பத்ம விருதுகளைப் பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள் - சிறு அறிமுகம்
இந்தியாவில் உள்ள பத்ம விருதுகளுக்கு யாருடைய பெயரையும் யாரும் பரிந்துரைக்கலாம். இதற்கான குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றி அதனை கமிட்டி ஏற்றுக்கொண்டால் உள்துறை அமைச்சகம் இறுதிப்பட்டியலை வெளியிடும். விருதுகளை பெறுகிறவர்களை அமைச்சகம் போன் செய்து தகவல் தெரிவிக்கும். சிலர் அதனை ஏற்க மறுத்தால், அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களது பெயரை உள்துறை அமைச்சகம் விருதுப் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கிவிடும். இதுதான் நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
இப்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட சிலரைப் பற்றி படிக்கப் போகிறோம்.
கே வி ரபியா |
கே வி ரபியா 55
கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். கழுத்துக்கு கீழே உடல் இயக்கம் கிடையாது. இதனால் வீல்சேரில்தான் வாழ்கிறார். அப்படியிருந்தும் கூட பிறரைப் பற்றி யோசிக்கிறார் என்ற நோக்கில் விருதை அறிவித்திருக்கிறார்கள். பனிரெண்டு வயதில் போலியோ பாதிப்பு, புற்றுநோய் ஆகியவற்றைக் கேட்டு மனமொடிந்தவரின் உடலும் மெல்ல செயலிழந்து போனது. இதனால் அப்படியே கலங்கி நிற்காமல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முயன்று வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதற்கான ஆறு பள்ளிகளைத் திறந்துள்ளார். 250 பெண்களுக்கு சிறு தொழிலுக்கான பயிற்சியை வழங்கியுள்ளார். குடி அடிமைத்தனம், வரதட்சணை, ஆண் மேலாதிக்கம் ஆகிய விஷயங்களை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் போராடியுள்ளார். அவரது உழைப்பு பலருக்கும் நிறைய பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது.
சகுந்தலா சௌத்ரி |
சகுந்தலா சௌத்ரி,102
காந்தியத்தை பின்பற்றுபவர், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர் என சகுந்தலாவைப் பற்றி சொல்லலாம். குஜராத்தின் காம்ரூப்பைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர். காந்தி, வினோபா பாவே ஆகியோரின் கருத்துகளை எழுபது ஆண்டுகளாக பரப்பி வருபவர் என்று கூறுகிறார்கள். சமூக வேலைகளுக்காக வடகிழக்கு மாநிலங்களில் கிராம சேவை கேந்திரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன்மூலம் கிராமத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு உதவிகளை செய்து வருகிறார்.
திலீப் சஹாஹனி |
திலீப் சஹாஹனி 71
பொறியாளர், கல்வியாளர், தொழில்நுட்ப வல்லுநர் என்று திலீப்பை அழைக்கிறார்கள். இவர் தற்போது ஐஐடி டெல்லியில் பேராசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கியதில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் என்ற நோக்கில் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அமைப்பின் தலைவர், தொழில்நுட்ப வல்லுநர்கள் கமிட்டி தலைவர் என சில பதவிகளை இந்த வயதிலும் வகிக்கிறார்.
கலீல் தன்தேஜ்வி |
கலீல் தன்தேஜ்வி 86
குஜராத்தி கஜல் பாடல்களை பரவலாக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். அரை நூற்றாண்டாக இப்பணியை செய்து வருகிறார். கலீல் தனது வாழ்க்கையை பத்திரிகையாளராகவே தொடங்கினார். இவர் எட்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது நாவல்களை எழுதி தொகுத்திருக்கிறார். குஜராத்தி மொழியில் 20 திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். பொருளாதார போதாமையால் இவர் நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. எனவே தற்போது ஏழை சிறுவர்களுக்கு படிக்க பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குஜராத், உருது மொழியில் ஆளுமை மிக்கவர்.
ஹிமாத்ராவ் பவாஸ்கர் |
ஹிமாத்ராவ் பவாஸ்கர் 71
மருத்துவர்தான். தேள், பாம்பு கடிக்கு சிறப்பான சிகிச்சை செய்பவர். கிராமங்களில் மக்களுக்கு தேள், பாம்புகடிக்கு சிகிச்சை செய்து அவர்களை காப்பாற்றியவர் பவாஸ்கர். இவர் தனது ஆய்வில் கண்டுபிடித்த, பிராஸோசின் என்ற மருந்து பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றியது. இதனால் பலி எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைந்தது. இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக