இந்தியாவை பற்றிய வெளிப்படையாக கருத்துகள்! - சூப்பர் ஸ்டார் இந்தியா! - ஷோபா டே

 



ஷோபா டே





இந்தியா சூப்பர்ஸ்டார்

ஷோபாடே

பெங்குவின் 

350 ரூபாய்



பழைய அட்டை



ஷோபா டே இந்தியாவில் வெளியாகும் தேசிய நாளிதழ்களில் ஏராளமான பத்திகளை எழுதியுள்ளார். இவரின் எழுத்து விசேஷம் என்னவென்றால், சீரியசாக போகும் ஆங்கில கட்டுரையில் திடீரென இந்தி வார்த்தைகளை புகுத்தி எழுதுவதுதான். மேலும் கட்டுரை இப்படித்தான் இருக்கவேண்டுமென்று விதிகள் இல்லாமல் மெல்லிய நகைச்சுவையுடன் எழுதுவார்.

கட்டுரை முழுக்க இந்தியாவைச் சார்ந்தது. இதில் இந்தியாவின் தன்மை, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். இதனை நானூறு பக்கங்களுக்கு படித்துவிட்டு பிறகு கடைசி மூன்று பக்கங்களில் இந்தியாதான் எனது தாய் நாடு, அதனை நேசிப்பேன் என்று எழுத்தாளர் சொல்லுவது நம்பகத்தன்மையாக இல்லை. 

ஆனாலும் நூலை எதற்கு வாசிக்க வேண்டும்? இந்தியாவை புரிந்துகொள்ள என இந்தியா டுடே மாதிரி தான் சொல்லவேண்டும். இந்தியாவில் நிலவும் கலாசாரம், பெண்களை வெறித்துப் பார்ப்பது, அவர்களிடம் மோசமாக நடந்துகொள்வது, வல்லுறவு, பிச்சை எடுப்பது, ஐடி கலாசாரம் புனே நகரை மாற்றி வருவது, வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் செல்வது, அரசியலில் பெருகும் ஊழல், தான் வாங்கிய கார், அதற்கான உழைப்பு, இன்றைய நவீன காலத்தில் பணத்திற்கான மதிப்பு என பல்வேறு விஷயங்களை தனக்கான மொழியில் பேசி செல்கிறார் ஷோபா டே. 

தன்னிடம் மோசமாக பஸ்சில் நடந்துகொண்டவனை எதிர்கொள்ள தடுமாறி பிறகு அதனை தட்டிக்கேட்பது, தனது மகள்களுக்கு அதேபோல உரசல் நிகழ்ச்சி நடக்கும்போது கோபமாகி சீறுவது என சம்பவங்களை உணர்ச்சிகரமாக விவரிப்பது நன்றாக இருக்கிறது. 

மாயாவதியை ஷோபா அந்த காலகட்டத்தில் எப்படி இந்திய பிரதமராக நினைத்துப் பார்த்தார் என்று புரியவில்லை. அவரும் அதை நியாயப்படுத்த சில காரணங்களை சொல்லுகிறார். ஆனால் அது பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை. உ.பியில் அவர் வென்று ஆட்சியை பிடித்தாலும் கூட அதுமட்டுமே இந்தியா அல்லவே? யூகம் செய்திருக்கிறார். ஆனால் இதனை இன்று படிக்கும்போது வினோதமாக இருக்கிறது. 

கட்டுரைகளில் தன்னை புனிதப்படுத்தி காட்டாமல் முடிந்தளவு நேர்மையாக எழுதியிருப்பதை வாசிப்பவர்கள் யாவரும் உணர முடியும். 

 ஷோபா டே எழுத்து, படிக்கும்போது வித்தியாசமாக இருந்தது. இடையில் திடீரென இந்தி கெட்டவார்த்தையை போட்டு எழுதுவார் என பத்திரிகையாளர் பா.பா முதலிலேயே சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தார். எனவே, இந்த நூலை வாங்குவதற்கான ஆர்வத்தை அவரே ஏற்படுத்தினார். 

கிராஸ்வேர்ட் கடையில் விலையைக் குறைக்காமல் ரூ.350 கொடுத்தே ஆகவேண்டும் என வாங்கியதுதான் வருத்தம். 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்