பள்ளிக்காலத் தோழியைத் தேடி அலையும் கஞ்சத்தனமான தொழிலதிபரும், பிடிஎஸ்டி காதலியும்! - மை கேர்ள்
மை கேர்ள்
சீன டிவி தொடர்
எல்எஸ் என்ற அழகுசாதன நிறுவனத்தை நடத்தும் கஞ்சத்தனமான தொழிலதிபருக்கு பிடிஎஸ்டி பிரச்னை கொண்ட காதலி கிடைக்கிறார். இதனால் அவரது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை.
கொரிய, ஜப்பானிய, சீன தொடர்களில் சீரியசாக செல்லும் காட்சிக்ளில் கூட ஜிலீர் காமெடி வந்துவிடுகிறது. இதனால், தொடரை பெரிதாக வருத்தப்பட்டு பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதில்லை. எது நடந்தாலும் லாஸ்டில் சுபமாக முடிச்சுருவாங்கப்பா என நிம்மதியாக பார்க்கலாம். மை கேர்ள் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஷென் யி, மென் குயி என்ற இரண்டு பள்ளிப்பருவத் தோழன், தோழி இருக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். அப்போது ஷென் யி வறுமையான நிலையில் இருக்கிறார். இதனால் பள்ளி பேக் கூட வாங்கமுடியாத நிலை. அவரது அம்மா, தந்தையை விட்டு பிரிந்து வந்து தனியாக வாழ்கிறார். அவர் நோயாளியும் கூட . ஷென் யிக்கு மதிய உணவு கூட ஒரே மாதிரியாகத்தான் வீட்டில் செய்து தருகிறார்கள். அவனுக்கு தனது தட்டில் இருந்து உணவை எடுத்து கொடுக்கிறாள் மென் குயி. இப்படித்தொடரும் இவர்களது உறவு பள்ளி மாணவர்கள் சிலர் ராகிங் செய்வதால் கெட்டுப்போகிறது. குறிப்பிட்ட சம்பவத்தால் ஷென் யி வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறான். அவனது பெயரும் மாறுகிறது. மென் குயினின் வாழ்க்கையும் ஏராளமான சங்கடங்களை சந்திக்கிறது.
ஷென் யி இப்போது பெரிய தொழிலதிபர், தனது தந்தையை சந்திக்காமல் தனக்கென தனி நிறுவனம் தொடங்கி நடத்துகிறார். அதனை தனது பள்ளிப்பருவத் தோழிக்காகவே நடத்துகிறார். இவரது வியாபாரம் முழுக்க எலைட் மக்களுக்கான அழகு சாதனப் பொருட்கள்தான். தழும்புகளை மறைக்கும் க்ரீம் தயாரிப்புதான் இவரது லட்சியம். இதற்கு மட்டுமல்ல தனிப்பட்ட விஷயங்களுக்கும் உதவ காஸ்மெடிக் மருத்துவர் சுயி ஆன் உதவுகிறார். இவர் தான் வாங்கும் அனைத்து பொருட்களையும் இரண்டாகவே வாங்குகிறார்.. ஒன்று இவருக்கு, மற்றொன்னு அன்பு நண்பன் ஷென் யிக்கு.
ஷென் யிக்கு தான் சிறுவயதில் செய்த செயல் காரணமாக குற்றவுணர்ச்சி எப்போதும் இருக்கிறது. முகத்தில் தழும்பு உள்ள பெண்களை எப்போதும் பரிவுடன் அணுகுகிறார். அவர்களை யாரேனும் கிண்டல் செய்தால் அதனை பொறுத்துக்கொள்வதில்லை. ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதுதான் முக்கியமான ட்விஸ்ட். மொத்தம் இருபத்து நான்கு எபிசோடுகள். இருபது எபிசோடுகளிலேயே முடியவேண்டிய கதை. கடைசி நான்கு எபிசோடுகளில் ஜவ்வாக இழுத்துள்ளனர்.
இதில் ஷென் யின் பாத்திரம் ஆச்சரியப்படுத்துகிற ஒன்று. தனது தாய் வாழ்ந்த வீட்டில் எளிமையாக வாழ்பவர். தான் வாங்கும் பொருட்கள், பணியாளர்களுக்கு வாங்கும் பொருட்கள் அனைத்துமே சூப்பர் மார்க்கெட்டில் ஆபருக்கு வாங்கியவை. ஹோட்டல்களில் மீட்டிங் நடத்தினால் கூட ஆபர் அதிகம் கொடுக்கும் உணவகங்களை மட்டுமே தேர்வு செய்து அனைவரையும் கடுப்பேற்றுகிறார். மேலோட்டமாக பார்த்தால் ஏன் இந்த கஞ்சத்தனம் என தோன்றும். அதற்கான காரணத்தை அவர் சொல்லும்போது, மனிதர் எவரெஸ்ட் அளவுக்கு உயர்ந்துவிடுகிறார்.
மென் குயியைப் பொறுத்தவரை அவளது அம்மா, அப்பா இருந்தாலும் கூட அவர்களோடு வாழ முடியவில்லை. அதற்கு காரணம் அவளது பிடிஎஸ்டி வியாதி. யாராவது திட்டினால், அவளது முகத்தில் உள்ள தழுப்பை பார்த்து முகம் சுளித்தால் கூட அவளது ஆளுமை மாறிவிடும். முதலில் பயந்தவளாக,மென்மையாக பேசுபவள் திடீரென துணிச்சலாக, அதிரடி முடிவுகளை எடுப்பவளாக மாறுகிறாள். பிடிஎஸ்டி நிலையில் இருக்கு்ம்போது, டிவி ஷோ ஒன்றுக்கு மேக்கப் ஆர்டி்ஸ்டாக வேலைக்கு சேர்கிறாள். அதோடு சமூக வலைதளத்தில் மேக்கப் பொருட்களை இன்புளூயன்சராக விற்கும் வேலையையும் செய்கிறாள். இவள் மேக்கப் போடும் பெண், ஷென் யியின் முன்னாள் காதலி. அவர்களது பொருளின் மாடலும் கூட. கூடவே டிவி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் ஷென் யிதான். அங்கு இருவரும் சந்தித்துக்கொள்ள ஷென் யி, மெல்ல மென் குயி மீது ஈர்க்கப்படுகிறான். மென் குயியைப் பொறுத்தவரை பலாபலன்கள் இல்லாமல் காதலிப்பது முக்கியம் என நினைக்கிறாள். ஷென் யியைப் பொறுத்தவரை அனைத்திற்கும் ஏதாவது பலன் இருக்கவேண்டும் என நினைப்பவன். கூடவே தனது பள்ளித்தோழியைக் கண்டுபிடித்து தவறுக்கு பிராயச்சித்தமாக திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். எனவே மென் குயியை காதலிக்கலாம் என நினைக்கும்போது அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறதா, காதல் உணர்வா என்பதை அடையாளம் காண முடியாமல் தடுமாறுகிறான்.
ஷென் யி மென் குயி ஆகிய இருவருக்கும் நண்பர்களாக ஜியாங், டாவோ, மாடல் தோழி, காஸ்மெடிக் டா்க்டர் ஆகியோர் இருக்கின்றனர். ஷென் யி உண்மையில் தனது பள்ளித்தோழியைக் கண்டுபிடித்தானா, மென் குயிடம் தனது காதலைச் சொன்னானா, டாக்டர் சுயி ஆன் எதற்கு கஞ்சத்தனமான நண்பனிடம் அந்தளவு பரிவாக நடந்துகொள்கிறான், எல்எ்ஸ் கம்பெனி தழும்பை மறைக்கும் களிம்பை கண்டுபிடித்தார்களா என்பதுதான் இறுதிக்காட்சி.
ஜியாங் பாலைக் குடித்துவிட்டு உளவியல் டாக்டர் தாவோவிடம் காதல் சொல்லும் காட்சி , மென் குயி ஷென் யிடம் காதல் வேறு கருணை வேறு என உணர்வுப்பூர்வமாக பேசுவது, மூக்குடைந்த மாடல் பெண்ணுக்காக தனது தழும்பு அறுவை சிகிச்சையை மென் குயி வேண்டாம் என்று சொல்லுவது, ஒன்றாக வசிக்க ஷென் யி, மென் குயி திட்டமிடும்போது என்னென்ன நடக்கும் என மாடல் தோழி குறுஞ்செய்தி அனுப்புவதும் அது அப்படியே நடப்பதும், அப்பாவும், மகனும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேர்வதும், பேசிக்கொள்வதும், மென்குயி பஸ் ஸ்டாப்பில் குடும்பம் ஒருவருக்கு எவ்வளவு அவசியம் என்று கூறுவதும் என நிறைய காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயம் முடிந்தபிறகும் மேக்கப் விஷயங்களை வைத்தே ஒரு தத்துவத்தை மென் குயி குரலில் சொல்லுவது அருமை.
மேக்கப் தழும்பை மறைக்கும். ஆனால் அன்பு அதனை குணமாக்கும்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக