அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

 



கடசீல பிரியாணி







கடசீல பிரியாணி


படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது. 

ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார். 






பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள். 

இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்கு அண்ணன்களின் கொலை செய்யும் சமாச்சாரத்தில் விருப்பமில்லை. 

தான் இதையெல்லாம் விட்டுவிட்டு அமைதியாக வாழ வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அது நம் கையில் மட்டுமா இருக்கிறது. சில விஷயங்கள் கைமீறி போக, கடைசி தம்பியின் கையிலும் ரத்தக்கறை படிகிறது. கூடவே அவரைக் கொல்லவும் சைக்கோ கொலைகாரன் சுற்றுகிறான். இதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதுதான் இறுதிக்காட்சி. 





படம் சுயாதீனப் படம். இதனை ஓடிடியில் வேண்டுமானால் பார்க்கலாம். தியேட்டரில் பார்ப்பதற்கான காட்சியமைப்புகள் உள்ளன. ஆனால் படம் தியேட்டரில் கொண்டாட்டத்துடன் பார்ப்பதற்கான தன்மையில் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளத்தின் காடுகள்,. சாலைகளில் தான் நடக்கிறது., 

ஒவ்வொருவருக்கும் வினோதமான பட்டப்பெயர்களை வைப்பது, எப்போதும் விறைப்பாக கோபத்துடன் நடப்பது, ஓடுவது, பேசுவது என மூத்த அண்ணன் பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதே வேகத்தில் முட்டாள்தனங்களையும் செய்கிறார்கள். இதுதான் படத்தின் முக்கியமான அம்சம். 




படத்தின் கதையை கடவுளின் குரல் போல விஜய் சேதுபதிதான் சொல்லுகிறார். இறுதியில் சிறு காட்சியில் அவர்தான் வருகிறார். வன்முறை எப்படி அதை கையில் எடுத்தவர்களையும் , அவர்களை சார்ந்தோர்களையும் பாதிக்கிறது என்பதை காட்சிபடுத்திய வகையில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். வன்முறையை அழகியலாக காட்டுவது கடினம். இதனையும் கரியா பாத்திரம் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இவர் மலையாளமும், தமிழுமாக பேசும் வசனங்கள் சிறப்பாக உள்ளன. சிக்கு பாண்டியை கொல்லுவதற்கு சொல்லும் காரணமும் முக்கியமான வசனம். 

வினோத ரத்த சரித்திரம்

கோமாளிமேடை டீம் 




கருத்துகள்