பேருந்து விபத்தில் இறந்தவனின் முடிவு தற்செயலானதா? - ஆராய்ந்து நீதியை நிலைநாட்டும் கணேஷ் வஸந்த் - நிஜத்தைத் தேடி - சுஜாதா
நிஜத்தை தேடி
சுஜாதா
விசா பதிப்பகம்
ப.112 ரூ. 55
சுஜாதா எழுதி பல்வேறு மாத, வார இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. அவரின் எழுத்தில் அனைத்து கதைகளுமே படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன. இதில் விதி என்ற கதை மட்டுமே குறுநாவல் எல்லையைத் தொடுகிறது. பிற கதைகள் அனைத்துமே சுவாரசியமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன. விதி கதை, சுஜாதாவின் ஆஸ்தான கணேஷ் வஸந்த் துப்பறிகிறார்கள். பெங்களூரு செல்லும் பஸ்ஸில் தாமோதர் என்பவர் திடீரென புக் செய்து பயணப்படுகிறார். ஆனால் பஸ் திடீரென விபத்தாகி பலரும் உயிரிழக்கின்றனர். இந்த நேரத்தில் கணேஷ் தனது வேலையில் முழ்கியுள்ளான். அப்போது அவனை சந்திக்க வரும் பெண்மணி, தாமோதர் இறங்கிய உணமையை விசாரிக்க வேண்டும் என்கிறாள். உண்மையில் பஸ் விபத்து என்பது தற்செயலா, திட்டமிட்டு தாமோதர் கொல்லப்பட்டாரா எ்ன்பதை வஸந்த் சரச சல்லாப குணத்துடன் எப்படி கண்டுபிடிக்கிறார். அதற்கு கணேஷ் எப்படி திருப்புமுனையாக உள்ளார் என்பதை விளக்குகிறது கதை.
இதுதவிர பிற கதைகள் அனைத்து சிறு திருப்புமுனைகளுடன் எழுதப்பட்ட கதைகள்தான் ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும் கதை வித்தியாசமானது. இதில் பிக்பாக்கெட்டாக உள்ளவரை கள்ளக்கடத்தல் செய்பவர் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். ஆனால் பிக்பாக்கெட் ஆள், தான் செய்த சிறுபிள்ளைத் தனத்தால் தனக்கு நேர்ந்த அவமானத்தை மனத்தில் நினைத்துக்கொண்டே இருக்கிறார். அவர் எப்படி தனது பழிவாங்குதலை செய்கிறார் என்பதுதான் சிறுகதையின் இறுதிப்பகுதி.
மறுபடி சிறுகதை, அறிவியலை அடிப்படையாக கொண்டது. உளவியல் பூர்வமான கதை வாசிக்க சுவாரசியமாக உள்ளது. ஹிப்னாடிசம் செய்யப்பட்ட பெண்ணை அவளது காதலன் எப்படி மீண்டும் காதலிக்கிறான் என்பது பல்வேறு ட்விஸ்டுகளைக் கொண்டது. சவிதாவை எப்படி மீட்பான் என்று நினைக்கும்போது நாயகன் செய்யும் முடிவு காதலை இழந்த இழப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் முடிவு. யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மனிதனின் செயலும் இயற்கையு்ம் இறுதிப்பகுதியில் போட்டியிடுகின்றன. இதில் யார் வென்றது என்பதுதான் இனிமையான இறுதிப்பகுதி.
குமாரசுவாமி ஒரு சோசலிஸ்ட் கதை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் நடக்கும் ஒன்றுதான். அதனை படிக்க சுவாரசியமாக மாற்றுவது மனித மனத்தின் சபல உணர்வுதான். உடனடியாக பயன் கிடைக்கும் விஷயங்களை மட்டும்தான் மனிதர்கள் விரும்புகிறார்கள். அதற்கு செய்யும் தில்லுமுல்லுகளும் ஏற்படும் இழப்புகள் ஆயுளுக்கும் ஈடுகட்ட முடியாதவை. ஆனால் மனத்தை எல்லோராலும் கட்டுப்படுத்த முடிவதில்லையே.
இப்படித்தான் காதலிக்கிறார்கள் கதை, முழுக்க பெண்களின் மீது காம வேட்கை கொண்டவனின் வாழ்க்கை எப்படி நாசமாகிறது என்பதை பகடியாக விவரிக்கிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல் மனம் எப்படி தனது ஆசையை நிறைவேற்றும் விதமாக பாய்கிறது என்பதை இக்கதை படித்து தெரிந்துகொள்ளலாம். ஒரு பெண்ணை காதலிப்பவன், அவள் கிடைத்தாலும் கூட அமைதியடையாமல் மீண்டும் அலைபாய்வதுதான் முக்கியமான பகுதி.
சுவாரசிய பயணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக