செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்
பினராயி விஜயன்/விகடன் |
பினராயி விஜயன் - மகத்தான தலைவன்
கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு, சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது. மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார். இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின. இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு, பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர். 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு, 2024இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் ம ம்தா, ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம்.
நிபா நோய்த்தொற்று, வெள்ளப்பிரச்சினை, கொரோனாவை சமாளித்தது என பினராயி விஜயன் மாநிலத்திற்கு செய்த பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பயன்களைத் தந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். கொரோனா நோய்த்தொற்றை பலரும் குறைத்துக்கூறிக்கொண்டிருக்கையில் விஜயன் பல்வேறு சோதனைகள் மூலம் நோய்த்தொற்றை வெளிப்படையாக கூறி அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார். மேலும் பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, நிதி உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றை மாநிலத்தின் குறைந்த வருமானத்தைக்கொண்டு செய்தார். இத்தனைக்கும் மத்திய அரசில் இருந்து தேவையான நிதி கிடைக்காதபோதும் எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை விஜயன் அறிந்திருந்தார். தேர்தலில் இனிமேல் பாஜகவுக்கு முன்னர் கிடைத்த இடம் கூட கிடைக்காது என்று சொல்லியிருந்தார். அதேபோல முந்தைய தேர்தலில் கிடைத்த இடம் கூட அந்தக்கட்சிக்கு இம்முறை கிடைக்கவில்லை. இடதுசாரி கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் சதவீதம் 39 லிருந்து 45 ஆக உயர்ந்துள்ளது. பாஜகவின் சதவீதம் 12 ஆக உள்ளது.
இடதுசாரி கட்சியின் வேட்பாளர்களும் கூட இளைஞர்களும், மூத்தவர்களுமாக மாற்றி அமைக்கப்பட்டனர். மாநிலத்தில் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளும் வெற்றிக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. இப்போது வென்றுள்ள இடதுசாரி அரசு, ஏழை மக்களுக்கான மூன்று லட்சம் வீடுகளை கட்டுவதற்கான செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. நெடுஞ்சாலை சார்ந்த திட்டம் ஒன்றையும் விரைவில் நிலங்களை கைப்பற்றி செய்யவுள்ளது. மதவாத வைரஸ்களை நாங்கள் மாநிலத்திற்குள் வரவிடவில்லை என்பதே முக்கியமானது என்கிறார் கட்சியின் செயலாளரான விஜயராகவன்.
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கேரளத்திற்கு வந்து தே்ர்தல் பிரசாரம் செய்தாலும் கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரச்னைகளே காங்கிரஸை வீழ்த்திவிட்டது. பாஜகவைப் பொறுத்தவரை மோடி, அமித்ஷா ஆகியோர் மாநிலத்திற்கு வந்து பிரசாரம் செய்தும் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது. இத்தனைக்கு்ம் பத்து இடங்கள் வென்றால் போதும் என பணம், தேவையான வசதிகளை கொண்டு வந்து குவித்தனர். ஆனாலும் கூட பினராயி விஜயனின் முன்னர் எதுவுமே எடுபடவில்லை.
இடதுசாரி கட்சி வென்றதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
பேரிடர் மேலாண்மையில் கெட்டி
2017ஆம் ஆண்டு இடதுசாரி அரசு ஓக்கிபுயலை வெற்றிகரமாக சமாளித்தது. அடுத்த ஆண்டு இரண்டு புயல்களை சமாளிக்கும் சிக்கல் உருவானது. அசரவேயில்லை. அடுத்த பிரச்னையாக நிபா வந்தது. அதைப் பயன்படுத்தி கொரோனாவை எப்படி சமாளிப்பது என கற்றுக்கொண்டதோடு அரசு மருத்துவமனைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி விட்டனர். மேலும் பொதுமுடக்கத்தில் அனைத்து ரேஷன் கார்டுதார ர்களுக்கும் இலவச உணவுப்பொருட்களை வழங்கினர். உணவின்றி யாரும் தவிக்காதபடி உணவுகளை தயாரித்து அரசே விநியோகித்து மக்களின் பசியாற்றியது.
முதலீடு
கல்வி, சுகாதாரத்துறையில் அதிக முதலீடுகளை இடதுசாரி அரசு செய்துள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்டமாக 5.4 மில்லியன் மக்களுக்கு மாதம்தோறும் 1600 ரூபாயை அரசு வழங்குகிறது.
வெள்ளம் பாதித்த ஏழை மக்களுககு அரசு இலவச வீடுகளைக் கட்டித் தருகிறது.
நடவடிக்கை
தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் முதன்மை செயலாளர் சிவசங்கர் குற்றம்சாட்டப்பட்டார். அவரை தயக்கமின்றி கைது செய்து சிறையில் அடைத்தார். இது அவரின் அரசுக்கு சங்கடம் கொடுத்தாலும் கூட தேர்தலில் பாதிப்பு இல்லாதபடி பார்த்துக்கொண்டது அவரின் சாமர்த்தியம்.
இந்தியா டுடே
ஜீமன் ஜேக்கப்.
கருத்துகள்
கருத்துரையிடுக