குழந்தை வளர்ப்பில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தந்தை! - டாடிஸ் டே கேர் - எடி மர்பி
டாடி டே கேர்
Directed bySteve Carr |
---|
Music by | David Newman |
---|---|
Cinematography | Steven Poster |
எடிமர்பி நடித்த குழந்தைகளுக்கான படம். எடி மர்பி அவரது குண்டு நண்பர் பில்லும் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். குழந்தைகளுக்கான உணவுகளை அவர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தவேண்டும். ஆனால் இதில் அவர்களால் வெற்றி பெறமுடியாமல் சொதப்ப, வேலை பறிபோகிறது.
வேறு வேலை தேட முயல்கிறார். அதுவரைக்கும் வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது? வழக்குரைஞராக இருக்கும் மனைவிதான் இப்போதைக்கு வருமான ஆதாரம். அதுவரை சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்து வேலை தேடுவதோடு, குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதே நிலைதான் அவரது நண்பராக பில்லுக்கும் கூட ஏற்படுகிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்க அலைந்து துக்கப்பட்ட நினைவும் அதற்கான கட்டணமும் எடி மர்பிக்கு நினைவுக்கு வருகிறது. அவர் தனது நண்பர் பில்லுடன் ஆலோசித்து நாம் டே கேர் ஒன்றைத் தொடங்குவோம். தற்காலிகமாகத்தான். இதை வைத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லுகிறார். இதன் விளைவாக என்ன காமெடி நடந்தது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
படம் முழுக்க குழந்தைகளுக்கானது என்பதால் சங்கோஜப்படாமல் படத்தை
அனைவரும் பார்க்கலாம். சிறுகுழந்தைகளின் மனம் எப்படி எதற்கு ஏங்குகிறது என்பதை அமெரிக்க பின்னணியில் கூறியிருக்கிறார்கள். அனைத்தையும் நாம் பொருத்திப் பார்க்க முடியாது என்றாலும், மனித உணர்வுகள் உலகம் முழுக்க ஒன்றுதானே? அந்த வகையில் எடி மர்பியின் மகன் பெற்றோர் இருவரிடமும் பாசத்திற்காக ஏங்குவதும் பின் அத்தனையையும் தன் அப்பாவிடமிருந்து பெறுவதையும் வேலைக்காக அம்மாவை விட்டு தள்ளியிருப்பதையும் படமாக வரைந்து காட்டுவது அருமை.
குழந்தைகளின் மீது அறிவை திணிக்காமல் அவர்களின் இயல்புக்கேற்ப கல்வி போதுமானது என எடி மர்பி முடிவு செய்வதும் அதை நோக்கி நகர்வதும் பிரசாரமாக இல்லாமல் காட்சிகளாக கூறியிருப்பது நன்று. மார்வின் செட்டில்மென்ட் முடிக்க வந்து டாடிஸ் டே கேரில் அங்கமாவது நகைச்சுவையான காட்சி. ஃபிளாஷ் டிரெஸ்ஸை கழற்றமாட்டேன் என்று சொல்லும் சிறுவன், காசு கொடுத்தால்தான் தொற்றிக்கொள்வதை விடுபவன், கோபம் வந்து காலை மிதிக்கும் சிறுவன், ஜிப்ரிஷ் மொழி பேசுபவன், அடிக்கடி ஜூஸ் குடிக்கும் சிறுமி, தனது உணர்வுகளை படமாக வரையும் சிறுவன் என பல்வேறு குணங்களைக் கொண்ட சிறுவர், சிறுமிகளை எப்படி நடிக்க வைத்தார்களோ எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
கல்வி இனியது என்பதை விளையாட்டு மூலமாகவே குழந்தைகளுக்கு சொல்லித்தந்தால் போதும் என்பதை கூறியிருக்கிறார்கள். ஆப்ரோ அமெரிக்கரும், வெள்ளையரும் நண்பர்களாக இருப்பது பார்க்கவே மகிழ்ச்சியான காட்சி.
விளையாட்டு மூலமாக விருப்ப கல்வி
கோமாளிமேடை டீம்.
கருத்துகள்
கருத்துரையிடுக