குழந்தைகளின் இறப்பை மறைத்தவர்களுக்கு பரிசுகள் கிடைத்தன! - மருத்துவர் காஃபீல் கான்

 







மருத்துவர் காஃபீல் கான்


மருத்துவர் காஃபீல் கான்

உத்தரப் பிரதேசத்தில் பணிபுரிந்த மருத்துவர். ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறிய குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக சிலிண்டர்களையும் சொந்தசெலவில் ஏற்பாடு செய்தார். இதனால் மக்களின் நாயகன் ஆனார். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவர் மீது குற்றம் சுமத்தி சிறையில் தள்ளினார். இவரது குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டத் தொடங்கியது. தற்போது சிறைவாசம் மீண்டு வந்தவர், சம்பவம் பற்றிய நூலை எழுதியுள்ளார். 

கோரக்பூர் சம்பவம் எப்படி நடந்தது? ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் அங்கு குழந்தைகள் இறந்துகொண்டே இருப்பது இயல்பானது என்கிறார்களே?

புஷ்பா சேல்ஸ் என்ற நிறுவனம், முதல்வர், செயலாளர் ஆகியோருக்கு பதினான்கு கடிதங்களை எழுதியது. ஆனால் அவர்கள் யாருமே அதனை கண்டுகொள்ளவில்லை. பணத்தை சரியான நேரத்திற்கு கொடுத்திருந்தால் இப்படியொரு பிரச்னை வந்திருக்காது.  2017ஆம் ஆண்டு ஆகஸ்டில் பணம் பட்டுவாடா ஆனது. அதே ஆண்டில்தான் உ.பி மாநில அரசு சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடை 50 சதவீதமாக குறைத்தது. 

குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகிறார்கள் என்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க முடியாது. ஒவ்வொரு உயிரும் மதிப்பானதுதான். அனைத்து நோயாளிகளும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் இறக்கிறார்கள் என்று சொல்லுவது கூட தவறு. வதந்தி என்பேன். பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகளில் 70 சதவீதப் பேர்தான் அன்று இறந்துபோனார்கள். இவர்கள் பிறந்து 54 மணிநேரம்தான் ஆகியிருக்கும். 

பிற குழந்தைகளுக்கு வயது ஆறுமாதம் கூட ஆகியிருக்காது. எந்த குழந்தையும் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் இறக்கவில்லை. அவர்கள் அனைவருமே தேவையான ஆக்சிஜன் இல்லாமல்தான் இறந்தார்கள். பெரியவர்கள் பதினெட்டு பேரும் கூட இதேபோலத்தான் செயற்கை சுவாசம் கிடைக்காமல் இறந்துபோனார்கள். 

மெடிக்கல் சூப்பரிடெண்ட் டாக்டர் ராமசங்கர் சுக்லா, மேலாண்மையாளரான டாக்டர்  சதிஷ் குமார் ஆகியோர் சொல்லும் விஷயங்களை விட மாறுபட்ட விஷயங்களை சொல்லுகிறீர்களே?

என்னுடைய துறைத்தலைவர் மஹிமா மிட்டலுக்கு ஆகஸ்ட் பத்து அன்றே ஆக்சிஜன் குறைவாக உள்ளது என கடிதம் கிடைத்தது. ஆனால் அவர் அந்த எச்சரிக்கையை புறக்கணித்துவிட்டார். சுக்லா, கடிதத்தை கல்லூரி முதல்வருக்கு அனுப்பிவிட்டு தனது மகனைப் பார்க்க மும்பைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பிரிவுக்கு அவர் வந்து பார்க்கவே இல்லை. நான் அவரை போனில் அழைத்தபோது, அவர் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.இவர்களின் பொறுப்பின்மையால்தான் குழந்தைகள் இறந்துபோனார்கள். அச்செய்தி தேசிய ஊடகங்களில் முக்கியமான செய்தியாக இடம்பிடிக்க இவர்களே காரணம். 

நீங்கள் எழுதிய நூலில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் பற்றி சொல்லுகிறீர்கள். ஆனால் மாவட்ட நீதிபதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு மருத்துவமனையில் ஏற்படவில்லை என்கிறாரே? 24 மணிநேரத்தில் 23 குழந்தைகள் பலியானது எப்படி?

இல்லை. மாவட்ட நீதிபதி பேட்டி கொடுத்தது மதியத்தில்தான். அப்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்கிறதென கூறியவர், வேறு இடங்களிலிருந்து அதனை பெற்று கொடுப்பதாக சொன்னார். இவர் மட்டுமல்ல கமிஷனர் கூட ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி அறிக்கை கொடுத்திருக்கிறார். 

மாலையில் மாவட்ட நீதிபதி, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றிய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். திரவ ஆக்சிஜனே மருத்துவ கல்லூரியில் 50 மணிநேரங்களுக்கு இல்லை என்பதே உண்மை.

உங்களை நாயகனாக சொன்னவர்கள், எப்படி மோசமானவர் என்ற முடிவுக்கு வந்தனர்?

அது உண்மைதான். ஆகஸ்ட் 10 தேதி தொடங்கி  பதிமூன்று வரை ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, அதை தீர்க்க நான் எடுத்த முயற்சிகள் என செய்திகளை ஊடகத்தில் பார்த்தேன். பிறகு பதிமூன்றாம் தேதியில் அனைத்தும் மாறிவிட்டது. நடந்த குழந்தைகளின் இறப்புக்கு பலியாட்டை மாநில அரசு தேடியது. அந்த நேரத்தில் என்னை முதல்வர் பயன்படுத்தி தப்பிவிட்டார். 

பிரதமர் மோடி சப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து குழு ஒன்றை அனுப்பியிருந்தார். கூடவே பாஜக தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் யோகி வந்தனர். தேசிய ஊடகங்கள் உ.பிக்கு வந்து என் தரப்பு விஷயங்களை கேட்கவே இல்லை. யோகி , நீ சிலிண்டர் பெற்று குழந்தைகளை காப்பாற்றினால்  ஹீரோ ஆகி விடுவாயா? இது என்னுடைய கோரக்பூர் என மிரட்டினார். சமூக வலைத்தளத்திலும் போலி, அவதூறு வசை செய்திகளை எனக்கெதிராக பரப்பினார். நான் மருத்துவமனை சிலிண்டர்களை திருடி என்னுடைய கிளினிக்கிற்கு பயன்படுத்தினேன் என்ற குற்றம் சாட்டினர். குழந்தைகள் இறப்பை மறைத்தவர்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு பரிசுகளைக் கொடுத்தது.  மஹிமா மிட்டல் என்ற எனது துறை தலைவர், இன்று எய்ம்ஸில் குழந்தைகள் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். யாரும் அவரைக் கேள்வி கேட்கவில்லை. 

ஃபிரண்ட்லைன்

ஜியா அஸ் சலாம் 




கருத்துகள்