கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!
கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு!
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற ஒளி ஊடுருவும் தன்மையில் இருக்கும் மர இழைகளை உருவாக்கியுள்ளனர்.
தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.
அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே ஒளி ஊடுருவும் மர இழைகளை சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும்.
கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ் ஆகிய வேதிப்பொருட்கள்தான். லிக்னினில் உள்ள குரோமோபோர் என்ற அணுக்கள்தான் ஒளியை உள்ளிழுத்துக்கொள்கின்றன. இவைதான் மரத்திற்கு பழுப்பு நிறத்தை தருகின்றன. மரத்தின் இழைகளில் செல்லுலோஸ் உள்ளது. இதுவே, ஒளியை மரம் ஊடுருவிச்செல்லாமல் தடுத்து, அதனை ஈர்த்துக்கொள்கிறது. இதனால், அதன் எதிரொளிப்புத்தன்மை குறைகிறது.
மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பால்சா மரத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடை செலுத்தி, புற ஊதாக்கதிர்களை ஒருமணிநேரம் பாய்ச்சினர். இதன் காரணமாக, மரத்தின் இழைகள் மெல்ல வெள்ளைத் தாளைப் போல மாறின. ஆனாலும் கூட குரோமோபோர் வெளிச்சத்தை உள்வாங்கும் செயல் நடைபெற்றது. இதனைக் குறைக்க ரெசினைப் மரத்தின் இழைகளில் பயன்படுத்தியபோது, ஒளியை உள்ளிழுக்கும் பண்பு குறைந்தது. இந்த வகையில் மரத்தின் ஒளி ஊடுருவும் தன்மை 90 சதவீதமாக மாறியது. இந்த கண்டுபிடிப்பு சாதனையை மட்டுமே வைத்து உடனே கண்ணாடிக்கு மாற்று கிடைத்துவிட்டது என்று கூறிவிட முடியாது. கண்ணாடியைப் போல பல்வேறு அளவுகளில் மரத்தின் இழைகளை உருவாக்கிப் பயன்படுத்த முடியுமா என்று அறிவதில்தான் சவால்கள் உள்ளன. மற்றபடி, ஒளியை ஓரளவுக்கு கடத்தும் என்பதால் கட்டுமானங்களில் இதனை பயன்படுத்த முடியும்.
ஒளியை ஊடுருவும் தன்மை கொண்ட மர இழைகளை முதன்முதலில் உருவாக்கியது மேரிலேண்ட் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல. ஆனால் இவர்களின் புதிய முறை சூழலியலாளர்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. முதலில் பயன்படுத்தப்பட்ட முறைகளில் லிக்னைனை முழுமையாக நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரெசினைப் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இது மெதுவான செயல்முறை என்பதோடு, வேதிப்பொருட்களின் பயன்பாட்டினால் பாதிப்பும் கூடுதலாக இருந்தது. புதிய முறையில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக மரத்தை பயன்படுத்தும்போது வீட்டின் வெப்பத்தை சீராக வைத்திருக்க முடியும். மேலும் கட்டுமானத்தை பசுமைக் கட்டடமாகவும் உருவாக்கலாம்.
தகவல்
science illustrated 2021
Transparent wood is a green alternative to glass
science illustrated australia 2021
image
https://www.cbc.ca/radio/quirks/scientists-develop-transparent-wood-that-is-stronger-and-lighter-than-glass-1.5902739
----
கருத்துகள்
கருத்துரையிடுக