பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுமிகளை மீட்கும் பெண்மணி! - சோனல் கபூரின் மகத்தான சாதனை

 




சோனல் கபூர், பிராட்சகான் இந்தியா பௌண்டேஷன்





இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட சோனல் கபூரால் அந்த நாட்களை மறக்கமுடியவில்லை. அந்த நாட்கள் என்று சொல்லுவது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவம்தான். அப்போது சோனல் கபூர் குடிசைப்பகுதிக்கு தனது விளம்பர பணி காரணமாக சென்றிருந்தார். அங்குதான் ஒரு பெண்ணை சந்தித்தார். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். இத்தனை குழந்தைகள் இருந்தால் இவர்களுக்கான உணவிற்கு என்ன செய்வது? வறுமையில்தான் இருந்தார்கள். 

வேறு வழியில்லாத அந்த தாயார் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தார். இதைப் பார்த்த சோனல் கபூர் அதிர்ந்து போனார். இப்படியெல்லாம் நடக்குமா என்றவர், அதை சரி செய்ய முயன்றார். இதற்காகவே மும்பையின் சேரி பகுதியில் திறன்களை வளர்ப்பதற்கான ஒற்றை அறை கொண்ட அலுவலகத்தை தொடங்கினார். இதன் மூலமே ஏராளமான சிறுமிகளை பாலியல் தொழிலிலிருந்து மீட்டு சமூகத்தில் பொறுப்பான பகுதியில் வாழும்படி செய்திருக்கிறார். இப்படித்தான் பிராட்சகான் இந்தியா என்ற அமைப்பு உருவானது. இதன் மூலம் 81 ஆயிரம் ஏழை சிறுமிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். 


சோனல் கபூர், மும்பை


நீங்கள் கேட்ட சம்பவம் நடைபெற்று பனிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் நான் என்ன செய்யவேண்டும் என்பதை அதுவே எனக்கு எப்போதும் நினைவூட்டியபடி உள்ளது என்றார் சோனல். 

பள்ளிப்படிப்பு என்பது குழந்தைகளுக்கு முக்கியம் என்பதை சோனல் ஒப்புக்கொண்டாலும், சேரிப்பகுதியில் வாழும் பல குழந்தைகள் மோசமான வன்முறை, வறுமையை சந்தித்து வருவதை உணர்ந்திருக்கிறார். எனவே, அவர்களுக்கு தொழில் திறன்களையும் வளர்க்க முயற்சி செய்து வருகிறார். இதனால் அவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் கலை, தியானம் கற்றுத் தருவது, திரைப்படம் இயக்குவது, கணினி வகுப்புகள், மண்டலா கலை வகுப்பு என பல்வேறு வகைப்பட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதுபோன்ற கலைகள் அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வை வழங்குவதோடு அவர்களது வாழ்க்கையையும் காப்பாற்றும் என்றார் சோனல். 

தான் விரும்பும் மாற்றம் ஏற்பட்டால் தனது தன்னார்வ நிறுவனம் கூட செயல்படத் தேவையில்லை என நம்புகிறார் சோனல். பெருந்தொற்று காலத்தில் பல்வேறு ஏழை மக்களின் உணவு, மனநலப் பிரச்னைகளுக்கு இவரது குழு உதவிகளை வழங்கியிருக்கிறது. 2030க்குள் பத்து லட்சம் சிறுமிகளுக்கு உதவிகளை வழங்குவதுதான் சோனலின் திட்டமாக உள்ளது. 


சோனல் கபூர் மும்பை சேரிப்பகுதி குழந்தைகளுடன்


தான் செய்வது இரக்கப்பட்டு அல்லது சேவை என்று யாரும் நினைக்கவேண்டாம். நான் பிறர் மீது கொள்ளும் அக்கறை என்பது எனக்காக நானே செய்துகொள்வது போன்றுதான் உணர்கிறேன். உதவி தேவைப்படுபவரை கண்ணோடு கண் பார்த்து உதவி செய்வது எனக்கு நானே உதவுவது போல தோன்றுகிறது. இது வெறும் தற்செயலாகவோ, அதிர்ஷ்டத்தாலோ நடைபெறவில்லை என்கிறார் சோனல் கபூர். 

இவர் சந்தித்த அனுபவங்கள் இந்தளவுக்கு அவரை பக்குவப்படுத்தும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாதுதானே?

ரீடர்ஸ் டைஜெஸ்ட்

சரிதா சந்தோஷினி 

அமைப்பு பற்றி மேலும் தகவல்களை அறிய.....

https://protsahan.co.in/



கருத்துகள்