேடை டீம்
omposer | An Wei |
---|---|
Country of origin | China |
Original language | Mandarin |
கருத்துகள்
கருத்துரையிடுக