பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

 













புதிய கற்பித்தல் முயற்சி!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். 

பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.  

தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே க்யூஆர் கோடுகளைப் பயன்படுத்துவது மட்டுமே அவர்கள் கல்வி கற்பதற்கான ஒரே வாய்ப்பாக இருந்தது. இதனைத் திட்டமிட்டு, பள்ளியில் படிக்கும் மாணவர்களை குறிப்பிட்ட அளவில் வரவைத்து கல்வி கற்றுத்தந்தார். மீதமுள்ள நபர்களை அடுத்தடுத்த நாள்களில் பயிற்றுவித்தார். இதனால் மாணவர்களுக்கு தேர்வு பயம் குறைந்தது.  

ஹரிஸ்வாமி தாஸின் தலைமையில் சோவநகர் பள்ளி பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கூடவே, மற்றொரு சாதனையாக  2019ஆம்ஆண்டு ஜாமினி ராய் விருது பெற்றுள்ளது. இந்த விருதை யுனிசெஃப் அமைப்பு வழங்குகிறது. 

பள்ளிக்கட்டடம், மரங்கள், நீர்த்தொட்டி, மாடித்தோட்டம், மழைநீர் சேகரிப்பு என அமைத்துள்ள அனைத்து விஷயங்களையுமே கற்பித்தலுக்கானதாக மாற்றியுளார் தாஸ். “எங்கள் பள்ளி வளாகத்திலுள்ள மருத்துவ தாவரங்களை எளிதாக அறியும்படி க்யூஆர் கோடை உருவாக்கியுள்ளோம். நீர்த்தொட்டியை உலகம் போல அமைத்து அதில் உலக நாடுகளின் வரைபடத்தை அச்சிட்டுள்ளோம்” என்றார் தலைமை ஆசிரியர் ஹரிஸ்வாமி தாஸ். இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் மாணவர்கள் சாதிக்க வானமே எல்லைதானே? 

தகவல் 

Indiatoday

teaching the right lessons

romita datta

8 nov 2021

------------------------

pinterest 

கருத்துகள்